நன்றியோடு…

நினைத்த நெஞ்சங்களின் நனைந்த நினைவுகளோடு ..

என் தந்தை திரு.R.இராயப்பன்

இந்த மண்ணுக்கு நான் வந்த நாள் முதல், எனது மனதிற்குள் குடிவந்த தெய்வம் என் தந்தை. சின்னச்சின்ன சிறகுகளைச் செதுக்கி வைத்து அவர் கொடுக்கிற உத்வேகத்தில் நான் உயர உயரப் பறக்கும்போது உட்கார்ந்து ரசிப்பவர். தன் கண்ணுக்குள் வைத்திருந்த கனவாகவே அவர் கரத்தினில் என்னைக் கொண்டு வந்தார். நான் பார்க்கின்ற நாள் முதலே என் பக்கத்திலிருக்கிற பல்கலைக்கழகம். அன்பினை அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி. என் அப்பாவிற்கே என் அன்பின் முதல் நெஞ்சார்ந்த நன்றிகள்.

சகோ.M. செங்கோல்

விதி என் வாழ்க்கையில் விளையாடும்போதெல்லாம் அதன் வலிகளைச் சுமந்துகொண்டு எனை வாழ வைக்கின்ற தெய்வம். என்மீது கல்லெறியும்போதெல்லாம்்இவரே காயப்பட்டுக் கொள்வார். துன்ப நேரங்களிலெல்லாம் எனக்கு துணையாயிருந்தவரல்ல இவர், என்னைத் தூக்கிச் சுமந்தவர். 25 ஆண்டுகளாக என்னை மனதில் சுமக்கின்ற என் மானசீகக்குரு. இவர் அருகிலிருக்கிற அசாத்திய நம்பிக்கையில் எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு. பூமியில் நான் கண்ட புதிய கடவுள். நான் வாழும்வரை இவர் வரம் கொடுப்பதற்காய் வணங்குகிறேன். இவருக்கும் எனது நன்றிகள்.

 சகோ. S. அமல்ராஜ்

என் போதிமரம். ஆனால் நான் புத்தனல்ல. இவரின் வளர்ப்புப்புதல்வன். இந்தச் சாதனைச் சிகரத்தை நான் சார்ந்திருப்பதனால் அதன் சாரல்கள் என்னையும் நனைத்துவிட்டுச் செல்லும் ஐயாவின் புகழை நான் வாழ்த்தும்போதெல்லாம் வார்த்தைகள் எனக்கு இனிக்கும். வணங்கினால் மோட்சமே கிடைக்கும், பரமசிவன் கழுத்தில் கிடக்கிற பாம்பு எந்தக் கருடனையும் சௌக்கியமா? என்று கேட்பதுபோல் ஐயா பக்கத்திலிருக்கும்போது எந்த மலையையும் கடந்துவருவேன் இந்தியச் சமுத்திரத்திலும் நடந்துவருவேன். என் பறந்த வானமாய் நான் பறக்கும் வனாந்திரமாய் இறகிற்குள் வைத்துப்பறக்கும் என் இதய தெய்வத்திற்கு எனது இனிய நன்றி.

அருட்தந்தை. Y.S. யாகு

நான் இலக்கிய வானில் பறந்து வருவதற்கு இறகு கொடுத்தவர். ஏதுமறியாது தவிக்கின்றபோது தன் சிறகால் சுமந்தவர். புதிய விடியல்கள் என் கருத்தில் மலர என்னைப் பதியம் வைத்தவர். நான் பயணிக்கும் உலகிற்கு பாதைகாட்டிய உதயமாய் நின்றவர், என் இதயமாய் இயங்குவார். இன்னல்களைத் தாங்குவார். என் எண்ணத்தின் சன்னல்களைத் திறந்துவிட்டு ஆனந்தப் பூங்காற்று என்னை வருடிச் செல்ல வழிகாட்டியவர் என் குலம் தளிர்க்க வந்த குலகுரு முதல்வருக்கு, கரம் குவிக்கிறேன். நன்றி.

சகோ. A.P சாக்கோ அயத்தில்

இவரது அன்பு மழையில் நனைந்துதான் என் இதயத்தில் எண்ணற்ற இன்பப்பயிர்கள் வளர்ந்தன. தனக்கென எதனையும் வைத்துக் கொள்ளாத இவர் எனக்கென சிலவற்றை வைத்திருப்பார். எனது வளர்ச்சிக்காக உள்ளதைக் கொடுத்தவர் மட்டுமல்ல. தனது உள்ளத்தையும் கொடுத்தார். இந்த உயர்ந்த உள்ளத்திற்கு என் உளமார்ந்த நன்றி.

அருட்திரு J.கஸ்மீர்

சடகோப வள்ளல் மட்டும் சரித்திரத்தில் வராதுபோனால் கம்பன் எப்போதோ காணாமல் போயிருப்பான். அவன் கவிதைகள் எல்லாம் பாழாய் போயிருக்கும். சடகோப வள்ளலின் இரக்க குணத்தால் உலகம் கம்பனை ஏறிட்டுப் பார்த்தது. நான் கம்பன் அளவிற்கு உயராவிட்டாலும், கலைத்துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு சத்தியமாய் இவன் சடகோப வள்ளலே. அதிகமாய் கொடுத்தார் என்பதைவிட அதியமான் போல் கொடுத்தார். தனக்குரியதைக் கூட தாரைவார்த்துத் தந்த தனயன் இவனுக்குக் காலம் முழுவதும் என் கனிந்த நன்றிகள்.

திரு. கலைச்செல்வன்

கலைமகள் (சரஸ்வதி) நாவில் நின்றால் கலைகள் நெஞ்சில் நிற்கும். கலைச்செல்வன் அருகிலிருந்தால் வலை (web) தளம் நம் வசமாகும். கலைத்தளத்தில் நின்ற என்னை வலைத்தளத்திற்கு வழிகாட்டி, என் வார்த்தைகளுக்கு திசைகாட்டி உடனிருந்து உற்சாகப்படுத்தி, காலம் முழுவதும் என் கரத்தைப் பிடித்துக் கொண்டு கலைத்துறையில் கரையேற்றத் துடிக்கும் என் கலைத்தாயின் இளைய புதல்வனுக்கு என் கரம் குவித்த நன்றிகள்.

திரு.K.S . ராஜ்குமார்

என் அட்சய பாத்திரம்என்னை நிச்சயம் உயர்ந்த இடத்தில் கொண்டு சேர்க்கும்.பசித்தவர்களுக்கு மட்டுமல்ல இவரது அன்பை ருசித்தவர்களையும் இறவாமல் வைத்திருக்கிற எந்திரன். என் வார்த்தைகளுக்கு வெளிச்சம் தந்த சந்திரன். எனது புள்ளிகளையெல்லாம் கோலமாக்கி கோடுகளை எல்லாம் ஓவியமாக்கி பலரின் பார்வைக்கு பரிமாறிய என் பாசத்தலைவர். உங்கள் பாசத்தோடு இன்னும் மென்மேலும் இலக்கிய உலகில் பறப்பதற்கு என் பக்கத்திலிருப்பதற்கு என் பணிவான நன்றிகள்.