தீண்டும் இன்பம்…

(வகுப்பறைக்கு வெளியில் நிற்கும் ஒரு மாணவனின் விசும்பல் இது.)

வழக்கம்போல் தலைமையாசிரியர் என்ற முறையில் நாளுக்கு இருமுறை வகுப்பறைகளைப் பார்வையிடுவேன். அதுபோல் அன்றும் பார்வையிடச் சென்றேன். ஒரு வகுப்பறைக்கு வெளியில் ஒரு மாணவன் நின்று கொண்டிருந்தான். தூரத்திலிருந்து அவனைக் கவனித்துக் கொண்டிருந்தேன். உள்ளே இருக்கிற மாணவனை எட்டிப்பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான். உதட்டில் சிரிப்பும் உள்ளத்தில் வலியும் உள்ளும் புறமும் உருண்டோடிக் கொண்டிருந்தது. அவன் கொஞ்சம் எட்டியே நின்றாலும் எனக்கும் ஏனோ வலித்தது.

வகுப்பறையை எட்டிப் பார்த்தவன் திடீரென்று திரும்பினான். என்னைப் பார்த்தவுடன் அன்று பிறந்த ஆட்டுக் குட்டி எழுந்து நிற்கும்போது தடுமாறுவது போல திடீரென்று தடுமாறினான். மேலே பார்த்து எல்லாக் கடவுளையும் வேண்டினான். அவன் வேண்டுதல் கேட்க வேண்டும் என்பதற்காக நான் அந்தப் பக்கம் போகாமல் திரும்பி விட்டேன். அவன் சற்று நிதானமானான்.

அவன் எதையோ பேச நினைத்திருப்பான் ஆனால் யாரும் கேட்கவில்லை. இறைவனாவது கேட்பான் என்ற அவன் நம்பிக்கை வீண்போகவில்லை. தலையைக் குனிந்து கொண்டே என்னைப் பார்க்கிறான். அவன் பயப்படும் இடத்தில் நான் இல்லை வேறு இடத்திற்கு நகர ஆரம்பித்து விட்டேன் அவனும் ஆறுதல் அடைந்தான்.

கொஞ்ச நேரம் புத்தகம் படிப்பது போல் நடித்தவன். பின்பு மேலே பார்த்தான். பெருமூச்சு விட்டான். விரக்தியாய் உடம்பை நெளித்தான். அதில் அவனது இல்லாமையும், இயலாமையும் வெளிப்பட்டது. அவனது மனசு மட்டும் யாருக்கும் கேட்காமல் அவனது நியாயத்தை சத்தமாக உரைத்தது.

எட்டி ஒருமுறை வகுப்பிற்குள் இருக்கும் டீச்சரைப் பார்த்தான். மனதிற்குள் பல எண்ணங்கள் ஓடியது. உங்களைப்பற்றி எனக்கு நல்லாவே தெரியும். எவ்வளவு பாசமான டீச்சர் நீங்கள்! அன்றொரு நாள் பசியின் மயக்கத்தில் நான் படியில் விழுந்த போது நீங்கள் துடியாய் துடித்தீர்கள் என்று நண்பன் சொன்னான். அப்போது தான் எனக்கு ஏதோ ஒரு மூலையில் நம்பிக்கை துளிர் விட்டது. எனக்கும் ஒரு தாய் இருக்கிறதென்று அதுவும் என் பக்கத்திலேயே அதே டீச்சாரா இப்படி? அதெப்படி?

பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள்? அரசாங்கமும், நிர்வாகமும் கொடுக்கிற நெருக்கடியில் நான் என்ன நெருக்கடியில் இருக்கிறேன் என்று உங்களுக்கு எப்படிப் புரியும்? டீச்சர் நீங்கள் பள்ளிக்கு வருவதற்கு எத்தனையோ வாகனங்கள் இருக்கிறது. நீங்கள் களைப்படையாமல் வந்து விடலாம். நான் ஓட்டமும் நடையுமாக ஓடிவருவதற்கு முன் என்னைவிட காலம் எப்படியோ முந்திவிடுகிறது!

லேட்டா வந்தால் கண்டிப்பீர்கள்! ஆனால் ஏன் லேட்டா வந்தேன் என்று என்றைக்காவது காது கொடுத்திருக்கிறீர்களா? இல்லை டீச்சர் அதற்கு உங்களுக்கு நேரமில்லை! உங்களுக்கு எத்தனையோ மாணவர்கள் ஆனால் எனக்கு நீங்கள் மட்டும் தான் டீச்சர்! அதைச் சொல்லக்கூட உங்களிடம் நெருங்க முடியவில்லை டீச்சர்! நல்லா படிக்கிறவன் உங்களிடம் நல்ல பிள்ளையாகிவிடுகிறான். நாலு இடம் போய் பரிசு வாங்கிவிட்டு வருகிறவன் உங்களிடம் பாராட்டுப் பெறுகிறான். கலைநிகழ்ச்சிகளில் உள்ளவர்கள் உங்களிடம் கலகலப்பா பேசுகிறார்கள் இவையெல்லாம் என்னுடைய வறுமையினாலும், சோகத்தினாலும் உங்களை நெருங்க முடியாமல் உங்கள் கண்ணில் படாமல் காணாமல் கிடக்கிறேன்.

நான் நல்லா ஆடுவேன் டீச்சர் ஆனால் ஆடை வாங்கக் காசில்லை டீச்சர். இவர்கள் எல்லாம் நான் பழைய ஆடையை உடுத்தி வருகிறேன் என்று என்னிடம் பழகக் கூடமாட்டார்கள். எனக்கு பழைய ஆடையைக் கழிக்கக் கூட பணமில்லை டீச்சர்.

பள்ளிக்குத் தாமதம் என்று என்மீது பாய்ந்து விடுகிறீர்கள்! எப்படியாவது முதலில் வந்து உங்கள் முகத்திற்குமுன் வந்து சிரிக்க வேண்டும் என்று ஆசைப்படுவேன். ஆனால் காலையில் கழனிக்குப் போகணும் மாடுகளுக்கு புல் தூக்கிட்டு வரணும்! படுத்த படுக்கையாய் இருக்கிற என் தாத்தாவுக்கு சோறு ஊட்டணும். பெட்டிக்கடையில் வேலை செய்யும் என் அப்பனுக்கு சோறு கொண்டு போகணும் இதையெல்லாம் முடிச்சிட்டு நான் ஏறிட்டுப் பார்க்கும்போது மணி எட்டரையைத் தாண்டி விடுகிறது! இதன் பிறகு நான் குளிக்கின்ற பெயரில் ஒரு நனைப்பும் சாப்பிடுகின்ற பெயரில் ஒரு கொரிப்பும் செய்துவிட்டு ஓடி வருவேன். பலநேரங்களில் நேரமாகிவிட்டது என்ற பெயரில் சாப்பிடாமல் ஓடிவருவேன். நேரமில்லை என்பதற்காக இல்லை! சாப்பாடு இல்லை! அதை அப்படி சரிக்கட்டிக் கொள்வேன்.

நேரம் ஆகும்போதெல்லாம் ஐயோ டீச்சர் திட்டுவாங்களே! என்று நினைப்பேன் ஆனால் உள்ளுக்குள் துள்ளிக் குதிப்பேன் ஆசிரியர் திட்டினால் என் அருகில் நின்று அக்கறையோடு என்னைப்பற்றி என்னிடம் கூறும்போது பாராட்டுத்தான் வாங்கவில்லை திட்டாவது உங்களிடம் ஒவ்வொரு நாளும் வாங்குகிறேனே! நான் பரவசமடைவேன். உங்களுக்குப் பயந்தால்? நான் ஒருநாள் கூட பள்ளிக்கு வரமாட்டேன். ஆனால் உங்களுக்காக! உங்கள் பாசத்திற்காக! ஒவ்வொரு நாளும் வருவேன். ஆனால் என் பாசத்தை எப்படி உங்களுக்கு புரிய வைக்கிறதென்று எனக்குத் தெரியவில்லை டீச்சர்.

எனக்கு எல்லாமே நீங்கள் வாங்கிக் கொடுத்திருக்கிறீர்கள்! ஆனால் படிப்பு வரல! படிப்பு வராமல் இல்ல படிக்க நேரமில்லை டீச்சர் எப்பவும் எனக்கு வேலைதான். வீட்டுப்பாடம் செய்யலைன்னு திட்டுவீங்க! டீச்சர் உங்களுக்குத் தெரியுமா? எனக்கு வீடே இல்ல! பாடம் தான் இருக்கு. எங்க அப்பா எப்பவுமே குடிச்சிட்டு எங்கம்மாவை அடிக்க, தாய்ப்பாசத்தால் நான் தடுக்கப் போக எனக்கும் ரெண்டு அடி விழும். அம்மாவோடு அழுவேன். அம்மாவுக்காகவும் அழுவேன். அழுது முடித்து விட்டு ஒருவர் காயத்திற்கு ஒருவர் மருந்து போடுவோம். எங்கப்பா என்னை கெட்ட வார்த்தையால் திட்டி, கேவலமாகப் பேசுவார் மனசுக்குள்ளே அழுவேன். ஆனால் வகுப்பறையிலே யாருக்கோ நீங்க சொல்லுகிற ஆறுதல் வெளியிலிருந்து கேட்கின்ற எனக்கு என் வாழ்க்கையே வெளிச்சமானது மாதிரித் தெரியும்.

வகுப்பறையில் பேசும்போது அடிக்கடி பேசுகிறேன் என்று பெயரெழுதித் தந்து விடுகிறார்கள். அதனால் நான் அடுத்தவனையும் கெடுக்கிறேன் என்று ஆதங்கப்படுகிறீர்கள் டீச்சர். வீட்டுக்குப்போனா ஏங்கூட பேசுவதற்கே ஆள் கிடையாது டீச்சர். இங்கேயும் பேசலனா நான் பேச்சையே மறந்திடுவேன் டீச்சர் எல்லோரும் வேலை சொல்லுவாங்க செய்வேன் எப்போ தூங்கினேன்? எங்கே தூங்கினேன் எனக்கே தெரியாது டீச்சர். எங்கம்மாவை கூட்டிட்டு வரலைனு வருத்தப்படுறீங்க எங்கம்மா கூப்பிட்ட உடனே லீவு போட்டு வருவதற்கு அவங்க எந்த அலுவலகத்திலும் வேலை செய்யல. நாலு வீடு பாத்திரம் கழுவித்தான் எங்க வயிறு கழுவுகிறோம். அவங்க இங்க வந்தா அன்றைக்கு நாங்க பட்டினிதான். அதனால நேரம் கிடைக்கும்போது வருவாங்க வந்தவுடன் இன்னைக்குத்தான் இந்தப் பய சொன்னா அப்படிம்பாங்க உங்களுக்கு கோபம் வரும். எங்க பசி எங்களை அப்படிப் பேசச் சொல்லுது டீச்சர்.

டீச்சர் நீங்க ஒரு நாள் இதை சொன்னீங்க அம்பேத்கார் வெளியே உட்கார்ந்து படிச்சார்னு. சமுதாயம் அவரை வெளியே வைத்தது ஆசிரியர் அவரையும் அன்பு செய்தார். இங்கே சமுதாயம் என்னை உள்ளே வைத்தது நீங்க என்னை வெளியே வைச்சிட்டீங்களே!. ஆனாலும் உங்கமேல எனக்கு ரொம்ப அன்பு டீச்சர் உங்க பேரை என் பிள்ளைக்கு நிச்சயம் வைப்பேன் டீச்சர். எனக்கு அதிகம் ஆசையில்லை டீச்சர்! அடுத்த பிறவியிலாவது நான் உங்க மகனாகப் பிறக்கவில்லையென்றாலும் மாணவனாய்ப் பிறக்கணும். அப்போதாவது என் அன்பை நீங்க புரிஞ்சிக்கணும். பாடத்தை சொல்லிவிட்டு பாடம் புரியலையானு கேட்பீங்க! பாடம் புரியலை டீச்சர்! ஆனா உங்களைப் புரியும் டீச்சர் உங்களைப் பிடிக்கும் டீச்சர். நீங்க வெறுக்கிற மாதிரி நடிக்கிறீங்க! நீங்க நடிக்கிறது கூட எனக்கு வலிக்கு டீச்சர். எனக்கு நான் இந்த உலகத்தில் எதிர்பார்த்த அன்பு கிடைச்சுதான்னு தெரியல ஆனா எனக்கு கிடைச்ச அன்பு முழுவதும் உங்களது தான் என்று அப்படியே ஏற்றுப்பார்த்தான் நான் நின்றுகொண்டிருந்தேன். எழுந்தான் அவன் தோளில் கை வைத்து உள்ளே போகச் சொன்னேன். டீச்சர் வாசல் வரை வந்து கூட்டிக்கிட்டு போனார்கள் முகமெல்லாம் மலர்ச்சி ஆனால் கண்ணீர் மட்டும் வடிந்து கொண்டே இருந்தது. எங்களுடைய கண்களிலும்…

“கருவுற்றவர்கள் மட்டுமே
தாயானவர்கள் அல்ல
கருணையுற்றவர்கள் அனைவருமே
தாயானவர்கள்தான்”