19

Apr

2012

கல்லறையிலிருந்து ஒரு கடிதம்

கல்லறையிலிருந்து ஒரு கடிதம்

ஒரு கல்லரை
கதை பேசுகிறது
கனத்த இதயங்களை
கண்டித்துப் பேசுகிறது

நெஞ்சை உலுக்கி
நீதி கேட்கிறது
கொஞ்சம் நம்மை
மாற்றத் துடிக்கிறது

கேள்விகள் பல
கேட்டு நிற்கிறது
புதிய வேள்வியில்
குதிக்கப் பாதை காட்டுகிறது

காலம் காலமாய்
காத்து வந்த மானத்தை
நேற்று வந்த அரசியலார்
நிலத்தில் புதைத்தபின்னும்
நெஞ்சில் வீரமில்லையா?

பட்டம் பதவிக்காய்
பகல் வேஷம் போடுவோரே
மிச்சம் ஏதேனும்
மேலுலகம் வருவதில்லையென்ற
மேன்மையை உணரவில்லையா?

மகாத்துமா மன்னரெல்லாம்
மண்ணில் இருக்கு மட்டுமே
பிணமென்று சுடுகாட்டில்
பேசுவதைக் கேட்ட பின்பும்
பிரிவினைகள் சாகவில்லையா?

சாதிக்கொரு கட்டுப்பாடு
சமூக நீதிக்குத் தட்டுப்பாடு
மொத்தத்தில் ஆறடிக்குள்
மூச்சடக்க ஏற்பாடு
முன்னோர்கள் சொன்னதில்லையா? பெண்ணுக்குள் வந்தவனே
பெண்ணெடுக்கப் பேரம் ஏனோ
மண்ணிலிருந்து வந்தவனை
மண்ணே மூடிக்கொள்ளும்
மகத்துவம் புரியவில்லையா?

எதிர் காலத்தை உணராமல்
அருகில் இருப்பவரையும் புரியாமல்
காதலை வாழவைக்க
காதலர்கள் மடிகின்ற
காவியங்கள் தோன்ற வேண்டுமா?

கையோடு வராத பொருளை
காலமெல்லாம் தேடித் தேடி
பகையோடு நிற்காப் புகழுக்கு
பகல் வேஷம் போடுகின்ற
பரிதாபம் உணர வில்லையா?

எதை நீ கொண்டு வந்தாய்?
எதை நீ எடுத்துச் செல்வாய்?
நிர்வாணமாய் வந்த உலகில்
நிரந்தரமாய் தூங்கும் வரை
நிம்மதி பெறவேண்டாமா?

கடைசியாய் ஒரு வார்த்தை
காதில் வந்து சொல்லுகிறேன்
வையத்தில் வாழும் போது
வாழ்வாங்கு வாழணுமே
கல்லறைக்கு போன பின்பும்
காலம் நம்மை பேசணுமே.

காவியமாய் படிக்க வேண்டுமே!
ஓவியமாய் பதியவேண்டுமே!
வரலாறு இடம் கேட்டு
வாசல் வந்து நிற்கவேண்டுமே!
வாழவிடுங்கள் வாழுங்கள்

ARCHIVES