10

Sep

2020

மகளுக்காக…

மனம் திறக்கிறேன்

“மடியில் இருத்தியவள்
மடியில் இருக்கிறாள்
நேற்று… தாயாக
இன்று… சேயாக….”

உச்சந்தலையில் நச்சென்று குட்டு வைத்துள்ளது உச்சநீதிமன்றம். ஆம் பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை உண்டு என்பது. இது இப்போதல்ல எப்போதும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது இந்தச் செய்திமட்டும் ஏன் இந்தச் சமுதாயத்திற்கு செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்கிறது என்பதுதான் எனக்கு இன்னும் புரியவில்லை?

அப்பா-மகள் உறவுகளைப் பற்றி வருகின்ற கவிதைகள், கட்டுரைகள் அசர வைக்கின்றன. கல்யாண நாளில் அவளைக் கணவனிடம் கைபிடித்துக் கொடுக்கும்போது கண்கலங்குகிற காட்சி இன்னும் எனக்கு விளங்கவில்லை. இவ்வளவு பாசம் வைத்திருக்கிற அப்பனுக்குத் தன்னுடைய சொத்தில் சம உரிமையைக் கொடுக்க வேண்டும் என்பது புரியவில்லையா? அல்லது புத்தி….

காரணம் அவள் வளர்கின்ற காலத்தில் இருந்து விலைகொடுத்து விற்கப் படுகின்ற பொருளாகவே பார்க்கப்படுகிறாள். கல்யாணச் சந்தையில் விற்கப்படுகிறாள். இது இந்தச் சமுதாயத்தின் அவலமா? இல்லை அசிங்கமா?

பிறப்பிலிருந்தே அவள் இன்னொரு வீட்டுக்கு வாழப்போகிறவள் அப்படி இருக்கவேண்டும்! இப்படி இருக்கவேண்டும்! என வளர்ப்பது. ஆண்பிள்ளை அது சிங்கக்குட்டி என்பது. ஏன் இந்தப் பாகுபாடு? கிராமத்தில் சொல்வார்களே ஒரு கண்ணில் நெய்யும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பது. இது வாழ்வியல் தர்மமாகுமா?

செய்திகளை, ஊடகங்களில் பார்க்கும்போது காதலித்துக் கைவிட்டுவிட்டான். கல்யாணத்திற்கு மறுக்கிறான். புதுப்பெண் போராட்டம்! இளம்பெண் தர்ணா! என்றெல்லாம் கேட்கும் போது ஆணை நம்பித்தான் பெண்ணா? தனி ஆளாய் நிற்கத் தைரியம் இல்லையா? நிற்கும் தன்னம்பிக்கையை அந்த அப்பன் அவளுக்குச் சொல்லிக் கொடுக்காமல் என்ன வளர்த்திருக்கிறான்? உறவைக் கொச்சைப்படுத்தி அதனை உணர்ச்சியில் வடிகாலாக்கி சந்தர்ப்பத்தைச் சரியாய்ப் பயன்படுத்திய அந்த நாயோடு வாழ்வதைவிட நல்ல தாயாக வாழக் கற்றுக்கொடுங்கள். அதுதானே உங்கள் ஆண்மைக்கு அழகு.

பெண் பிள்ளைகளைப் பெற்ற அப்பாக்களுக்கு எல்லாம் சொல்கிறேன் நல்ல அப்பனாகவும் சொல்கிறேன். சின்ன வயதிலிருந்து கொலுசைப் போட்டு வளையலை அணிந்து பிறர் கவனத்தைத் திருப்ப நினைக்காதீர்கள். அவள் கடைச்சரக்கல்ல! கம்மலைப் போட்டு, வளையலைப் போட்டு உன் கணக்கு முடிந்தது என்று திருப்தி அடையாதீர்கள். திடிரென்று முளைக்கும் பட்டாசுக் கடை, மிட்டாய்க்கடைகளுக்கு வண்ண விளக்குகள் போட்டு விளம்பரம் தேடுவது போல வயதுக்கு வந்தபிறகு நகைகளைப் போட்டு அலங்காரப்படுத்தி எங்கள் வீட்டிலும் கல்யாணச் சந்தையில் ஒரு பெண் விலைபோகத் தயாராய் இருக்கிறாள். விலை கொடுக்கிறோம்! வாங்கிக் கொள்ளுங்கள்! என்று வியாபாரம் பேசாதீர்கள். தன்னம்பிக்கையைக் கற்றுக் கொடுங்கள் தனித்து நிற்கக் கற்றுக் கொடுங்கள். வழிகாட்டுங்கள் வாழ்க்கையை அவள் அமைக்கட்டும். வாழ்க்கைக்கு நீங்கள் புள்ளி வையுங்கள் அவள் கோலம் போடட்டும்.

சமத்துவத்தை அவளுக்கு அமைத்துக் கொடுங்கள். நாணமும் அச்சமும் நாய்களுக்கே நமக்கு எதற்கு? என்பதனை மகளுக்கு நம்ப வையுங்கள். நம்பிக்கை கொடுங்கள் பூ, மயில், குயில் என்று உன்னைப் பற்றிப் பொய் சொல்வார்கள், அதில் பூரிப்பு அடைந்து விடாதே!. நீ புயல் புறப்படு! போராடு! புரட்சிசெய்! என்பதனை அவள் காதில் போட்டு வையுங்கள். அடங்கிப் போக வேண்டிய இடங்களில் அடங்கியும் அடக்க வேண்டிய இடத்தில் அடக்கியும் வரச் சொல்லுங்கள். சமைக்கத் தெரிந்த அவளுக்கு வாழ்வை ருசிக்கவும், ரசிக்கவும் கற்றுக் கொடுங்கள். கோலம்போட்ட கைக்கு காலத்தையும் ஆளத் தெரியும் எனக் கற்றுக்கொடுங்கள்.

ஜான்சி ராணி, வேலுநாச்சியார், அன்னைத் தெரசாள், இந்திராக் காந்தியை இனியும் ஏட்டிலும் பாட்டிலும் தேடாதீர்கள்! உங்கள் வீட்டிலும் தேடுங்கள். அவள் உங்கள் வீட்டில் இருக்கிறாள். உங்கள் மகளாக இருக்கிறாள் கண் திறந்து பாருங்கள். அந்தக் கலைமகள் தெரிவாள்.

கல்பனாச் சாவ்லா, விஜயலட்சுமிப் பண்டிட், கிரண்பேடி, சரோஜினி நாயுடு, தில்லையடி வள்ளியம்மை எல்லாம் ஒரு ஆண்மையுள்ள அப்பாக்களால் உருக்கபட்டவர்கள்தானே. மூடநம்பிக்கையால் மூழ்கடிக்காமல், கலாச்சாரத்தால் சாகடிக்காமல், கட்டுப்பாடு என்ற கல்லறையில் அடக்கம் செய்யாமல் சுதந்திரமாகப் பறக்கவிட்டதால் இன்னும் வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வாருங்கள் நம் பெண் பிள்ளைகளையும் தோளில் தூக்கி வைப்பதோடு நின்றுவிடாமல் புகழில் உச்சியில் தூக்கி வைப்போம். புறப்படுவோம் புதிய நம்பிக்கையோடு. என்மகள் தான் இனி எல்லாமே! என்ற நம்பிக்கை எனக்கு உண்டு உங்களுக்கு?

“பாசமுள்ள…
அப்பாக்களுக்குத் தெரியும்
மகளிடம் கேட்கவேண்டியது
முத்தத்தையல்ல…
அவளின் சத்தத்தை….”

ARCHIVES