பாதி வெந்து…

அரைவேக்காடு என்று அபசகுனமாய் நான் ஆரம்பிக்கக் கூடாதென்று “பாதி வெந்து” என்று உங்களிடம் பகிர வந்துள்ளேன். சுதந்திரம் வாங்கி 75 ஆண்டுகளை விமரிசையாகக் கொண்டாடுகிற நாம் உண்மையிலேயே சுதந்திரத்தை அனுபவித்து விட்டோமா? என்று எண்ணினால் மனதிற்குள் எழுவது கேள்விக் குறியா? ஆச்சர்யக் குறியா? சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தோம் என்று கூறுகிறார்கள்! வாங்கினார்கள்! கொடுத்தார்களா?

சுதந்திர இந்தியாவிற்கு முன் இந்தியா சிதறிக் கிடந்த சிற்றரசுகள் தான். குட்டிக் குட்டி இராசாக்கள் தனக்கென்று தனி ராஜ்ஜியம் அமைத்துக் கொண்டு தான் வகுத்ததே சட்டம் என்று ஆட்சி புரிந்தார்கள். முகலாயப் பேரரசுகள் முகலாய அரசர்களின் படையெடுப்புகளால் உருவானது பின்பு டச்சுக்காரர்கள் வந்தார்கள் போர்ச்சுக்கீசியர்களின் கிழகிந்தியக் கம்பெனிகள் வந்தது. ஆங்கிலேயர்கள் வந்தார்கள் ஆங்கிலேயர்களின் எடுபுடிகளாகி மாறி தான் மட்டும் வசதியாக வாழ ஆசைப்பட்டார்கள். தன் சுயத்தை இழக்க விரும்பாத குட்டி அரசர்கள் முட்டி மோதி சரணடைந்து உயிரிழந்தார்கள். நம் நாட்டு ராசாக்கள் எதிரிகளாகிய ஆங்கிலேயர்களின் அடக்க முறையில் அழியவில்லை தான் பக்கத்தில் இருந்த பாங்காளிகளின் துரோகத்தால் வீழ்த்தப்பட்டார்கள். ஆங்கிலேயர் காலத்து அடி வருடிகளாலும் காட்டிக் கொடுக்கும் கயவர்களாலும் தான் முதலில் கட்டமைக்கப்பட்டது இந்தியா.

வீர மறவர்கள் வீழ்த்தப்பட்டார்கள் காட்டிக்கொடுத்தவர்கள், ஊத்திக் கொடுத்தவர்கள் கூட்டிக் கொடுத்தவர்கள் ஆங்கிலேயர்களின் நிழலில் அமைச்சர்களாகினர். சொந்த நாட்டு மன்னர்களைக் காட்டிக்கொடுத்தே பதவி பெற்றவர்கள் பல பேர். நாம் மாவீரனாகப் போற்றுகிறோமே மருதநாயகம் அவனால் காட்டிக் கொடுக்கப்பட்டே பல மன்னர்கள் பரிதாபமாகச் செத்தார்கள். நேர்மையானவர்களின் நிழல்கூடப்படாமல் பச்சோந்திகளாக இருந்தவர்களுக்கே பட்டாபிசேகம் நடந்திருக்கிறது.

குட்டிநாடுகளை ஓன்றிணைத்து பட்டேல் மொத்த இந்தியாவை முழுசாகக் கொண்டுவந்தார். ஆங்கிலேயர்களை அகற்ற வேண்டும் என்று காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை விடுதலைத் தாகத்தை காந்தி, பாரதி, வ.உ.சி., நேருஜி போன்றோர் உருவாக்கினார்கள். ஆங்கிலேயன் நம்மைப் பார்த்து அசட்டுச் சிரிப்பு சிரித்தான் காரணம் சுதந்திரம் பெறுவது உங்கள் உரிமை அதனைச் சொந்தம் கொண்டாடலாம் அதன்பின் அதனை ஆளப்போவது யார்? அடிமையாகவே இருந்து பழக்கப்பட்ட ஒரு சமூகம் ஆட்சியாளனாய் மாறுவது கோமாளிக்கு மாறுவேசம் போட்டது போன்று கொடுமையான செயலாகிவிடும். ஆனாலும் சுதந்திரம் வாங்கிவிட்டோம் ஆளும் தகுதியை அடைந்தோமா? என எண்ணினால் நாட்டு நடப்பைப் பார்க்கும் போது நமட்டுச் சிரிப்புத்தான் நமக்கு எழுகிறது.

சுதந்திரத்தை வாங்கிப்புட்டோம் வாங்கி சுக்கு நூறாய் உடைச்சுப்போட்டோம். குழந்தை கையில் கிடைத்த புத்தகமாய் குரங்கு கையில் அகப்பட்ட பூமாலையாய் போட்டுடைத்துப் பொட்டு வைத்துக் கொண்டிருக்கிறோம் பிரித்தாளும் கொள்கையை ஆங்கிலேயன் கொண்டுவந்தான் எனச் சொல்லிவிட்டு நாம் இன்று சாதி வாரியாக மொழி வாரியாக இனம் வாரியாக மதம் வாரியாகப் பிரிந்து மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறோம் என்ன மடமை! இதற்கா சுதந்திரம்? முஸ்லீமெல்லாம் ஈராக்கிலிருந்து வந்தது போலவும், கிறிஸ்துவர்கள் எல்லாம் இங்கிலாந்திலிருந்து வந்தது போலவும் முறைத்துக் கொண்டும் முணுமுணுத்துக் கொண்டும் இருக்கிறோமே இதுவா சுதந்திர இந்தியாவில் பர்தா போட்ட பெண்ணை கூடப் படிக்கிற பையனே பரிசிக்கும்படி எந்த முட்டாப்பயல் சொல்லிக் கொடுத்தான் இதுவா முன்னேற்றம்?.

மாட்டினை தொழு அல்லது அதனைக் கட்டிக் கொண்டு அழு எவன் கேட்கப் போகிறான். அதற்காக மனித நேயத்தைக் கொல்லும் மடப்பயல்களுக்கு எவன் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தான்?. ஆட்சியை வாங்கினோமே தவிர ஆட்சியாளர்களை உருவாக்கவில்லையே. பந்தி கூடி விட்டது என்று பாதியிலேயே அரிசியை எடுத்து பரிமாறி விட்டோமோ? என்று பயமாக இருக்கிறது இன்னும் கொஞ்சம் உலையில் இருந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. இன்றையச் சூழலை எண்ணிப் பார்க்கும் போது பாதி நிகழ்வுகளை சீரணிக்க முடியாமல் இந்தியத்தாயே மந்தமாக இருக்கிறாள் மௌனமாக அழுகிறாள் ஏனென்றால் எங்கு நோக்கினும் தீவிரவாதம் திருவிழா நடத்துகிறது அது தலையெடுக்கத் தலையெடுக்க பல்வேறு தலைவர்களின் தலையெடுக்கப்படுகிறது. இரத்த ஆற்றுக்குள் செத்த பிணங்கள் மிதக்கிறது. சுதந்திர இந்தியாவின் காற்றைச் சுவாசிக்கும் போது சவத்தின் வாடை சரிரத்தில் தெரிகிறது.

ஒரு கவிஞன் சொன்னான் எங்கள் தலையில் எண்ணெய் இல்லை காரணம் எங்களை ஆள்வோர்களின் தலையில் எதுவுமே இல்லை என்பான் இதனை மனதில் வைத்துக் கொண்டு கொரோனாவிற்கு நாம் கொடிப்பிடித்தோமே யோசித்துப் பாருங்கள் கைதட்டி நாம் சிரிக்கலாம் நாம் கைதட்டினோம் உலகமே நம்மைப்பார்த்து சிரித்தது தனிமைப்படுத்த வேண்டிய ஒரு நோய்க்கு கோ… கோ… கொரானா எனக் கூட்டமாய் கொக்கரித்தோமே இதிலிருந்து நமது அறிவியல் புலமை அப்பட்டமாக அகில உலகத்திற்கும் அம்பலமானது சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் செவியில் விழத்தானே செய்தது காந்தி சொன்னார் நடு இரவில் நகைகளோடு ஒரு பெண் தனியாகப் பயமின்றிப் பயணித்தால் …… அதுவே சுதந்திர இந்தியா என்று ஆனால் இன்று மனித மிருகங்கள் பகலிலேயே பச்சைக் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வதும் பள்ளியறையில் பிள்ளைகளை பலவந்தப்படுத்தும் கொள்ளிவாய் பிசாசுகளும் திரிகின்றனவே. ஒரு புறம் வயிற்றுப் பசிக்கு அலையும் மனிதர்கள் மறுபுறம் உடல் பசிக்கு அலையும் மிருகங்கள் காட்டில் அவித்துவிட்ட காட்டு மிரண்டிகளாய் நாடு சுடுகாடாக மாறிக் கொண்டு இருக்கும் போது சுதந்திர இந்தியா எனச் சொல்லுவதற்கே வெட்கமாக இருக்கிறது. படித்தவர்கள், பிடித்தவர்கள் வாருங்கள் அரசியலுக்கு எந்தப் பழிச்சொல்லுக்கும் ஆளாகாமல் பார்த்துக் கொள்வோம் இந்தியாவை!

“ஓ மகாத்துமாவே உனக்கும் பொய் சொல்லத் தெரியுமா?
சுதந்திரம் வாங்கிவிட்டோமென்று சும்மாதானே சொன்னாய்?!”