திலகமிட்டு வாழ்த்துகிறேன்

என் போதி மரம்

அருட்சகோ. A.P. சாக்கோ அயத்தில்
இல்ல அதிபர், தாளாளர்
புனித தாமஸ் கலைமனைகள்
குறிச்சி, மேலப்பாளையம் – 627 005

திலகமிட்டு வாழ்த்துகிறேன்

எழுதுகோலைத்  தூக்கிக் கொண்டு ஏர்முனைக்குச் செல்லும் உழவனல்ல என் தம்பி.  போர் முனைக்குப் புறப்பட்டிருக்கிற புதிய மறவன்.

இவரது எழுதுகோல் நிமிர்ந்தால் வேலாகும். வளைந்தால் வில்லாகும். சமுதாயத்தின் ஓட்டைகளைச் சரியாகக் குத்திக்காட்டும். இவரது படைப்புகள் பொழுதுபோக்குக் கவிதைகளல்ல, நம்மையே பழுது பார்க்கும் விதைகள். நெஞ்சை உழுதுபார்க்கும் கருவிகள்.

இவரை இலக்கிய உலகிற்கு நான் பதியம் போட்டு வைக்காவிட்டாலும், இலக்கிய உலகில் பவனி வரும் போது பக்கத்தில் இருந்தவன் நான் என்ற பெருமை எனக்குண்டு.
இவர் புறம் பாடும் புலவன் மட்டுமல்ல, அகம் பாடவும் செய்யும் ஆன்மீகவாதி. இவரது கவிதைகள் இளைய உள்ளங்களை இழுத்துப் பார்க்கவும் செய்யும், எடுத்துப் போர்த்தவும் செய்யும்.

இவருக்கு இது முதல் பிரசவமல்ல. இருப்பினும் ஒவ்வொரு நூல் பிரசவத்திலும் நான் பக்கத்திலிருக்குமாறு பார்த்துக் கொள்வார். நானும் மறுக்காமல், மறக்காமல் அந்நூல் குழந்தையை முதலில் முத்தமிடும் முன்னுரிமையைப் பெறுவேன். இதோ இலக்கிய உலகில் ஏறத்துடிக்கும் என் சகோதரரை வழியில் நின்று வாழ்த்தி வழியனுப்புகிறேன். வாழ்க வளமுடன் ! வருவாய் நலமுடன்!

அன்புச் சகோதரர்.

அருட்சகோ. A.P. சாக்கோ அயத்தில்.