29

Nov

2020

தலைவர் அவர்களுக்கு…

நீங்கள் நலமாக இருப்பீர்கள்! நான் நலமாக இல்லை. நேற்று அடித்த நிவர் புயலில் பெய்த மழையில் நனைந்தேன். இடித்த இடியில் பயந்தேன் அடித்த காற்றில் விழுந்தேன் பாய்ந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இப்போது இங்கு வந்து கிடக்கிறேன்.

நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? இன்று ஊடகங்களும் உங்கள் கட்சித் தொண்டர்களும் உங்களை இப்போது தேடிவந்து நிற்பார்கள். ஆனால் நான் எங்கு இருக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை. இதுவரை சென்னையில் குப்பத்துக் குடிசைக்கு அருகில் குப்பை பொறுக்கிக் கொண்டிருந்த நான் இன்று குப்பையிலிருந்து என்னைப் பொறுக்க வேண்டிய நிலையில் ஒதுங்கிக் கிடக்கிறேன்.

எனக்கு நன்றாகத் தெரியும். இந்த நேரத்தில் ஏதாவது ஒரு குப்பத்தில் உதவி செய்து கொண்டிருப்பது போல படத்திற்குப் போஸ் கொடுத்துக் கொண்டிருப்பீர்கள். உங்கள் அடிவருடிகள் எல்லாம் உங்களுக்கு உதவி செய்வது போல குப்பத்து மனிதர்களை உபத்திரம் பண்ணிக் கொண்டு இருப்பார்கள். இரண்டு பேருக்கு உதவி செய்யுமுன் இரண்டாயிரம் வாழ்த்தொலிகள் காதில் தேனாய்ப் பாயும் இந்தச் சந்தடிகளுக்கு மத்தியில் எங்கேயோ ஒரு ஒரத்தில் ஒதுங்கிக் கிடக்கிற என்னுடைய விசும்பலின் ஒலிகள் உங்களுக்கு விளங்கவா போகிறது?

என்னுடைய கவலையெல்லாம் இதுவே என் இறுதித் தருணமாய் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? எங்கள் பெயரைச் சொல்லிச் சொல்லித்தானே நீங்கள் ஒதுக்கியதும் பதுக்கியதும். நானெல்லாம் குப்பையில் நீங்கள் தேவையில்லை என்று எறிவதைத்தான் பொறுக்கிக் கொள்வேன். ஆனால் நீங்கள் எங்கள் தேவையானதையெல்லாம் பொறுக்கிக் கொண்டு எங்களை எறிந்து விடுவீர்கள் இருவருமே பொறுக்கிதான் இருந்தாலும் மக்கள் என்னை ஏசமாட்டார்கள்.

யாரோ ஒருவன் இச்சையைத் தீர்க்க இசைவு தந்தால் அவன் துப்பிய எச்சிலை என் தாய் குப்பைத் தொட்டியில் என்னை எறிந்து விட்டுப் போனாள். அப்போது குப்பைத் தொட்டியில் இரைதேடிய எந்த நாய்களும் எனக்கு எந்தத் தீங்கும் இளைக்கவில்லை. ஆனால் இன்று பாலத்து அடியில் படுத்திருக்கும்போது மனித நாய்களிடமிருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் மரணபோராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது.

எங்கள் தலைவருக்கு என்னை யாரென்றே தெரியாது. ஆனால் நான் பொறுக்கும் குப்பைப் பேப்பரில் உங்கள் படத்தை தினசரிப் பார்ப்பேன். என்னைப் பொறுத்த வரையில் நீங்கள் எனக்குக் குப்பையாகத்தான் தெரிவீர்கள். ஆனால் இதுகூட ஒருநாள் உரமாகும் ஆனால் நீங்கள்?

நீங்கள் சிலநேரம் என் உடையைப் பார்த்து பிச்சைக்காரன் என்று கூடச் சொல்லலாம். உங்களுக்குத் தெரியுமா? மதுரையில் ஒருவர் பிச்சையெடுத்து கொரோனா, நிதிக்காக 21 முறை 1,50,000 ரூபாய் வழங்கியுள்ளார்.

ஆனால் தீபாவளியை ஒட்டியும் தெருவோரங்களிலும் ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் எடுக்கிற பிச்சை சீ…..சீ… பிறகு எதுக்குடா வெள்ளையும் சொள்ளையுமாக வெளியில் நடமாடுகிறீர்கள்! என்று சொல்லத் தோன்றுகிறது.

ஐயா புண்ணியவான்களா! போட்டாவுக்குப் போஸ் கொடுக்கிறவர்களே சீக்கிரம் இந்தக் கருமத்தை முடித்துவிட்டுக் கரையேறுங்கள். பொதுநலத்தொண்டு செய்கிறவர்கள் சத்தமில்லாது வந்து எங்கள் சங்கடங்களைத் தீர்ப்பார்கள். என்னையெல்லாம் நீங்கள் எதற்குத் தேடப் போகிறீர்கள்? உங்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஓட்டும், நோட்டும் தானே! உங்கள் செல்வாக்கிற்கு நீங்கள் நோட்டாவைக் கூட ஜெயிக்க மாட்டீர்கள். ஆனால் கோட்டையைப் பிடித்து விடுகிறீர்கள் மக்களை எவ்வளவு முட்டாளாக்கி விடுகிறீர்கள்.

எப்படியும் மறுபடியும் வருவேன். குப்பை பொறுக்குவேன். ஊர் சுத்தமாகும். என் தலைவர்களின் மனசு குப்பையாய் கிடக்கிறது. அதைத்தான் ஏன் பொறுக்கமுடியவில்லை. ஏனென்றால் அவர்களே பொறுக்கியாகிவிட்டார்கள். இயற்கைச் சீற்றமே எங்களை அழித்து விடுகிறாய். இந்த அயோக்கியர்களை வாழ வைத்துவிடுகிறாய். இதன்மூலம் மக்களுக்குத் தொண்டுசெய்வது போல காட்டிக் காட்டி ஓட்டு வாங்குவார்கள். எங்களுக்காக கொடுக்கப் படுகிற பணத்தையும் பதுக்கிக் கொள்வார்கள். இயற்கையில் நீ இறைவனின் சீற்றமானால் இவர்களை அழிக்க மாட்டாயா? இறைவா எனக்கொரு வரம் கொடுப்பதாய் இருந்தால் இப்போது தெருவில் குப்பை பொறுக்கிக் கொண்டிருக்கிற நான் நாட்டில் பெருகிவிட்ட குப்பையை அப்புறப்படுத்த நல்லதொரு வரம் தாரும்.

                                                                                                        இப்படிக்கு

உங்களால் குப்பையானவன்

ARCHIVES