பொங்கல் வாழ்த்து…

– (போலீஸ் நண்பர்களுக்கு)

வணக்கம் என் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கௌரவமிக்க பொறுப்புகளில் இருப்பவர்களில் முக்கியமானவர்களுள் ஒன்று காவல்துறையினர் உங்களுக்கு என் தைத்திருநாளின் முதல் வாழ்த்துக்கள்.

உன்னைப் போல் ஒருவன் படத்தில் நடிகர் மோகன்லால் கூறும் வசனம் “நல்ல விசயத்திற்கு ஒருவன் சாவதாயிருந்தால் அது நானாய் இருந்துவிட்டுப் போகிறேன்”என்பார். அது அவர் கதாப்பாத்திரம் பேசியது அல்ல அவர் அணிந்திருக்கின்ற காக்கிச்சட்டை பேசியது அந்தக் கண்ணியத்திற்கு உங்களை வணங்குகிறேன்.

ஒரு கவிஞன் எழுதுவான் “சாவைத் தன் சட்டைப்பையில் வைத்திருப்பவர்கள்” என்று அவனவன் தன் சட்டைப் பையில் பணம், பிடித்தவர்கள் போட்டோ, பேனா, பர்ஸ் வைத்திருப்பார்கள் தன் சாவையே வைத்துப் பயணிக்கும் சாமானியர்கள் இவர்கள். என்ன வருத்தம் என்றால்? பிக்பாக்கெட்டில் இழப்பதுபோல் தீயசக்திகளுக்கு தன் உயிரையே இழப்பதை எண்ணும்போதும், அதை எழுதும்போதும் என் பேனா கூட தன் கண்ணீரில்தான் கரைகிறது.

அவர்கள் அணிந்திருக்கிற காக்கிச் சட்டைக்கு அர்த்தம் தெரியுமா? அதை எடுக்கும்போது இது நன்றாக உழைக்கும் கிழியாது என்பார்கள். அந்த உடைக்குள் இருக்கும் உடலும் உள்ளமும் நன்றாக உழைக்கும் எதற்கும் தன்னை இழக்காது. ஏமாற்றாது என்பதுதான்.

அவர்கள் உடற்பயிற்சி செய்யும்போது left, right என்பார்கள். முதலில் left என்பார்கள். இதனையே மணவீட்டில் பாருங்கள். வலது காலை எடுத்து வைத்து வா என்பார்கள் காரணம் அவர்கள் வாழப் போகிறவர்கள். இவர்கள் இடது காலை வைப்பது சமுதாயத்திற்காகச் சாகத் தயாரானவர்கள் என்பதுதான். இவர்களை சாமிபோல் கும்பிட அல்லவா செய்யவேண்டும்?

ஆனால் இன்று அதிகமாக விமர்சிக்கப்படுகிற துறை காவல்துறை ஆங்காங்கு காட்சிப் பொருளாக நடக்கின்ற சில தவறுகளை வைத்து ஒட்டுமொத்தமாகக் குறை சொல்லுகிறவர்களே! ஒரு குடும்பத்தில் ஒருவன் சரியில்லையென்றால் அது உருப்படாத குடும்பமா? யோசித்துப்பாருங்கள்.

காவல்துறையென்றால் கேவலமாகப் பேசுகிறவர்களே உங்களுக்காக இந்தவரிகள்…

சின்ன வயதிலேயே அறிவை வளர்த்துச் சமுதாயத்தில் எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு பெரிய பதவியை அடைய நினைக்கிறவர்களுக்கு மத்தியில் உடலை வளர்த்துப் பயிற்சி செய்து சமுதாயம் காத்து, அவப் பெயரைத் தாங்கிக்கொண்டு குறைந்த சம்பளத்தில் வேலை செய்யத் துணிகின்ற மனம் எத்தனை பேருக்கு வரும்?

பணிக்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்ள உயிரைக் கொடுத்து உடற்பயிற்சி செய்து பிடித்த உணவைக் குறைத்து, தேர்வு எழுதி, தெருவில் தூங்கி, கூப்பிடும்போது ஓடி, கைவலிக்கக் கயிறு இழுத்து, கால் வலிக்கப் பயிற்சி செய்து, மூச்சிரைக்க முட்டிமோதி அரை உயிரை அப்போதே விட்டு, பயிற்சி என்ற பெயரில் படாதபாடு படுகின்ற துணிச்சல் நம்மில் எத்தனை பேருக்கு வரும்?

இவ்வளவு சிரமத்திற்கு மத்திலும் திடிரென்று வேலை கிடைச்சா! எந்த வசதியுமில்லாத ஊரில் கதவில்லாத அறையில் கொசுக்கடியில் குடியிருக்க, சோறு கிடைக்காத ஊரைக்கூட சொர்க்கமாக நினைச்சி கட்டின மனைவியையும் வீட்டிலே விட்டுவிட்டுப் பிள்ளைங்களைப் பிரிந்து புத்தனைப் போல் துறவியாக போலிஸ் வேலைக்குப் போகிற பெரிய மனசு எத்தனை பேருக்கு வரும்?

நேர்மையாய் இருந்தா வாழ முடியாது வளைஞ்சு போக மனசு ஒத்துக்காது. ஊரைப் புரிந்து, மனிதனைப் பழகி, அரசியல் வாதிகளை அனுசரிச்சு, அதிகாரிங்ககிட்ட நல்ல பெயர் வாங்கி, உரிமை கிடைக்காம போயி, சோறு கிடைக்காம, தண்ணியைக் குடிச்சு தன் வயிரை(உயிரை) நிரப்பு ஓடிக்கொண்டே இருந்து இரத்தம் பார்த்து, கலவரம் அடக்கி திருடனைத் தேடி அடிதடி அராஜகத்தைத் தடுத்து அத்தனைக்கும் பதில் சொல்லி சம்பாதிச்சாலும் ஒருவனும் பொண்ணுதர மாட்டான்.

அதையும் மீறி பொண்ணு கிடைச்சா அவளையும் கண்ணு கலங்காம பார்த்துக் கொள்ள வீட்டையும் பார்த்து நாட்டையும் பார்த்து நல்ல பேரு வாங்கினாலும். யாரோ செய்கிற தப்புக்காக எல்லோரையும் முறைக்கிற கண்களுக்கு கூட இமையாய் இருக்கிற இந்தக் காவல் தெய்வங்களுக்குத்தான் எனது பொங்கல் நல்வாழ்த்து.

செஞ்ச தப்பை மறைக்கிறதுக்கு நீ கொடுக்கிற துட்ட, பிறகு என்ன யோக்கியதை இருக்கிறது உனக்குப் போலிஸைத் திட்ட. நல்ல நாளில் கூட அவர்கள் நம்மோடுதானே, நமக்காகத் தானே இருக்கிறார்கள். பொங்கல் தீபாவளியில் கூட அவர்கள் பொண்டாட்டி பிள்ளைங்களோடு இல்லையே நமக்காக வாழ்கிறார்கள். நம்மோடு வாழ்கிறார்கள் அவர்களுக்குச் சொல்வோம்! அனைவரும் சொல்வோம்! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

“கும்பிடுப்போகிற தெய்வம்
குறுக்கே வருகிறதோ இல்லையோ
கூட வருகிறது
காக்கியில் வருகிறது. நம்மைக்
காப்பாற்ற வருகிறது.”

//

Comments are closed.