16

Feb

2012

கண்ணெதிரே தோன்றினாள்

“கண்ணெதிரே தோன்றினாள்”

காதோடுதான் நான் பேசுவேன் என்ற தூரிகையைத் தூக்கிக் கொண்டு எழுத்துலகில் நான் செய்யும் இன்னொரு இலக்கியப் பயணம். சில கருத்துக்களைச் சுமந்து கொண்டு வருகிறேன். இவை நான் சிந்தித்தவையல்ல. என் அலைபேசியில் தினந்தோறும் முத்தமிட்ட குறுந்தகவல்கள் (SMS) இதனை அப்படியே தொகுத்து வெளியிட்டால் என்ன? என்று வித்தியாசமாக நான் சிந்திக்கும் போது என் கண்ணெதிரே தோன்றியது தான் இந்தக் காதோடுதான் நான் பேசுவேன்.
வார்த்தைகள் இது பல கருத்துக்களை வாசிக்கவும் வைக்கும், யோசிக்கவும் வைக்கும். பிறரிடம் யாசிக்கவும் வைக்கும், பிறருக்காக சுவாசிக்கவும் வைக்கும்.

நாம் புத்தகங்களில் புரட்டிய வார்த்தைகள் தானே நம்மை பல இடங்களில் புரட்டி எடுத்திருக்கிறது. பாவ வாழ்க்கையில் பழகிப்போன புனிதர் அகஸ்தீனுக்கு “எடுத்து வாசி என்ற வார்த்தை தானே யோசிக்க வைத்தது. இன்று அவரையே வாசிக்க வைத்தது.

உலகக் கவர்ச்சியில் உலவி வந்த பேராசிரியர் சவேரியாருக்கு “உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தனது ஆன்மாவை இழந்தால் பயன் என்ன? என்ற வாக்கியம் அவருக்கு உலக உள்ளங்களைத் தனதாக்கியது.

உலகச் சாம்ராஜ்யத்தை உருட்டிப்போடுவதற்காகப் புறப்பட்ட போர் வீரர் லொயோலா இன்னாசியாரை கால் ஒடிந்த நிலையில் மருத்துவமனையில் அவர் வாசித்த விவிலிய வார்த்தைகள் தானே இன்று இறையரசின் போர் வீரனாக இனம் காட்டுகிறது.

“இச் சின்னஞ்சிறிய சகோதரனுக்குச் செய்த போதெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்ற வார்த்தை ஒரு சிறிய மடத்துப் பெண் துறவியை அன்னைத் தெரசாவாக அடையாளம் காட்டியது.
இப்படி எத்தனை எத்தனையோ சாதாரணமானவர்களைப் புரட்டிப் போட்டு இவ்வுலகச் சாம்ராஜ்யத்திற்கு அடிக்கல் ஆக்கியது வார்த்தைகளே “கத்தியின்றி ரத்தமின்றி உச்சரித்துப் பாருங்கள் அகிம்சை ஊற்றெடுக்கும். “அச்சமில்லை…. அச்சமில்லை சொல்லிப் பாருங்கள் ஒரு புத்துணர்ச்சி வரும்.

அந்த நம்பிக்கையில் நான் சந்தித்த வார்த்தைகளை இந்த சமுதாயத்திற்குத் தருகிறேன். இதில் ஏதேனும் ஒரு செய்தி உங்களை வாசிக்கும், சில தொடும், சில சுடும், சில உரசும், சில அலசும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதோ என் பேனாவிற்கு மட்டுமே வேலை தருகிறேன்.

புரட்சியை மட்டுமே இப்பூமி அங்கீகரிக்கவில்லை, புதிய முயற்சியையும் ஆதரித்து இருக்கிறது.

இலக்கிய உலகில் நான் குயில் மட்டுமே, என் எண்ணங்களைப் பக்குவாய் அடைகாத்து பொரிக்க வைத்து பூமியில் பறக்கவிடும் பொறுப்பு எப்போதும் என் சகோதரர்களையும் நண்பர்களையும் சார்ந்தது.

எனது ஒவ்வொரு முயற்சியிலும் உடனிருக்கும் ஆசிரியைகள் தொகுத்தும், கோர்த்தும், பிழை திருத்தியும் கொடுக்க காதோடுதான் நான் பேசுவேன் என்ற இத்தொகுப்பிதழை இதோ இந்த வைபவ நாளில் உங்கள் கரங்களில் காணிக்கையாக்குகிறேன்.

ARCHIVES