17

Aug

2015

சக்தி தானாகவே பிறக்கும்

சக்தி தானாகவே பிறக்கும்

சக்தி தானாகவே பிறக்கும்

செயல்களைச் செய்துகொண்டே இருங்கள் சக்தி தானாகவே பிறக்கும். சக்தி என்பது எங்கிருக்கிறது? எங்கிருந்து பிறக்கிறது? எங்கு சென்று முடிகிறது? என்று யாராவது கேள்வி கேட்டுப் பார்த்திருந்திருக்கிறீர்களா? இல்லையே!

செயல்கள்தான் சக்தியைப் பெற்றுத் தருகின்றது. சக்திதான் பூமியைச் சுழலவைக்கின்றது. சக்திகளுக்கெல்லாம் உயர்ந்த சக்தி மனித சக்தி. இது பூமியைப் புதுப்பிக்கும் புதிய பணியை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது மறக்கமுடியாத உண்மை. அதனால்தான் சக்தியை கடவுள் என்று மக்கள் வழிபடுகிறார்கள்.

ஆனால் சக்தி இன்றளவில் ஆளுக்கு ஆள், நாட்டுக்கு நாடு, இடத்திற்கு இடம் மாறுபட்டுக்கொண்டேயல்லவா செல்கிறது. காரணம் என்ன? இதுதான் நாம் மேலே குறிப்பிட்டது. செயல்களைச் செய்யுங்கள் சக்தி தானாகவே பிறக்கும், செயல்களைச் செய்யாதவர்கள் செயல் இழந்து போவார்கள். தேங்கிக்கிடக்கின்ற நீர் மட்டுமல்ல, சக்தியானாலும் தேங்கிக்கிடந்தால் சாக்கடையாகத்தான் போகும், துருதுருவென்று இல்லாவிட்டால் துருப்பிடித்துத்தான் போகும்.

மனிதன் கருவறையிலிருந்து கல்லறை வரை ஓடிக்கொண்டே இருக்கும் ஓர் சமூக ஜீவி. இடையில் அவன் எங்கு தேங்கினாலும் அவன் இருட்டுக்குள் கிடக்கும் இரும்புத்துண்டுபோல் ஆகிவிடுவான். ஓடும்வரைதான் நதி, வீசும் வரைதான் காற்று, சுற்றும் வரைதான் பூமி, இவையெல்லாம் தன்னை இழந்துவிட்டால் என்னவாகும்? நம் அனைவருக்கும் இது தெரிந்ததுதானே! ஆனால், தெரிந்த மனிதன் மட்டும் தன்னை ஏன் இடைநிறுத்தம் செய்து விடுகிறான்?

நாம் குழந்தையாக இருக்கும் போது தங்கு தடையின்றி இயங்கிக்கொண்டே தான் இருக்கிறோம், ஓடுகிறோம், சிரிக்கிறோம், ரசிக்கிறோம், விளைவு நிம்மதியாகத் தூங்குகிறோம். நோய் நொடியின்றி இருக்கின்றோம்.

மாணவர்களாக மாறியபொழுது பல்வேறு பயிற்சிகளுக்கு உட்படுத்துகிறோம். செயல்களைச் செய்துகொண்டே இருக்கிறோம். போட்டி மனப்பான்மையை உருவாக்குகிறோம். வெற்றியடைகிறோம், முயற்சி செய்கிறோம். விழுந்து எழுகிறோம். நம்பிக்கை பெறுகிறோம். சக்தி பெருகிக்கொண்டேதான் இருக்கிறது. இப்பருவத்தில்தான் சோம்பல் மனதிற்குள் கூடுகட்ட ஆரம்பிக்கிறது. இதனால் மந்தப்புத்தி ஏற்படுகிறது. செயல்களைச் செய்ய மறப்பதினால் சக்தி கருவிலே கொல்லப்பட்டு கல்லறைக்கு அனுப்பப்படுகிறது. நொண்டிக்குதிரையும், சண்டிக்குதிரையும் வெற்றிக்கோட்டை ஒருநாளும் தொட்டதில்லை. எனவே மாணவர்கள் தன்னுடைய செயல்களை சரியாகச் செய்யாததால் அணையில்லாமல் காட்டாற்று வெள்ளம் போல் தன்னுடைய திறன்கள் எல்லாவற்றையும் வீணடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அடுத்து இளமைப்பருவம் வருகிறது. தான் இளைஞன், தன்னால்தான் இந்த நாடு இயங்கிக்கொண்டிருக்கிறது என எண்ணிக்கொண்டு சக்தியை வீணடிக்கின்ற நிலையில் இருப்பார்கள். புரியாத நிகழ்வுகளுக்குப் போராட்டம் நடத்துவார்கள். இல்லாத ஒன்றை அடைய கற்பனையில் மிதப்பார்கள். இருப்பதைத் தெளிவாக்க ஒப்பனைகள், ஊடகங்கள் போன்றவற்றில்; உலாவி வருவார்கள். யாருமே நம்மைப் புரிந்துகொள்ளவில்லையே என இருமாந்துபோய் நிற்பார்கள். தன்னுடைய உணர்ச்சிகளைக் காயப்படுத்துகிறார்கள் என்று எண்ணிக்கொண்டு எதற்கும் எவர்மீதும் எரிந்து விழுவார்கள். இவர்கள் ஒருசாரார். இன்னொரு பிரிவினரோ திட்டமிட்டுப் பயில்வார்கள் திறமைகளில் ஒளிர்வார்கள். ஓவியனாக, கவிஞனாக, கணிணி வல்லுனராக, கலைஞனாக, சிற்பியாக, நடிகனாக, இயக்குநராக இந்த உலகையே வென்று வெற்றிக்கொடிநாட்டுவார்கள். ஏனென்றால் இவர்கள் உழைத்துக்கொண்டே இருப்பார்கள். உற்சாகம் ஊற்றெடுத்துக் கொண்டே இருக்கும்.

வெற்றியடைந்தவர்களையெல்லாம் கேட்டுப்பாருங்கள் திட்டமிட்டு வெற்றியடைந்தவர்கள் சொற்பப்பேர்தான். எதையாவது செய்யவேண்டும் சாதிக்கவேண்டும் என்று செயல்பட்டுக்கொண்டே இருந்தவர்களிடம் மட்டுமே சக்தி பிறந்திருக்கிறது. சாதனைகள் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால் இன்று சாகும்வரை உழைத்துக்கொண்டே இருக்கிற உழைப்பாளிகளைப் பாருங்கள். சாகும்வரை அவர் சாதனை தொடர்ந்து கொண்டே இருக்கும் அவர்கள் வானத்து நட்சத்திரம்போல் கடைசிவரை ஒளிர்ந்துவிட்டு உதிர்வார்கள்.

அடுத்த நிலை வருகிறவர்கள் அரசுத்துறை அலுவலர்கள். இவர்களுக்கு அரசு வயதை நிர்ணயித்து ஓய்வு கொடுக்கிறது. இன்றைய உலகில் இவர்கள் இருபிரிவாக இருக்கிறார்கள். ஒன்று, அவ்வளவுதான் நம் ஆட்டம் முடிந்துவிட்டது என்று அடங்கிப்போகிறவர்கள். வயசு உடம்புக்குத்தான் மனதிற்கில்லை என்று இறக்கை கட்டிப்பறப்பவர்களும் உண்டு. ஓய்வுபெறும் வயது வந்தவுடன் இவர்கள் ஓய்வுபெற எண்ணமாட்டார்கள் தன் பணியை மாற்றிக்கொள்கிறார்கள். கல்வித்துறையில் வேலை செய்கிறவர்கள், டியூசன் சொல்லிக்கொடுக்கிறார்கள். பல ஆங்கிலப்பள்ளி, கல்லூரிகளில் முதல்வராக, விரிவுரையாளராக தன்னுடைய படைப்பாற்றலைக் கொடுக்கும் பிரம்மாக்களாகப் பவனிவருகிறார்கள். இவர்கள் சூரியன்கள். மேற்கில் மறைவார்கள் மீண்டும் கிழக்கே உதிப்பார்கள்;; அனுமதி கிடைத்தால் அகிலத்தையே ஆளும் அஞ்சா நெஞ்சர்கள். வயது முடிந்தவுடன் துரும்பைக்கூட தொடவிரும்பாத சுடு மூஞ்சிகள், தொலைக்காட்சிப்பெட்டி, செய்திதாள்கள் இவற்றிலே முடங்கிப்போனவர்கள் இறக்கை இழந்த பறவைகள் இரயில் நிலையங்களில் பயனற்றுக்கிடக்கும் இரயில் பெட்டிகளுக்கு ஒப்பானவர்கள் சிலர் ஒப்பந்த வேலைக்காரர்கள், சிலர் வெளிநாடுசென்று திரும்பியவர்கள், சில அரசியல்வாதிகள், சில படைப்பாளர்கள் இவர்கள் சில காலமே விழுந்து விழுந்து வேலை செய்துவிட்டு அந்தக்காலம் முடிந்தவுடன் அடுத்த நிலைக்கு கடந்து சென்றுவிடவேண்டும். இல்லாவிட்டால் அந்த நாட்களையே சொல்லி அந்தப்படைப்புக்களே சொல்லி காலம் முழுவதும் கழித்துவிடும் இவர்கள் மின்சாதனத்தைப் பொதிந்து வரும் அட்டைப்பெட்;டிக்குச் சமமானவர்கள் அப்பொருள் உள்ளே இருக்கும் வரைதான் அதற்கு மதிப்பு அதன்பின் அது தூக்கி எறியப்படும் ஆகவே செயல்கள் நடந்து கொண்டே இருக்க வேண்டும் அப்போதுதான் சக்தி பிறந்து கொண்டே இருக்கும் ஏதோ ஒரு செயலைச் செய்துவிட்டு உலகம் முடியும்மட்டும் அதைச் சொல்லியே வாழ்ந்துவிடலாம் என்று எண்ணுபவர்கள் அருங்காட்சியத்தில் உள்ள எலும்புக்கூட்டுக்குச் சமமானவர்கள் காட்சிப்பொருளாக இருப்பார்கள். இப்போது என்ன செய்கிறீர்கள் என்று சொல்லுங்கள் இருபது வருசத்திற்கு முன் நடந்ததைச் சொல்லாதீhகள் பைத்தியக்காரன் உளருவதைப் போல உலகம் நம்மை வேடிக்கை பார்க்கும் .

இன்னும் சிலர் நன்றாக வேலை செய்வார்கள் ஆனால் பாகுபாடுபார்ப்பார்கள் தனக்குப்பிடித்த இடம், நபர், சூழ்நிலை, தலைவர், பணம், பொறுப்பு, பதவிகள், சலுகைகள் இவற்றின் அடிப்படையில் வேலை செய்வார்கள். இந்தப் பொறுப்பு, பதவிகள், சலுகைகள், இவற்றின் அடிப்படையில் வேலைசெய்வார்கள். இந்தப்பொறுப்பு கொடுத்தல் இந்தத்தலைவர் வந்தால், இந்த இடத்தைக் கொடுத்தால் இமயத்தையே புரட்டிப்போடுவார்கள், மாறாக நடந்துவிட்டால் மாற்றுடைகூட அணியாத முற்றும் துறந்தவராக முறுக்கிக்கொள்வார்கள் இதனைத்தான் கிராமத்தில் சொல்வார்கள் “மேய்த்தால் மாமியாரை மேய்ப்பேன் இல்லாவிட்டால்பரதேசம் போவேன் என்பதாகும். பிடித்த சூழ்நிலையில் இயங்குவது. பின்பு சில காலம் எதுவும் செய்யாமல் இருப்பது, பின்பு இயங்குவது இது எப்படி முன்போல் இயங்கமுடியும். இவர்களிடம் சீரான இயக்கத்தை உலகம் எதிர்பார்க்க முடியாது. இவர்களிடம் பொறுப்பைக் கொடுப்பது காவல் நிலையத்தில் விபத்தில் வந்து பழுதடைந்து பலநாட்களாகக் கிடக்கும் வாகனத்தை எடுத்து பெட்ரோல் போட்டு இயக்க நினைக்கும் மூடனின் செயலைப் போலாகிவிடும்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். இன்றைய இயலாத சமுதாயம் காசு கொடுத்தால் எதையும் செய்வோம். காசு இல்லாவிட்டால் கழுத்துக்குக்கீழ் உள்ள அழுக்கைக்கூட கழுவமாட்டோம் என்று. இது எவ்வளவு மோசமான தலைமுறை காசு, காசு என்று பிணமாக வாயைத்திறந்து, பேயாய் அலைகிற கூட்டம் என்று செயலைச் செய்ய, சக்தியைப் பிறப்பெடுக்கவைக்க இந்தச் சமூதாயத்pற்கு பயனுள்ளவைகளாக மாற்ற இவர்கள் பேச்சு, மூச்சு எல்லாமே பணம்தான் காசு கொடுத்தால் கலெக்டராகக் கூட பணிசெய்வார்களாம். காசு இல்லாவிட்டால் காலுக்கு கீழே கிடக்கும் தூசியைக்கூட குப்பைத் தொட்டியில் போடமாட்டார்களாம் இந்தத் தலைமுறையை என்னவென்று சொல்வது இவர்கள் இருந்தாலும் ஒண்ணுதான்……
எரிபொருள் இருந்தால் இயங்கும் இயந்திரங்களுக்கும் இவர்களுக்கும் என்ன பெரிய வேறுபாடு
பகவத்கீதை கூறியதுபோல “கடமையைச் செய்”. விவிலியம் கூறுவது போல நாங்கள் பயனற்ற ஊழியர்கள் செய்ய வேண்டியதைச் செய்தோம் என்பார்கள்.

ஆகவே செயலைச் செய்து கொண்டே இரு! சக்திகள் நமக்குள் பிறந்து கொண்டே இருக்கும். சிலர் இயற்கையிலிருந்து சக்தி வருகிறது என்பார்கள். எந்திரம் மூலமாகச் சக்தி வருகிறது என்பார்கள், இறைவன் மூலமாக சக்தி வருகிறது என்பார்கள். ஆனால் எல்லாம் நமக்குள்ளிருந்து வருகிறது! ஓடிக்கொண்டே இரு நதியாய், எரிந்துகொண்டே இரு சுடராய், வீசிக்கொண்டே இரு காற்றாய், சுற்றிக்கொண்டே இரு பூமியாய், எதற்கும் அஞ்சாதே! எதற்கும் தயங்காதே! எதைக்கண்டும் நிற்காதே! யாருக்காகவும் காத்திராதே! செயலைச் செய்துகொண்டே இரு சக்தி தானாகப் பிறக்கும்.

- சகோ. சு. ஜோ அந்தோனி தி.இ.ச.,

ARCHIVES