25

Feb

2021

மரியன்னை குடும்பம்…

அன்பிற்கினிய முன்னாள், இந்நாள் மரியன்னைக் குடும்பத்தின் இனிய நல் உள்ளங்களுக்கு இன்றைய புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியின் முதன்மைப் பணியாளரின் (Headmaster) இனிய வாழ்த்துக்களும், வணக்கங்களும்.

எம் வாழ்வின் மகிழ்ச்சியான தருணத்தில் பயணித்துக்கொண்டு இருக்கிறேன். இந்த மகிழ்ச்சி நம் மரியன்னைக் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பகிர்ந்து இரட்டிப்பு மகிழ்ச்சியில் இன்பம் காண பல்வேறு முயற்சிகளும் முன்னெடுப்புகளும் எடுத்து வருகிறேன். அதற்கு நீங்கள் அனைவரும் தருகின்ற உற்சாகத்திற்கும், உடனிருந்து செய்யும் உதவிகளையும் நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன்.

ஓவ்வொருவருடைய மானிட வாழ்வும் கருவறையில் உருக்கொள்கிறது, வகுப்பறையில் பட்டைதீட்டப்படுகிறது. எனவேதான் ஒவ்வொருவரும் இறப்புவரை இந்த இரண்டையும், தாயையும், பள்ளியையும் அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிடுவது கிடையாது.

எனவே ஒவ்வொருவரும் பள்ளியைப் பற்றி நினைத்தாலே பசுமையான நினைவுகள் நெஞ்சில் நிழலாடும். மீண்டும் பள்ளிக்குப் போக மாட்டோமா? அந்த இடத்தில் அமர மாட்டோமா? அந்த நண்பன் இப்போது எங்கு இருக்கிறான் தெரியுமா? அந்த ஆசிரியர் இன்னும் இருக்கிறாரா? இப்படி என்னென்ன கேள்விகள், என்னென்ன தேடல்கள்?.

நாம் செய்த சேட்டைகள், வாங்கிய அடிகள், பெற்ற தண்டனைகள், பெற்ற பரிசுகள் அப்போது கிடைத்த மகிழ்ச்சி எப்போதும் இல்லையே என்ற ஏக்கமும் எதிர்பார்ப்பும் எல்லோருக்கும் தானே இருக்கிறது.

இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவன் என்ற முறையில் இந்தப்பள்ளிக்குத் தலைமையேற்ற 2018 ஆம் ஆண்டு நான் செய்த முதல்பணி முன்னாள் மாணவர்கள் சங்கம் அமைத்து அதற்குப் பொறுப்பான தலைவர்களை நியமித்து இப்போது சீரோடும் சிறப்போடும் பயணித்துக்கொண்டு இருக்கிறது.

அனைவருக்கும் தெரியக்கூடிய சகோ. ஆ. செங்கோல் ஐயா தலைமையில் 2018 ஆம் ஆண்டு பள்ளியின் பவளவிழா (75) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மூன்று நாட்கள் விழாவில் 2 ஆம் நாள் முழுவதும் முன்னாள் மாணவர்கள் இணைந்து சிறப்பித்தார்கள். முன்னாள் ஆசிரியர்களைக் கௌரவித்தார்கள். இது ஒரு வரலாற்றுப்பதிவாக அமைந்தது.

அன்றைய நாள் தொடங்கி இன்றுவரை எங்களுக்குத் தெரிந்த அளவில் முன்னாள் மாணவர்களைத் தொடர்பு கொண்டு இணைத்து வருகிறோம். மீண்டும் பள்ளிக்கு வந்து பள்ளியைப் பார்வையிட்டுச் செல்லும் மாணவர்களை அன்போடு வரவேற்கிறோம். இக்கடிதம் மூலம் காண்கின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வர அன்போடு அழைக்கிறேன்.

இந்த சந்தோசமான தருணத்தில் நம் பள்ளியின் பழைய மாணவர்களின் பங்களிப்பையும் பாசத்தோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். 1993-94 ஆம் ஆண்டு XII-D பயின்ற மாணவர்களில் திரு. இப்ராகிம், திரு. செல்வராஜ், திரு. ஆரோக்கியராஜ் மற்றும் நம் அலுவலக உதவியாளர் திரு. அகஸ்டின் ஆகியோர் தன் வகுப்பு மாணவர்கள் அனைவரின் பங்களிப்போடு நமது மரியன்னை பள்ளியினுடைய அலுவலகத்தை தங்கள் சொந்த செலவில் அழகுற அமைத்து தந்திருக்கிறார்கள். பல்வேறு இடங்களில், பல்வேறு பணிகளில் இருப்பதால் Whatsapp மூலம் இணைந்து இப்பணியினை மேற்கொண்டார்கள். அருகிலுள்ள திரு. இப்ராகிம், திரு. செல்வராஜ், திரு. ஆரோக்கியராஜ் மற்றும் நம் அலுவலக உதவியாளர் திரு. அகஸ்டின் ஆகியோர் உடனிருந்து இப்பணிகளை மேற்கொண்டார்கள். தன்னை வளர்த்துவிட்ட பள்ளிக்கு தங்கள் நன்றியினை இப்பணிகள் மூலமாகச் செய்திருக்கிறார்கள். அவர்களை நன்றியோடு நினைத்துப்பார்க்கிறோம். நீங்களும் உங்களது நன்றியையும், பாரட்டுக்களையும் பதிவு செய்யுங்கள், வாழ்த்துங்கள் வளரட்டும்.

மீண்டும் உங்கள் கனிவான கவனத்திற்கு! மீண்டும் பள்ளிக்கு வாருங்கள், பழகுவோம், பகிர்வோம், பழைய நினைவுகளைப் புதுப்பித்துச் செல்லுங்கள், நமது தாஜ்மகால், நமக்காகக் கட்டப்பட்ட தாஜ்மகால் நமது புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளிதானே! வருடம் ஒருமுறையாவது வந்துவிட்டு போங்களேன்.

உங்கள் வாழ்க்கைப் பாடத்தை வருகின்ற தலைமுறையிடம் வாசித்துவிட்டுச் செல்லுங்கள். முன்னாள் மாணவர்கள் என்ற சங்கமத்தில் கலந்து சந்தோசத்தைப் பகிருங்கள், பள்ளியில் எல்லா வகையிலும் முன்னாள் மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து கொண்டிருக்கிறோம். அதனை உங்களோடு பதிவு செய்கிறோம்.

உங்களின் தரமான பதிவுகளை நமது வலைத்தளப் பொறுப்பாளர் சகோ. C. ஜெயக்குமார் (70103-44129) அவர்கள் வழியாகப் பகிர்ந்தால் இதன்மூலம் எட்டியிருப்பவர்களிடமும் நமது இதயத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்.

மேலும் முன்னாள் மாணவர்கள் தற்போது ஆசிரியர்களாக இருந்து இந்த நிகழ்வை நெறிப்படுத்துகிறார்கள். ஆகவே வாருங்கள் ஒன்றிணைவோம். ஓன்றிணைப்போம். நமக்குத் தெரிந்த முன்னாள் மாணவர்களுக்கு முடிந்தவரை எடுத்துச் சொல்வோம்! எடுத்துச் செல்வோம்! வாழ்க வளமுடன்.

தொடர்புக்கு :-

Mr. Raj Mohan : 9486480374 – 7550362806
Mr. Jothi : 8637655432
Mr. Murugesan : 9486943507

ARCHIVES