06

Sep

2020

நான் விரும்பும் நாத்தீகன்…

“உன் மதம் அது
வழிபடு
என் மதம் இது
வழிவிடு”

ஆன்மீகத்தை ஆடையாய் அணிந்து கொண்டு மதத்தை இரத்த நாளங்களில் உறையவைத்து, கடவுளின் அவதாரமாகத் தன்னை நினைத்துக் கொண்டு கடவுளையும் மதத்தையுமே காப்பாற்றத் தன்னைக் கடவுள் அனுப்பியதாக எண்ணிக்கொண்டு பூமியில் வாழ்ந்துவரும் மக்களுக்கு மத்தியில் நாத்தீகன் என்ற வார்த்தை இரும்பைக் காய்ச்சி இதயத்தில் ஊற்றியது போல் இருக்கும்.!

நாத்தீகன் என்பவன் கடவுள் இல்லை என்பவன். கடவுள் கொள்கையை மறுப்பவன் என்றெல்லாம் தவறான கருத்தை இத்தலைமுறைக்குப் பதிவிட்டு வருகிறார்கள், இதனால்தான் சீர்திருத்தவாதியான பெரியார் செத்தபிறகும் அவர் சிலை சேதப்படுத்தப்படுகிறது. இதுதான் மதவாதிகளின் வெற்றி! சமூகத்தின் தோல்வி!

கடவுளை நம்புகிறவர்கள் கயவர்களா? மத நம்பிக்கை கூடாதா? நாத்திகம் தான் சிறந்ததா? என்ற கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில்தான். ஒரு குழந்தை எழுதப்படிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கின்ற பெற்றோர் குழந்தையின் கையில் எழுது பொருள் கொடுத்தால் அதனை எழுதப் பயன்படுத்தாமல் கண்ட இடத்திலும் கிறுக்கிக் கொண்டு திரிந்தால், எதிரில் வருகிறவர்மேல் எல்லாம் எழுதி அசிங்கப்படுத்தினால் அதனைத் தடுக்கவோ, பிடுங்கவோ தானே செய்வார்களே. தவிர அது அவர்கள் கல்வி பயிலாமல் தடுப்பதற்கல்ல என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று மதவாதிகள் தன் மதங்களை வழிபடுவதை விட அடுத்த மதத்துக்காரர்களைக் காயப்படுத்துவதில்தானே வார்த்தையையும் வாழ்க்கையையும் செலவிடுகிறார்கள். இவர்களுக்கு மத்தியில் நாத்திகனாய் இருப்பது நல்லது தானே! யாராவது தவறு செய்து அதனைத் தட்டிக்கேட்டால், என்னைத்தானே கேட்கிறீர்கள். அடுத்த மதம் என்றால் கேட்பீர்களா? எனத் தட்டிக் கழிக்கிறார்கள். தப்பிக்கப் பார்க்கிறார்கள் இதுதான் மதக்கோட்பாடா?

கடவுள் மறுப்பு என்று சொல்லுகின்ற நாத்தீகன் எங்கேயாவது யார் கோயிலையாவது இடித்திருப்பானா? சாதியைச் சொல்லி கோயிலுக்குள் வராமல் தடுத்திருப்பானா? ஆன்மீக வாதிதான் அடுத்தவன் கோயிலை இடிக்கிறான் அங்கே இருப்பது அவனுக்குக் கடவுளாகத் தெரியவில்லையா? சாதிக்கொரு சாமியைப் பிரித்துக் கொடுத்து அடுத்தவன் கோவிலை அவமதிப்பவன் எல்லாம் ஆன்மீக வாதிதானே! நாத்தீகனல்லவே! உள்ளுர் மதம், வெளிநாட்டு மதம் என்று வேறுபாடு பார்த்து ஒற்றுமையை குலைப்பவன் எல்லாம் மதவாதிதானே! மற்றவனில்லையே!

கடவுள் என் கைக்குள் இருக்கிறார்! என்று கதைகதையாய் கூறி காணிக்கைப் பிச்சையெடுப்பவன் எல்லாம் ஆன்மீகம் பேசுபவன்தானே! கடவுளுக்கு கொடுங்கள் கடவுள் ஆசிர்வதிப்பார் என்று சொல்லி பணம்பறிக்கும் போலிப் போதகர்கள் எல்லாம் எந்தக் கடவுளுக்கு எங்கு வைத்து கொடுக்கிறான். அவனவன் பெயரில் தானே வங்கியில் வரவைத்துக் கொள்கிறான். இவன் மக்களை முட்டாளாக்கி அதில் அவன் மூலதனத்தைப் பெருக்கிக் கொள்கிறான். மக்கள் அறியாமையில் வயிறு வளர்க்கிறவன் ஆன்மீகவாதிதானே! நாத்தீகனில்லையே? இவர்களைப் போல் ஆட்கள் இருக்கும் வரை நாமும் ஆன்மீகவாதி என்று சொல்லுவது அசிங்கமாக இல்லையா? நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்?

சாமிகளையும், ஆபரணங்களையும் உண்டியல் பணங்களையும் யாருக்கும் தெரியாமல் சுருட்டிக் கொள்கிறவன் எல்லாம் ஆன்மீகவாதியா? நாத்தீகனா? அவனுக்குச் சாமி பயமில்லையா? அல்லது பூமி பொறுக்கும் என்ற நம்பிக்கையா? என்னைப் பொறுத்தவரையில் நாத்தீகன் என்பவன் கடவுளை மறுப்பவனுமல்ல கடவுள் கொள்கையை வெறுப்பவனும் அல்ல கடவுள் பெயரால் நடக்கின்ற அநியாயங்களையும் அட்டூழியங்களையும் தடுப்பவன். தட்டிக் கேட்பவன்.

வாருங்கள் நாம் ஒரே மதமாய் இருப்போம்! என்று சொல்லுகிறவர்கள் வாருங்கள் ஒரே சாதியாய் இருப்போம் என்று ஏன் சொல்ல மறுக்கிறார்கள்? எப்படியாவது மனிதத்தைப் பிரித்து வேட்டையாட வேண்டும். நான் பேசும் நாத்திகம் ஒன்றே ஒன்றுதான் சாதி வேண்டாம், மதம் வேண்டாம், மனிதனாய் இருப்போம்! மனிதர்களை மதிப்போம்.! என்கிறது. மதம் பக்குவப் படுத்தும். பழிவாங்காது, விட்டுக் கொடுக்கும் வெட்டி வீழ்த்தாது.

ஒருமுறை கேரளாவில் பரபரப்பான கோயில் திருவிழாவின் போது ஒரு யானை வெகுண்டு வெளியே ஓடி வந்ததாம். அனைவரும் ஐய்யோ… யானைக்கு மதம் பிடித்துவிட்டது என்று கலைந்து ஒடினார்கள் ஒரே ஒரு மனிதர் சொன்னார். யானைக்கு மதம் பிடிக்கவில்லை அதனால் அது விலகி ஒடுகிறது என்றாராம். உங்களுக்கும் மதம் பிடிக்க வேண்டாம். மனிதர்களைப் பிடிக்கட்டும். மதவாதிக்கு மற்ற மத மனிதர்களைப் பிடிக்காது. மற்ற வழிபாடு பிடிக்காது. எல்லாம் சமம் என நீங்கள் எண்ணினால் உங்களை எனக்குப் பிடிக்கும். நாம் நல்லதை மட்டும் விரும்பும், செய்யும் நாத்தீகனாய் இருப்போம்.

கொரோனாவின் தயவால்…..

“கோயில்கள் எல்லாம் மூடப்பட்டன
வீடுகள் எல்லாம் கோயில்கள் ஆயின”

இடைத்தரகர்கள் இல்லாமல் இறைவனோடு பேசுகிறோம்.

ARCHIVES