11

Dec

2021

சபாஷ் சூர்யா…

மறந்து போன, அல்லது மறைக்கப்பட்ட அல்லது சிந்தனையில் இல்லாத அல்லது சீரழிக்கப்பட்ட பல நிகழ்வுகளைச் சீர் தூக்கிப் பார்த்து மீண்டும் ஒருமுறை நமது நினைவுக்குக் கொண்டுவந்து அவற்றின் நிறைகுறைகளை ஆராய்ந்து புத்தொளி பாய்ச்சுகின்ற புண்ணியவான்களின் மனங்களுக்கெல்லாம் எப்போதுமே என் மனம் மாலையிடும். அதில் தற்போது என்னை அதிகம் கவர்ந்தது நடிகர் சூர்யா தயாரிப்பில் உருவான “ஜெய்பீம்” என்ற திரைப்படம்.

இப்படி ஒரு திரைப்படம் வராதுபோனால் இளைய தலைமுறைக்கு இருளர் என்ற ஒரு இனம் இருக்கிறது என்பதே இருட்டடிக்கப்பட்டிருக்கும். நம்மைச் சுற்றி வாழ்கின்ற ஒரு பாமர அல்லது பாட்டாளியின் வலிமிகுந்த பக்கங்களைப் பற்றி இதுவரை அறியாமல் இருந்திருக்கிறோமே! என என்னையே நான் கேவலமாகப் பார்க்க வைத்துவிட்டது. இத்திரைப்படம் அத்திரைப்படத்தில் அத்துமீறும் ஒரு போலிஸ் அதிகாரியின் வரம்பு மீறிய அதிகாரத்தை அப்படியே தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள் இருந்தாலும் காவல்துறையினர் அதனைப் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டிருக்கிறதையும் நான் பெருமகிழ்ச்சியோடு மதிக்கிறேன்.

எத்துறையிலும் குறைகள் உண்டு. நிலவுக்கும் களங்கம் உண்டு. ஒவ்வொரு துறையிலும் கருப்பு ஆடுகள் இருக்கத்தான் செய்கிறது. அதேபோல் இந்தக் காவல் அதிகாரி ஒரு கருப்பு ஆடு எனக் காவல் துறையினர் எந்த எதிர்ப்பினையும் காட்டாமல் கடந்து சென்றிருக்கிறார்கள் அவர்கள் அத்தனைபேருக்கும் எனது நன்றிகள்.

அந்தப் படத்தைப் பார்க்கும் போது கிடைத்த அதிகாரத்தை எவ்வளவு தவறாகப் பயன்படுத்தி நீதியைக் கொல்லுகிறார்கள் என்று நினைக்கும்போது நெஞ்சு முழுவதும் அனலில் பட்ட புளுப்போல் துடிக்கிறது. அது படத்தில் வரும் காட்சிதானே என மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது. அடி விழுவது என்னவோ அவர்களுக்கு ஆனால் வலி என்னமோ பார்க்கிற கண்களுக்கு. இன்னும் அந்தப் பக்கங்கள் நம் அங்கங்களை அறுத்து எறிந்து கொண்டுதான் இருக்கிறது.

நம் நாட்டில் சாதியைச் சொல்லி சத்தமிடுகிறோம். சங்கங்களைக் கூட்டி கூச்சலிடுகிறோம். தமிழ் எங்கள் உயிர் அதற்கு உயிரைக் கொடுப்போம். ……ரைக் கொடுப்போம் என்றெல்லாம் முழங்குகிறோம். அவர்கள் இருக்கிற நாட்டில் தானே இவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்? பூனைக்கு புணுகு தடவிக்கொண்டிருக்கிறார்களா? மனித உரிமை என்கிறோம். மனிதநேயம் என்கிறோம். அவர்கள் எல்லாம் மாடுமேய்க்கப் போய் விட்டார்களா? இவர்கள் கத்தல்கள் எல்லாம் காக்கை, குருவிபோல சும்மா காற்றில் பறக்கத்தானா? பள்ளியில் சாதிக் கயிற்றை ஆசிரியர் கழற்றச் சொன்னாலே படையெடுத்து வருகிற படைகள் எல்லாம் இப்போது பஞ்சம் பிழைக்கப் போய்விட்டதா? எல்லாப் பகல்வேசமும் அப்பட்டமாகத் தெரிந்துவிட்டதா?

நல்லவர்களே! நம்மைச் சுற்றித்தானே இவர்கள் வாழுகிறார்கள். அவர்களுக்காக நாம் என்ன செய்தோம்? என்ன செய்யப் போகிறோம் அவர்களுக்காக ஏன் உங்கள் இதயங்கள் துடிக்கவில்லை? இதயத்தில் எரிமலை வெடிக்கவில்லை? ஏனென்றால் நம்மில் பலர் சுயநலப் போர்வையை மூடிக்கொண்டு சுருண்டு படுத்து இருக்கிறோம். அதற்காகச் சுற்றத்தாரைக் கூட உதறிவிட்டு சுதந்திரம் என்ற பெயரில் இன்று தனிமரமாய் தள்ளாடிக் கொண்டு இருக்கிறோம்.

அந்தப் படத்திற்கும் ஒரு சாதியினர் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். சாதியினர் முழுவதும் அல்ல. சிலசில சலசலப்புகள். நல்ல விசயத்திற்காக நாம் கொஞ்சம் அழிந்தால் தான் என்ன? அந்தத் தியாக உள்ளம் இல்லாதவர்களா தென் இந்தியர்கள்? அதனைப் பற்றி ஒருவர் சொல்லும்போது அழகாகச் சொல்லுவார். “காலண்டர் தொங்கிக் கொண்டிருக்கலாம். காலண்டரைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கக்கூடாது”. என்பதை மனதில் வைத்து அதனைக் கடந்து போவோம் நீங்கள் நல்லவர்கள் நிச்சயம் கடந்துபோவீர்கள்.

அந்தப் படத்தில் சில மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அந்தக் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர், வழக்கறிஞர் சந்ரு அவர்கள் மனிதர்கள் அல்ல மகான்கள். அந்த மகான்களுக்குத் தலைவணங்குகிறேன். அவர்களால் தான் புதைக்கப்பட்ட நீதி புறப்பட்டு வந்தது. இருளர்கள் வாழ்வில் ஒளி பிறந்தது.

நல்லவர்களே காலம் நமக்கும் காத்திருக்கிறது. இந்த இருளர்களைப் போல இன்னும் எத்தனையோபேர்கள் இருட்டில் கிடக்கிறார்கள். அவர்களுக்கு எவரேனும் ஒருவருக்காவது ஒரு சிறிய புண்ணியத்தைச் செய்யாமல் இந்தப் பூமியை விட்டுப் போனால் நம்முடைய வாழ்க்கை வரலாறு பாவக் கணக்கில்தான் பதிவுசெய்யப்படும். எவராவது ஒருவரின் துன்பத்தைத் துடைத்த பெரும் புண்ணியம் நமக்கும் இருக்கட்டும். இருளான பகுதிகளுக்குச் சிறிய மெழுகுவர்த்தியாக மாறுவோம். யாரையாவது ஒருவரைக் கரைசேர்த்த புண்ணியம் நம் கரங்களுக்கு இருக்கட்டும். வந்தோம் போனோம் என நம்முடைய வரலாறு முடிந்திருக்கக்கூடாது. அப்படி இருந்தால் நாம் கருவிலே காணாமல் போயிருக்க வேண்டும். கீதை சொன்னதை விவிலியம் பகிர்ந்ததை, குர்ஆன் ஓதியதை, ஓடுக்கப்பட்ட மக்கள் உரிமை வாழ்வு பெற நாம் உழைப்போம். முன்னே இறக்கும் இதனைச் செய்து முடிப்போம். கிறிஸ்மஸ் வருகிறது ஏழைகள் கேட்காமலே கொடுப்போம். இருட்டை வெளிச்சமாக்குவோம். நிச்சயம் செய்வோம். நாளை நமது பெயரும் ஒரு வரலாற்றில் வரும் நம்பிக்கையோடு நடப்போம்.

“குருடருக்குக் கண் ஆவோம்
செவிடருக்குப் பண் ஆவோம்”

ARCHIVES