21

Feb

2021

கவலைப்படுகிறேன்!…

ஏன்? எதற்குக் கவலைப்படுகிறீர்கள்? என்று கேட்பீர்கள். கவலைப்படுகிறவர்களைக் குறித்துக் கவலைப்படுகிறேன். உங்களுக்குச் சற்று அதிர்ச்சியாக இருக்கலாம்! ஆச்சர்யமாகவும் இருக்கலாம்.!

கவலைப்படுகிறவர்களைக் கொஞ்சம் கேட்டுப் பாருங்கள். வேலை போயிடுச்சு என்பான். இன்னொருவன் வேலை கிடைக்கவில்லை என்பான். கிடைக்கலாண்ணாலும் கவலை கிடைச்சாப் போயிருமோன்னு கவலை. குழந்தை இல்லை என்றும் ஒருவனுக்குக் கவலை. என் குழந்தையை வச்சுத்தான் எனக்குக் கவலை என்பது மற்றவன் கவலை. பெண் குழந்தை பிறந்து விட்டதே என்பது ஒருவருக்குக் கவலை. கடைசிக் காலத்தில் கவனித்துக் கொள்ள பெண் பிள்ளை இல்லையே என்பது மற்றவரது கவலை. என் குழந்தை நல்லா படிக்கவில்லையே என்று ஒருவருக்குக் கவலை என் குழந்தை நல்லாப் படித்தான் அமெரிக்கா போய்விட்டான் கடைசிக் காலத்தில் கூட எங்களோடு இல்லை என்பது கவலை பயிர் வளர்த்தேன் மழை இல்லை என்று கவலை மழை வந்துவிட்டது. அறுவடை செய்ய முடியவில்லை என்று கவலை. இப்படி கவலை என்பது காலத்தின் சூழ்நிலை எல்லாம் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு பாதிப்படைவதையெல்லாம் துக்கமாக எடுத்துக் கொண்டு பயணம் செய்யும் பாதையில் மேடு பள்ளமே வரக்கூடாது என்று எண்ணுபவர்கள்தான் கவலைப்பட வேண்டும்.

ஒரு மனிதனின் சராசரி வாழ்வு 60 ஆண்டுகள் என வைத்துக் கொள்வோம். அதில் மூன்றில் ஒரு பங்கு தூங்கிக் கழிக்கிறோம் என்றால் மீதம் 40 ஆண்டுகள்தானே அதில் 10 ஆண்டுகள் பெற்றோர் பாதுகாப்பில் வாழப் போகிறோம். கடைசிப் பத்தாண்டுகள் வயதாகிவிட்டது. பிள்ளைகள் பார்த்துக் கொள்வார்கள் என்போம். எஞ்சியிருப்பது 20 ஆண்டுகள் தானே. இதனைத் தான் நமது வாழ்வாக வாழ்ப்போகிறோம் இதற்குள் எதற்கு இத்தனை கவலைகள்?

விவிலியம் பேசுகிறது நீங்கள் கவலைப் படுவதனால் உங்கள் தலை மயிரைக் கூட ஒரு முழம் கூட்டவும் முடியாது. குறைக்கவும் முடியாது என்கிறது. உதிரும் மயிரைக் கூட ஒன்றும் செய்யமுடியாது என்றால் பிறகு எதற்குக் கவலைப்படுகிறோம். கீதை சொல்கிறது கவலை என்பது உன் தலைக்கு மேல் பறக்கும் பருந்து போன்றது. அது தவிர்க்க முடியாது. ஆனால் அது உன் தலையில் கூடு கட்டாமல் பார்த்துக் கொள் என்கிறது.

எதிர்பார்ப்புகள் இடரும் போது, நாம் கவலை கொள்கிறோம். குறைத்துக் கொள்ளுங்கள் கவலை இருக்காது. எதிர்காலத்தைப் பற்றி எண்ணும்போது கவலையாக இருக்கும். நிகழ்காலத்தை மட்டும் சந்தோசமாகக் கொண்டாடுங்கள் எதிர்காலம் நிகழ்காலமாகட்டும். எல்லாம் எண்ணியதுபடி நடக்கும். இப்போது ஒவ்வொருவரும் அடைந்த புகழையும் வகிக்கும் பதவியையும் கிடைத்த வாய்ப்பையும் அனுபவிக்கும் மகிழ்ச்சியையும் இறந்த காலத்தில் அவர்கள் எண்ணிப்பார்த்தது இல்லை. தானாகவே அமைந்தது.

வெளிநாட்டில் தனது பெண் தானே சம்பாதிப்பது தனக்கென ஒரு துணையைத் தேடிக் கொண்டால் பெரிதும் மகிழ்வார்கள். நம் நாட்டில் ஒரு பெண் தன் தகப்பனை மறந்து துணையைத் தேடினால் பெரிய குற்றமாகக் கருதப்படுகிறது. ஆக மனிதன் மனநிலைதான். துன்பத்தை அடைகாத்து கவலையைப் பெற்றெடுக்கிறது.

ஏன் கவலைப்படுகிறீர்கள்? எனக்குப் பிடித்தமானவர் இறந்துவிட்டார்! சரி நீங்கள் எத்தனை ஆண்டுகள் இருக்கப் போகிறீர்கள்? என் வேலை போய்விட்டது? உங்கள் வேலை போகவில்லை! அந்த வேலை போய்விட்டது. உங்களுக்கு வேறு வேலை இருக்கிறது. என் தொழில் நஷ்டமடைந்து விட்டது! உங்களுக்கு மட்டுமா? நஷ்டமடையாத தொழில் என்று ஏதாவது உண்டா? தென்றல் மட்டுமே வீசுமா? புயல் கிடையாதா? பிறப்பைக் கொண்டாடுகிற நீங்கள் இறப்பு இல்லையென்றால் உங்களை நீங்களே அல்லவா அழித்துக் கொள்ளவேண்டும்.

நம் பூமிக்கு வந்த நோக்கம் சமுதாயத்தைப் படிக்கவும் சமுதாயத்திற்கு உதவி செய்து, சமுதாயத்தை வளர்க்க, படைக்க. பின்பு ஒரு பாடமாக இருக்க. இதனைச் செய்ய வேண்டும். இந்த பயணத்தில் எந்தத் தடையும் இல்லாதிருக்கக் கவலையை விட்டெறியுங்கள்! சுட்டெறியுங்கள்.

ஒரு பாடல் வரி இவ்வாறு பேசுகிறது. “வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல்தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை!” இதுதான் விதி இது தான் நியதி. கவலையை மறங்கள் காற்றாய்ப் பறங்கள்.

“எது நடந்ததோ அது நன்றாக நடந்தது
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாக நடக்கும்.”

-கீதை

ARCHIVES