22

Sep

2022

Scooty…

பாரதி கண்ட புதுமைப் பெண்கள் பாரதத்திற்கு வந்துவிட்டார்களா? பெரியார் சொன்ன விடுதலைப் பெண்கள் வீதிக்கு வந்துவிட்டார்களா? இல்லை இன்னும் பார்க்குமிடமெல்லாம் அது பகல் கனவாகவே இருக்கிறதா? சொத்துரிமைக்குப் பெண்கள் சொந்தம் கொண்டாட முடிகிறதா? இல்லை இரண்டு அண்டா இரண்டு குண்டா, ஒரு ஒட்டியானம், ஒரு நெத்திச்சூடி, ஒரு நெக்லஸ் போகும் போது கொஞ்சம் கண்ணீர் இவையெல்லாம் பெண்களின் சீர்வரிசை என்று அத்தோடு பெண்களின் உரிமை மறுக்கப்படுகிறதா?

பெண்களுக்குச் சமஉரிமை என்று எத்தனையோ பெரியோர்கள் கடுமையாகப் பேசினாலும் ஏசினாலும் புரட்சிக் கொடி தூக்கினாலும் என்ன இருந்தாலும் பொம்பளதானே… என ஆங்காங்கே சில அலட்சியப் பேச்சுக்கள் இருக்கத்தானே செய்கிறது! என்று மலரும் இந்தச் சமத்துவம்? இன்னும் எத்தனை நாள் இதற்காகக் காத்திருக்க வேண்டும்?

என்னைப் பொறுத்தமட்டில் பெண்கள் சுதந்திரம் அடைந்துவிட்டார்கள் என்று எண்ணினால் இப்போது அவர்கள் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் இரண்டு பறைசாற்றுகிறது. ஒன்று ஸ்கூட்டி, இன்னொன்று நைட்டி, ஸ்கூட்டி தனக்கென்று படைக்கபட்ட தனிவாகனமாக மாற்றிய பெருமை பெண் இனத்தைச் சேறும்.

ஒருகாலத்தில் வாகனத்தை இயக்குவதற்கு வழி இல்லாமலும் வசதி இல்லாமலும் வாழ்க்கைப் பயணத்திலும் சரி வழிப்பயணத்திலும் சரி பின்னால் உட்கார்ந்தோ பின் தொடர்ந்தோ பழக்கப் பட்டுவிட்டார்கள் ஆண்கள் செய்கிற வேலை வேறு, பெண்கள் செய்கிற வேலை வேறு எனப் பிரித்துப்பார்த்தார்கள். விவசாயம் பார்க்கும்போது பெண்கள் ஏர் உழுதாலோ வண்டி ஓட்டினாலோ ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள். அதிசயமாய் வியப்பார்கள். ஆண்களைப் போல வேலை செய்கிறாள் என்றுதான் அங்கீகாரம் தருவார்களே தவிர அவளுக்கென்று தனி அடையாளம் கிடையாது. காலம் கடந்து போனது வாகன உற்பத்தி தொடங்கியது சைக்கிள் பயணத்திற்குப் பயன்பட்டது அப்போது அது ஆண்களுக்கென்று உருவானதாகவே எண்ணப்பட்டது. அத்திப்பூத்தாற் போன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக பெண்கள் சைக்கிள் ஓட்டினாலும் ஆச்சர்யப்படுவார்கள் ஏனென்றால் அது அவர்கள் வாகனமாகக் கருதப்படவில்லை அது ஆண்களுக்கானது என்றே எண்ணினார்கள்.

ஆனால் அத்தனையும் சுக்கு நூறாக உடைத்து நொறுக்கிவிட்டுப் பெண்கள் சொந்தம் கொண்டாட சுதந்திரமாய் கொண்டாட வந்ததுதான் ஸ்கூட்டி எங்கும் பாருங்கள் பெண்கள் ரெக்கை கட்டிப் பறந்து கொண்டிருக்கிறார்கள். பணிக்குச் சென்றாலும், பால் வாங்கச் சென்றாலும். கடற்கரைக்குச் சென்றாலும் பெண்கள் சுதந்திரமாகப் பறக்க வந்தது தான் ஸ்கூட்டி. ஸ்கூட்டி என்று சொன்னாலும் ஸகூட்டியைப் பார்த்தாலும் உடனே நமக்கு ஞாபகம் வருவது அது பெண்களின் வாகனம். 21 ஆம் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்த போதும் பெண்களுக்கென்று ஆண்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்ட நிலையில் படைக்கப்பட்ட வாகனம் ஸ்கூட்டி என்றால் அது மிகையாகாது.

ஆண்களைக் கண்டு அசந்து போன காலம் போய் ஆண்களைப் போல அசத்திக் கொண்டு ஒவ்வொரு பொண்ணும் ஸ்கூட்டியில் செல்கிறாள். ஆண்களுக்கு நிகராக வேகத்திலும் சரி விவேகத்திலும் சரி தளராத உள்ளத்தோடு தாராளமாய்ச் செல்கிறார்கள். ஆடவன் ஒருவனால் ஸ்கூட்டி வைத்திருந்தாலும் அது அவனுடைய மனைவிக்குரியதோ, சகோதரிக்குரியதோ என பெண்களை மையப்படுத்தி பேசப்படும் என்ற பெருமைக்கு சுயமாய் பயணிக்க இந்த ஸ்கூட்டி வந்தது. இதை யாராலும் இப்போதல்ல எப்போதும் தடுக்க முடியாது.

பயணத்திற்கு ஸ்கூட்டி போல பழக்கத்திற்கு நைட்டி அவர்களுக்கு முழுச் சுதந்திரம் தந்து விட்டது. ஒரு பெண் வீட்டுவேலைக்கும் ஏற்ற உடையணிவே அவளுக்கு இரண்டு மணி நேரம் ஆகிவிடும் ஏனென்றால் பெண்களுக்கு நாம் அங்கீகரித்திருக்கிற ஆடையின் அமைப்பு அப்படி! எனவே அவர்களுக்கு ஒருநிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாற அவர்களின் உடலமைப்பிற்கேற்ப உடையமைப்பு மாறுவது கடினம் எனவே அனைத்துச் சிரமங்களையும் அப்புறப்படுத்துவது போல் வந்தது தான் நைட்டி எளிதில் அணியலாம் எப்போதும் அணியலாம் எளிதில் மாற்றலாம் வீட்டுக்குள் நடமாடும் போதும் பாதுகாப்பாகவும் பக்குவமாகவும் அது பார்த்துக் கொள்ளும்.

யாரும் எளிதில் பெண்களுக்கு விடுதலை அளிக்காமல் இருந்தபோது எளிதாக வந்து பெண்களின் வாழ்க்கை எளிதாக்கியது ஸ்கூட்டியும், நைட்டியும் என்றால் அது மிகையாகாது பல்வேறு மன உலைச்சலுக்கும் அது மருந்தானது. ஒரு ஸ்கூட்டியும் நைட்டியும் கொடுத்த சுதந்திரத்தைக் கூட பிறந்தவனும் கூட வாழ்பவனும் கொடுக்காவிட்டால் அவனால் ஒரு பெண் வளர முடியாது நடையிலும், உடையிலும் நாகரீகத்திலும் ஒரு பெண் வளர நாளும் துணை இருப்போம். நாளும் துணையிருப்போம் சுதந்திரக் காற்றை அவர்கள் சுவாசிக்கக் காற்றாய் பாட்டாய் கலந்து நாம் வருவோம் நிறைந்து நாம் மகிழ்வோம். சுதந்திரப் பறவையே சுடராக வா!

“உடையில் தடையா?
உடைத்துவிட்டு வா!
உணர்வுக்குத் தடையா?
உதைத்து விட்டு வா!”

ARCHIVES