02

Nov

2017

நெருப்புடா……

நெருப்புடா......

நெருப்புடா......

நெருப்பு என்ற வார்த்தையைக் கேட்டவுடன் வெறுப்பாக இருக்கிறது. இது நெருப்பின் குற்றமா? நெருப்பு தின்ன நித்தமும் வாய்ப்புக் கொடுக்கும் மனிதர்கள் குற்றமா? ஆனால் இன்றைய உலகில் எரிந்த நெருப்பு அவ்வப்போது பல்வேறு கேள்விகளை எழுப்பிக்கொண்டேதான் இருக்கிறது. மனிதன்தான் அதனைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறான். காரணம் எதிர்வீட்டுக் கூரையில் எரியும் நெருப்பைப் பார்த்துவிட்டு நமக்கென்ன நம்மவீடு இல்லையே! நாம் பாதுகாப்பாகத்தானே இருக்கிறோம் என கதவை மூடிக் கொள்கிறவன்தானே இன்றைய மானிடன்;! இதனை அறியாமை என்பதா? இல்லை அசட்டுத்தனம் என்பதா? அடுத்து உன்வீடுதான் என்பதனை நெருப்பு வந்துதான் உனக்குப்புரிய வைக்க வேண்டுமா? எனக்கு இன்னும் இது புரியவில்லை!

ஒருநாள் என் வழிபாட்டு நேரத்தில் விவிலியம் பேசியது. நான் மண்ணுலகில் தீயை மூட்டவே வந்தேன் அது இப்போதே பற்றி எறிய வேண்டும் என ஆசைப்படுகிறேன். என்று இயேசு கூறுவதாக அந்த வாக்கியம் வந்தது. அவர் சொன்ன நெருப்பு எது? அதனை ஏன் அவர் வந்து பற்ற வைக்கவேண்டும்? அதற்கு ஏன் அவர் ஆசைப்படவேண்டும். என்று ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிக் கொண்டு இருக்கும்போது இன்னொரு நெருப்பு ஈட்டியாய் வந்து இறங்கியது அன்றைய நாளில்.

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கந்துவட்டிக் கொடுமையின் காரணமாக ஒரு குடும்பம் தன்னை நெருப்புக்குத் தின்னக் கொடுத்து கரியாகிப்போன நிலை. ஐயோ! என்ன பரிதாப நிலை, இதுதான் இந்தியாவின் முகவரியா? அல்லது தமிழகத்தின் தலைவிதியா? அந்தக்காட்சியைக் கண்டவர்கள் கண்ணீரோடு சொன்னகதை பிஞ்சுக் குழந்தைகளின் கரங்களில் இருந்த திண்படண்டங்களைக்கூட அது கீழே போடாமல் உடலை உதறிக் கொண்டு இருந்ததாம். காரணம் அதற்கு நாம் மடியப்போகிறோம். வாழ்வு முடியப்போகிறது என்பதனை அறியாத வயசு அதனால் கருகியது கையில் இருந்த திண்பண்டங்கள் மட்டுமல்ல நெஞ்சில் இருந்த நினைவுகளும்தான். அப்படியென்றால் அங்கு மனிதர்களே இல்லையா? இருந்தார்கள். ஆனால் மனிதர்களாய் அல்ல. என்ன செய்துகொண்டிருந்தார்கள். படம்பிடித்துக் கொண்டிருந்தார்கள். ஊடகத்திற்கு ஊட்டிவிட, ஊடகத்தின் பசியினைப்போக்க உயிர்களைத் தின்னக் கொடுப்பார்களாம் என்ன கொடுமையடா இது? தன் குழந்தைக்கு அந்நிலையென்றால் படம் பிடித்துக்கொண்டிருப்பார்களா? இதுநாடா? இல்லை சுடுகாடா?

இந்த நெருப்பு எப்போதும் இப்படித்தான்! எரிக்க வேண்டுபவர்களை விட்டுவிட்டு எதிரில் வந்தவர்களைப் போட்டுத்தள்ளும். கும்பகோணத்தில் குழந்தைகளை எரித்தது இன்றளவும் நெஞ்சுவலிக்கிறது. நிம்மதி தொலைகிறது. திருச்சியில் ஒரு கல்யாண மண்டபம் பற்றி எரிந்தது. சமையலறை நெருப்பு சமாதியாக்கியது. ஏர்வாடியில் கை, கால் விலங்கிடப்பட்டவர்களை கரிக்கட்டையாக்கி, இரும்பு விலங்குக்குள் இணைக்கப்பட்டு கிடந்தன. இப்படி எங்கெங்கோ எவ்வளவோ, உயிர்களையும் உடமைகளையும் உருத்தெரியாமல் எரித்துவிடுகிறது.

நெருப்பே நீ எங்களுக்குச் சொல்லும் பாடம் என்ன? இதற்கெல்லாம் காரணம் எங்களின் சுயநலமா? பொறுப்பற்ற தன்மையா? பேராசையா? சோம்பலா, செத்துவிட்ட மனிதநேயமா? புரியவில்லையே அக்னிபகவானே! ஆனால் ஒன்றை ஒரு கேள்விதான் உன்னிடம் கேட்க விரும்புகிறேன்.

என் குழந்தைப்பருவத்தில் நீதி போதனை வகுப்பில் கற்றுக்கொடுத்தது. என் ஆழ்மனதில் அப்படியே இருக்கிறது. மனிதர்கள் தவறுசெய்தால், பாவம்செய்தால் இறுநாளில் எரியும் நெருப்பில் தள்ளப்பட்டு எரிக்கப்படுவார்கள் என்று சொல்வார்கள். இதற்குப்பயந்து அந்த நெருப்புக்குப்பயந்து ஓரளவு எங்களை சுத்தமுள்ளவர்களாகச் சுத்திகரித்துக்கொள்வோம். அப்படி நாங்கள் பயந்த அந்த அக்னிப்பகவான் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறான்!. யாரைத் தின்று கொன்று இருக்கிறான். அன்று நடந்த அந்த நிகழ்வில் அந்த பச்சைக் குழந்தைகளின் உடலில் பற்றி எரியும்போது அவன் சட்டையைப்பிடித்து கேட்க எனக்கு ஆசை! தீயே உனக்கென்ன தீராத ஆசையோ, நீ தின்ன உடல் எத்தனையோ! கணக்கிடவில்லையோ?

எரியும் நெருப்பில் தள்ளப்படவேண்டியவர்கள் யார்? வட்டிக்குக் கடன்கொடுத்து வட்டியும், முதலும் பிடுங்கிக்கொண்டு அவன் சட்டி பானைகளைக்கூட சுரண்டிவிட்ட அந்த எட்டிப்பயலை அல்லவா நீ எரித்து இருக்க வேண்டும். அவன் முட்டி மோதி நீதிக்காக அலையும் போது அத்தனை கதவுகளும் அடைக்கப்பட்டதாக அல்லவா அவன் உணர்ந்திருக்கிறான். அந்தத் திறக்காத கதவுகளையும் இரங்காத மனதினையும் அல்லவா தீக்கிரையாக்கி இருக்க வேண்டும். பச்சைக்குழந்தைகள் பற்றி எரியும்போது படம்;பிடிப்பதே குறியாக இருந்த அந்த ஊடக நாய்களை அல்லவா உருத்தெரியமால் அழித்திருக்க வேண்டும். கத்துவட்டிக் கொடுமையால் வீட்டில் அடுப்பெறியாமல் வேதனைத் தீயில் வெந்து கொண்டிருக்கிறார்களே அந்தக்கயவர்களை அல்லவா அடுப்பில் எரிப்பது போல் எரிக்கவேண்டும். வரதட்சனைக் கொடுமையால் ஸ்டவ், சிலிண்டர் வெடித்துச்சிதறும் நிலையில் மாய்ந்து போகக் காரணமாய் இருக்கும் இதயம் காய்ந்த அந்த ஈனர்களை அல்லவா இந்த நெருப்பு எரிக்க வேண்டும். எதிர்ப்பைத் தெரிவிக்க சக்தியின்றி, உண்மையின் பக்கமின்றி எதிரியாகக் கருதி வீழ்த்திவிட்டு எங்கோ ஒரு இடத்தில் எரித்துவிட்டுச் செல்லும் அந்த எத்தர்களை அல்லவா எரிக்க வேண்டும்.

அக்னி பகவானே உன் அவதாரத்தை மாற்றி உன் அடிநாதத்தை முழுங்கு பாவம் செய்பவர்கள் பதருகளைப் போன்று எரிக்கப்படவேண்டும். அது நீதியை விரும்பும் நெஞ்சங்களால் மட்டுமே முடியும். தருமனே தவறு செய்யும்போது தம்பி பீமன் கொதிக்கிறான். தம்பி எரிதழல் கொண்டுவா! அண்ணன் கையை எரித்திடுவோம் என்று. அதேபோல் கையூட்டு வாங்கும் கரங்கள் முழுவதையும் தீ மூட்டுவோம்.

சோம்பேறிகளைச் சேகரித்து பதறுகளை எரிப்பதுபோல் பக்குவமாய் எரித்திடுவோம். சாதிகளைச் சொல்லி சதுராட்டம் ஆடும் கயவர்களை வேரோடு பிடுங்கி சொக்கப்பானை கொழுத்துவோம். தீ மூட்டும் கரங்கள் வேண்டும். அதற்கு என் இளைய சமுதாயம் வேண்டும். அவன் இதயம் சமூக அவலங்களைக் கண்டு பற்றி எறியவேண்டும். இளைஞனே உன் இதயத்தை நான் உற்று நோக்கும்போது பற்ற வேண்டிய இடம் பற்றவில்லையே எனப் பதறுகிறனே;. ஆனால் பற்றும் என நம்புகிறேன். பாரதி சொன்ன அக்னிக்குஞ்சொன்று கண்டேன் என்பதுபோல் என் இளைய சமுதாயமே நீ நெருப்பாய் இருப்பாய். கயவர்களை எரிப்பாய். இயேசு சொன்னது அந் நெருப்பு பற்றியெறிய ஆசைப்படுகிறேன். இளைஞனே, இறைவனுக்குச் சித்தமாக இப்பூமியை சுத்தமாக்கு.

ARCHIVES