ஆடு புலி ஆட்டம்…

Posted on : 16-Oct-2026

இளைய தலைமுறை மீது இரக்கம் கொண்டு அவர்களை இயல்பு வாழ்க்கைக் கொண்டுவரத் துடிக்கிறது இச்சமூகம். அதுவும் கல்வித்துறை பள்ளிக் குழந்தைகள் மீது அக்கறை கொண்டு மாணவர்கள் இப்போது மனச்சிதைவுக்கு ஆளாகிறார்கள். ஆகவே அவர்கள் மீது மனம் இரங்குங்கள், அழைத்துப் பேசுங்கள், அருகில் வைத்துக் கொள்ளுங்கள், மனநல ஆலோசனை கூறுங்கள், ஒருவரையும் இழந்துவிடாதபடி ஊக்கம் ஊட்டித் திடப்படுத்தி வாழ வழிகாட்டுங்கள் என்று அறிக்கை வாயிலாக, கூட்டங்கள் வாயிலாக எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டே இருக்கிறது.

அழியாத செல்வம் ஒன்று உண்டு என்றால் அது கல்வி மட்டுமே! அதனை எப்படியாவது பிள்ளைகளுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று இந்தச் சமுதாயம் துடியாய்த் துடிக்கிறது. இதற்காகச் சிறந்த கல்வி நிறுவனத்தில் எப்படியாவது தன் குழந்தையைச் சேர்த்துவிட்டால் சிறந்த கல்வியும், உயர்ந்த வேலையும், கவலை இல்லாத வருமானமும் கைகளில் வந்து விழுந்துவிடும் என்று பெற்றோர்கள் பலர் கனவு காண்கிறார்கள். ஆனால் அறிவைத் தரும் என்று நினைத்த கல்வி இன்று மன அழுத்தத்தை கொடுத்து கொண்டு இருக்கிறது. மனனக் கல்வி இப்போது மரண பயத்தைக் காட்டிக் கொண்டு இருக்கிறது.

கல்வியை புரியாமல் மாணவர்கள் படிக்க, அதனைப் புரிய வைக்க ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்க, பிள்ளைப் பாசத்தால் பெற்றோர்கள் வெடிக்க, இது அமெரிக்கா, ஈரான் யுத்தத்தை விடக் கொடியதாய் இங்கு குரல்வளையை நெறித்துக் கொண்டிருக்கிறது. உயர் கல்வி நிறுவனங்களின் பிடியில் சிக்கிக் கல்வி என்ற காலனிடம் தோற்றுப்போய் தேர்விலும், மதிப்பெண்ணிலும் தோற்றுப் போனவர்கள் பிறரின் பேச்சுக்குப் பயந்து தமது மூச்சை நிறுத்திக் கொள்வது இப்போது தொடர்கதையாகி நம்மைத் தொந்தரவு செய்கிறது.

இதனால் மாணவர்கள் மீது அக்கறை கொண்டு இதனைப் பற்றி ஆய்வு நடத்த உச்ச நீதிமன்றம் ஒரு பணிக்குழுவை அமைத்தது. ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்தர பட் என்பவர் தனது குழுவோடு களத்தில் இறங்கினார். இக்குழு ஆறுமாதமாகப் பல்வேறு பள்ளிகளுக்குப் பயணம் செய்து மூன்று இலட்சம் மாணவர்களிடம் ஆய்வு நடத்தி ஒரு அறிக்கை வெளியிட்டார்கள்.

மாணவர்களுக்கு அதிகப்படியான கல்விச் சுமை! தண்டனை என்ற பெயரில் தனிமைப்படுத்தப்படுதல்! தாங்கள் பிரச்சனையை நிர்வாக ஆசிரியர்கள் நேர்மையாக அணுகும் என்ற நம்பிக்கை இன்மை! இயல்புக்கு மீறிய பள்ளிக்கட்டணம். அதனால் ஏற்படுகின்ற அவமானம் பெற்றோர்கள் கொடுக்கின்ற நெருக்கடி ஆசிரியர்கள், அதிகாரிகள் பாராட்டுச் சான்றிதழ் பெற மாணவர்களின் தகுதிக்கு மீறிய உழைப்பு ஆகியவை அவனுக்கு மன உழைச்சலைத் தந்து தற்கொலை எண்ணத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்க்கிறது. இதனால் கடந்த ஆய்வில் 9% மாணவர்கள் தாங்களுக்குத் தற்கொலை எண்ணம் வந்ததாகப் பதிவு செய்துள்ளார்கள். ஏறக்குறைய 20% மாணவர்கள் மன அழுத்தததில் இருப்பதாகவும் பதிவு செய்துள்ளார்கள். இதிலிருந்து மாணவர்களைக் காப்பாற்றத் துடிக்கின்ற கல்வித்துறை அதன் காரணத்தை மட்டும் ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறது? கண்டுபிடிக்க மறுக்கிறது?

கல்வி என்பது ஏதோ இப்போது தோன்றிய கற்பக விருட்சம் அல்ல. அது ஆதி தொட்டு குருகுலக் கல்வியில் தொடங்கி இன்று கணினிக் கல்வி Online Education வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ஆனால் இன்று அணுகுகின்ற கல்வி முறையில்! தோல்வியைக் கண்டு ஒடுகின்ற தாழ்வு மனப்பான்மை! கல்வி இல்லை என்றால் ஒன்றுமே இல்லை என்ற மனப்பான்மையோடு குழந்தைகளை நெருக்க, ஆசிரியர்கள் தவிக்க, பெற்றோர்கள் கலங்க, அதிகாரிகள் எல்லாம் தன்னை முன்னிலைப்படுத்த, அரசுத்துறை அடுத்தத் தேர்தலில் தனது ஓட்டு வங்கியைப் பெருக்கிக் கொள்ள என்று பிள்ளைகளை கல்வி என்ற ஆயுதத்தால் காயப்படுத்திக் கொண்டு இருக்கின்றோம். இது இன்று வரையறுக்கப்பட்ட வன்முறையாகக் காட்சியளிக்கிறது.

நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் நீங்களும் நானும் அந்த நெருக்கடி இல்லாத கல்வியைக் கற்றுத் தானே இந்த இடத்திற்கு வந்தோம். அதே இடங்களில் தானே இந்தத் தலைமுறை அமரப்போகிறது. நீங்கள் கொடுக்கும் கல்வி மட்டும் நிலவில் போய் இடம்பிடிக்கப் போகிறதா? இல்லையே! பிறகு ஏன் இவ்வளவு நெருக்கடி?

நான் கற்ற கல்வியும் அன்றைய சூழ்நிலையையும் கொஞ்சம் சொல்ல ஆசைப்படுகிறேன். நீங்களும் ஒருமுறை ஆய்வு செய்து பாருங்கள்! இந்த உண்மை புரியும்!

பள்ளிக்குப் போகும் போது பெற்றோரோ அல்லது மற்றோரோ, நம்மைப் பேருந்துகளிலோ, இருசக்கர வாகனங்களிலோ அழைத்துச் செல்வார்கள் என்று யாரையும் நம்பி இருக்காமல் நாமே பள்ளிக்குச் செல்வோம் அதனால் பொறுப்புணர்வு நமக்கு வந்தது!

நாம் பள்ளிக்குப்போன பிறகு நல்லது கெட்டது பற்றி பெற்றோர்கள் கவலைப்பட்டதே இல்லை எல்லாம் பள்ளியும் ஆசிரியர்களும் பார்த்துக் கொள்வார்கள் என்றிருந்தார்கள். எப்போதும் எதற்கும் பெற்றோர்கள் கவலைப்பட்டதில்லை. நாங்கள் படிக்காவிட்டால் பெற்றோர்களை ஆசிரியர்கள் திட்டுவதும் அடித்துவிட்டால் ஆசிரியர்களை பெற்றோர்கள் திட்டுவதும் கல்வித்துறைக்குள் எப்போது இந்தக் காட்டுமிராண்டித்தனம் நுழைந்தது?

பாஸ் அல்லது பெயில் அவ்வளவுதான் எங்களுக்குத் தெரியும். சதவீதக் கணக்குத் தேர்ச்சி வந்து நுழைந்து எல்லோரையும் சங்கடப்படுத்தும் சதியை செய்கிறது.

டியுசனுக்குப் போனால் அவமானமாக நினைத்தோம். ஆசிரியரிடம் கற்காதவன் முட்டாள் என நினைத்தார்கள். ஆனால் இன்று டியுசன் போய் பணம் கட்டிப் படிப்பதுதான் தன்மானம் என்ற தப்பாட்டத்தை யார் கொண்டு வந்தது?

புத்தகங்களில் மயில் இறகை வைத்து குட்டி போட வைத்த புத்திசாலிகள் நாங்கள். ஆனால் இன்று மனனம் செய்து மார்க் எடுப்பவன் மட்டும்தான் புத்திசாலி என்ற மடத்தனத்தை யார் கொண்டு வந்தது?

எங்களுக்கென்று புத்தகப் பையைத் தேடாமல் ஜவுளிக்கடை கொடுக்கும் மஞ்சள் பையில் புத்தகங்களை நேர்த்தியாக அடுக்கி பையின் காது அறுந்தாலும் முடிச்சுப் போட்டு சமாளிக்கும் திறன் பெற்றோம். இப்போது புத்தகப் பையைக் கூட சுமக்க முடியாமல் பெற்றோர்களை வேலைக்காரர்களாக வைப்பதும் பகட்டான பைகள் வாங்கி புத்தகங்களைப் பாதுகாக்கத் தெரியாத பைத்தியக்காரத்தனத்தையும் யார் கற்றுக் கொடுத்தது?

ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் புத்தகங்களைப் பத்திரமாக வைத்து படித்துவிட்டு பாதிவிலைக்கு விற்று அடுத்த ஆண்டு படிக்கும் மாணவர்களிடம் பாதி விலைக்குப் புத்தகங்களை வாங்கிப் படிப்போம். இதில் எங்களுடைய வீட்டின் வறுமை தெரியும். அதற்கேற்ப நடந்து கொள்வோம். இதற்காக நாங்கள் வெட்கப்பட்டது கிடையாது.

இதனால் எங்கள் பெற்றோர்களுக்கு எங்களது படிப்பு ஒருபோதும் சுமையாக இருந்தது இல்லை.

யாரிடமாவது கிடைக்கும் சைக்கிளோ அல்லது வாடகைச் சைக்கிளையோ காசு சேர்த்து வாடகைக்கு எடுத்து முன்னால் ஒருவனும் கேரியரில் ஒருவனை வைத்து ஊருக்குள் சுற்றிவருவதை உலக அதிசயமாக எண்ணினோமோ தவிர இருசக்கர வாகனம் வாங்கித்தரச் சொல்லி எப்போதும் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தியதில்லை.

தவறுசெய்யும் போது உக்கி போடுவதும், காதுகள் சிவக்கும்வரை திருகுவதும், கைகளில் பிரம்படி வாங்குவதும் எங்களது சுயமரியாதையை ஒருபோதும் புண்படுத்தவில்லை. காரணம் சுயமரியாதை என்றால் என்ன என்று எங்களுக்குத் தெரியாது. ஆசிரியரை பணிய வைத்ததுதான் அந்த மரியாதை வேண்டுமென்றால் ஆயுள் வரை அந்தக் கருமம் எங்களுக்கு வராமல் இருப்பதே நலம் என்றுதான் வாழ்ந்தோம்.

வீட்டிலும் பள்ளியிலும், திட்டு வாங்குவது எங்களது வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். தப்பு, தண்டனை, ஏச்சு, பேச்சு, அலட்சியம், அவமானம் இதனைக் கடந்துதான் எங்களது வாழ்க்கை இருக்கிறது என்று நம்பினோம். எப்போதும் அதற்குப் பயிற்றுவிப்பவர்களை எதிரிகளாக எண்ணியது இல்லை. குரு எங்களுக்குத் தெய்வம்!

எங்கு போனாலும் வெறுங்காலோடு பயணிப்போம். விளையாட்டுப் பொருட்களையும் நாங்களே தயாரிப்போம். பள்ளிக்கும் போகும்போது பணம் கேட்கும் பழக்கம் யாருக்கும் இல்லை. அதனால் தேவைகள் சிறியதாக இருந்தது. கல்கோனா, கடலைமிட்டாய் அதிலே நாங்கள் கலகலப்பாக இருப்போம். கூட்டுக் குடும்பமாக இருந்ததால் வீட்டில் யாராவது ஒருவர் எங்கள் தேவையை நிவர்த்தி செய்து விடுவார்கள்.

திருவிழாவாக இருந்தாலும் தீபாவளியாக இருந்தாலும் வேடிக்கை பார்ப்பதையே சந்தோசமாக நினைத்தோம். பட்டாசு வேண்டுமென்று பணம்கேட்டு அழுததில்லை. ஐ லவ் யூ சொல்லத் தெரியாததால் நாங்கள் பெண் குழந்தைகளுக்கு எதிரியுமல்ல பெற்றோர்கள் இதற்காகப் பள்ளிக்கு வந்து அவமானப் பட்டதுமில்லை.

காலில் செருப்பில்லாமல் கையில் குடை இல்லாமல் மழையில் நனைவது அசிங்கமாக எண்ணவில்லை. சுற்றுலா செல்லவோ குழுப்புகைப்படமோ எடுக்கும்போது பணம் இல்லை என்று சொல்வதையோ கௌரவப் பிரச்சனையாகக் கருதவில்லை வார் செருப்பு அறுந்தபோதும் சட்டை கிழிந்தபோதும் ஊக்கின் உதவியோடு உற்சாகமாய் பயணித்தோம்.

கிழிந்த டவுசர் அவிழ்ந்தது தெரியாமல் நண்பனின் தோள்களில் கைபோட்டுக் கொண்டு ஒற்றை மிட்டாயை சுற்றி உட்கார்ந்து உடைத்துத் தின்ற நாட்கள் அது. அதே நண்பர்கள் இப்போது எங்கு இருந்தாலும் நிஜ உலகில் வாழ்ந்தோம் யதார்த்தத்தை எதிர்கொண்டோம் என்றுதான் இப்போதும் வாழ்கிறோம்.

உணவோ, உடையோ நாங்கள் கேட்டதல்ல கிடைத்ததில் எங்கள் மகிழ்ச்சியைக் கண்டோம். இதுதான் விதி என்று சொல்லவில்லை இதுதான் எங்கள் தொடர் முன்னேற்றத்தில் வழி என்பதனைத் தெரிந்து கொண்டோம். இந்த வாழ்க்கை இந்தத் தலைமுறைக்குத் தெரியாது. போலித்தனம் இல்லாத எங்களுக்கு வாழ்க்கை பெருமையாக இருந்தது.

இதனை இந்தத் தலைமுறைக்கு மறைத்துவிட்டோமா? கொடுக்கத் தவறிவிட்டோமா? கல்விமுறையை மாற்றியது யார்? ஆசிரியர்களா? பெற்றோர்களா? அரசு அதிகாரிகளா? எதையோ ஒன்றைத் தொலைத்துவிட்டு ஏதோ ஒன்றைப் பிடித்துக் கொண்டு கல்வி என்ற பெயரில் குழந்தைகளைக் காயப்படுத்தி கல்வியாளர்களும் நிம்மதி இழந்து இங்கு ஆடு புலி, ஆட்டம் ஆடிக்கொண்டு இருக்கின்றோம்! என நினைக்கிறேன். ஆனால் இங்கு ஆடு யார்? புலி யார்? குழந்தைகளா? பெற்றோர்களா? ஆசிரியர்களா? அதிகாரிகளா? ஆண்டவனுக்கே வெளிச்சம்!

“இருப்பதைத் தொலைத்துவிட்டு
இல்லாத ஒன்றைத் தேடி
இரவு பகல் அலைவதே
இன்றையக் கல்வி”