04

Sep

2019

பட்டும் புத்தி…

இந்த வார்த்தையை வாசிக்கும் போதே நமக்கு ஒரு உள்ளுணர்வு ஏற்படும். ஏனென்றால் அது பட்டறிவை நமக்கு ஞாபகப்படுத்தும், அதாவது இன்றளவில் அனைவரும் பகுத்தறிவைப் பற்றி எங்கும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். பொதுவாக மற்ற உயிர்களை விட மானிட வளர்ச்சி என்பது அதன் அறிவுகொண்டு அளக்கப்படுகிறது. அதன் வளர்ச்சியை பல்வேறு அறிவுகளில் பகுத்தாய்வு செய்து அவற்றின் வளர்ச்சியின் அடிப்படையிலேயே மானிடன் மதிக்கப்படுகிறான்.

அறிவு வளர்ச்சி என்பது மானிடத்தின் அங்கம். அது அவனது வளர்ச்சிப்பாதையில் அதுவாகவே வந்து ஒட்டிக்கொள்ளும். இது அவர்களுக்குக் கற்றல் அறிவு, கேட்டல்அறிவு, பட்டறிவு, பகுத்தறிவு என பல்வேறு நிலைகளில் மனிதனைப் பக்குவப்படுத்தி அவனைப் பயன்படவைக்கும்.

இத்தகைய அறிவுதான் மனிதனுக்கு மாண்பைக்கொடுக்கும் மதிப்பை வளர்க்கும், புகழைச் சேர்க்கும், பொருளை கொடுக்கும் கலாச்சாரம், பண்பாடுகளில் கைகோர்த்துக்கொண்டு இருக்கும், உறவை வளர்க்கும் உயர்வைக்கொடுக்கும், உன்னதம் பிறக்கும், ஆய்வுகள் தொடரும், அறிவியல் வளரும்.

இந்த வளர்ச்சியில் மானிடம் பிறண்டுவிட்டால் எல்லோராலும் இகழப்பட்டு எள்ளி நகையாடப்படும். இதில் கற்றல் அறிவு தானே பலவற்றைத் தேடி தன்னையே வளர்த்துக்கொள்ளுதல் கேட்டல் அறிவு குருகுலக் கல்வியாக பிறந்து குருசீடன் உறவில் மலர்ந்து கோலோச்சியது. இவ்விரண்டு அறிவுகளிலும் சற்று இடறிவிழுந்தாலும் மீண்டும் போராடு இன்னும் முயற்சிசெய் அந்த இலக்கை அடையும் வரை உன் பயணத்தைத் தொடர் என்றுதான் மற்றவர்கள் நம்மை ஊக்கப்படுத்துகிறார்கள். உற்சாகப்படுத்துகிறார்கள். இந்தத் தோல்விகள் சற்று அவமானத்தைத் தந்தாலும் அழிவைத் தருவதில்லை. மீண்டும் முயற்சி செய்து அதிலிருந்து மீண்டுவர வழிகாட்டுவார்கள்.

ஆனால் பட்டறிவு என்பது தன்னுடைய அனுபவத்தின் மூலம் பெறுவது. மற்ற அறிவுகள் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவத்தைக் கொடுக்கும் அந்த பாதை சிலருக்குச் சுகமாக இருக்கும், சிலருக்குச் சோகமாக இருக்கும், சிலருக்கு இன்பமாக இருக்கும், சிலருக்குத் துன்பமாக இருக்கும், சிலருக்கு வெற்றியாக இருக்கும். சிலருக்குத் தோல்வியாக இருக்கும். ஆனால் பட்டறிவு என்பது அவரவர் பாதையில் அவரவர் சந்திப்பது அவரவரைத் தீர்மானிப்பது அந்த அனுபவம்தான் மனிதனை அடுத்தகட்டத்திற்கு அழைத்துச்செல்லும் பட்டறிவு பக்குவப்படுத்தும், பட்டறிவு நெளிவு சுழிவுகளைக் கற்றுக்கொடுக்கும், வாழ்க்கையில் பல்வேறு தெளிவான, தீர்க்கமான முடிவுகளை எடுக்க அது பாதை காட்டும்.

எனவேதான் ஆங்கிலத்தில் சொல்வார்கள்Learn your fault, Don’t repeat it: என்பார்கள், அதாவது உங்களது தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். அது அனுபவம், திரும்பவும் அதனையே செய்துவிடாதீர்கள். அது முட்டாள்தானம். எனவே தோல்விகள் எல்லாம் அனுபவங்களாக்கி வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டுவதுதான் அனுபவ அறிவாகும்.

இது தனிமனித அனுபவம் சமூக அனுபவம் என்று கூட எடுத்துக்கொள்ளலாம் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவனுக்குக் கிடைக்கும் அனுபவ அறிவு அவனது வாழ்க்கையில் கண்டு, அனுபவித்து, தேர்ந்து தெளிந்துவிட்டால் அவன் வாழ்க்கையில் முன்னேறிவிடுவான். அதே போல்தான் சமூகத்திலும் நமக்குக்கிடைக்கும் அனுபவம் அது கற்றுத்தரும்பாடம் மீண்டும் ஒரு மீளாத்துயரில் விழுந்துவிடாதபடி அது கற்றுக்கொடுக்கும்.

குறிப்பாக ஒன்றைக் கண்முன் கொண்டுவர ஆசைப்படுகிறேன். ஓரிரு ஆண்டுகளுக்கு முன் சென்னை பெருவெள்ளத்தில் தத்தளித்தது. கடந்த இருவருடங்களாக கேரளா மாநிலம் வெள்ளப்பெருக்கால் பெருத்த சேதமடைகிறது. ஆயினும் இந்த கோடைவெயிலின் கொடுமையில் தண்ணீர் வறண்டு பிறர் முன் கையேந்துமளவிற்குத் தள்ளப்பட்டு விட்டோம். காரணம் என்ன? மழை இல்லை என்று கூறமுடியாது. மழைநீரைச் சேகரிக்கத் தவறிவிட்டோம் என்பதுதான் உண்மை. தமிழ் நாட்டிற்குத் தேவையான தண்ணீர், மழை நீராக நமக்குக் கிடைக்கத்தான் செய்கிறது. ஆனால் சேமிக்கத்தவறிவிட்டுச் சிரமப்படுகிறோம். மாறிவரும் நாகரீக உலகிற்கு ஏற்ப பசிக்கும்போது உணவு தயாரிப்பதும் இல்லையென்றால் ஹோட்டல்களைத் தேடி அலைவதுமாக மக்கள் மனநிலை மாறிவிட்டது. அதுபோல்தான் மழையையும் எண்ணுகிறார்கள். தண்ணீர் தேவைப்படும்போது மழைவரவேண்டும் இல்லையென்றால் அணையிலிருந்து திறந்துவிடவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார்களே தவிர அதனை நாம்தான் சேகரிக்கவேண்டும் என்பதனை மட்டும் ஏன் உணர மறுக்கிறார்கள் என்று புரியவில்லை.

வெள்ளத்திலும் மூழ்கியாச்சு, வெயிலிலும் காயந்துபோயாச்சு இன்னும் இயற்கையை வைத்தே நம்மைக் காத்துக்கொள்ள நாம் தவறுகிறோம். ஒரு அத்தியாவசியப் பொருளுக்கு ஓடுகிறோம். ஏரி, குளங்களை மூடி கட்டிடங்களாகப் பிரசவிக்கிறோம். நதிகளில் மணல்களை அள்ளிவிட்டு வறுமைக் குழிகளில் புதைந்து கிடக்கிறோம். வாகனங்களின் பாதைக்காக பாதையோர மரங்களை வெட்டிவீழ்த்திவிட்டு வெயிலின் தாக்கத்தால் தோல்வியாதியில் துவண்டு கிடக்கிறோம். நெல் மணிகளை அள்ளிக்குவித்த தஞ்சை பூமியை ஹைட்ரோ கார்பனுக்குக் காவு கொடுக்கத் துடிக்கிறார்கள். பனைமரத்தின் அருமை தெரியாமல் வெட்டி வீழ்த்திவிட்டு, விவசாயத்தை அழித்துவிட்டு இன்று வெட்டியான் வேலைக்குக்கூட வழியில்லாது வாடிநிற்கிறோம்.
தண்ணீரைச் சேமிக்கவில்லையென்றால் எந்தக்கண்ணீர் விட்டாலும் அந்தக்கடவுள் கூட நம்மைக் காப்பாற்றமுடியாது. தஞ்சைப் பகுதிகளில் ஒரு கிராமத்து மக்கள் தங்கள் ஊரில் இனி கோவில்கொடைகளுக்குச் செலவிடப்படும் ஆடம்பரத்தொகை குளம் தூர்வாருவதற்குப் பயன்படுத்தப்படும் என முடிவெடுத்துள்ளார்கள். இது காலத்திற்கு ஏற்ப வரவேற்கத்தக்க மாற்றம். அதேபோன்று ஒரு ஊரில் இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஊருக்குள் மது அருந்திவிட்டு வரும் மானிடர்களிடம் அபதாரம் விதித்து அந்தப்பணத்தில் குளங்களைத் தூர்வாரி வருகிறார்கள்.

இவ்வாறு ஒரு தண்ணீர் புரட்சி தமிழகத்திற்கு வரவேண்டும். ஒவ்வொருவரும் குளங்கள், ஏரிகள் தூர்வாரப்படத் தன் பங்களிப்பைக் கொடுப்பது அவசியம். எவனோ ஒரு ஏமாளி தனக்காகச் செய்வான் எனக் காத்திருப்பதைவிட தன் கையே தனக்கு உதவி என களத்தில் இறங்க வேண்டும் ஆறு, குளம், ஏரிக்குள் அத்துமீறி இறங்கியிருக்கும் கட்டிடங்களை எல்லாம் காலி செய்யுங்கள் காணாமல் செய்யுங்கள்.

நூறுநாள் வேலை என்பதனை நூறுநாளும் வேலை. ஆனால் முதல் நாளில் முழுமையாச் செய்தவர்கள்தான் அடுத்தநாளுக்கு அனுமதிக்கவேண்டும். கோவிலின் உண்டியல் பணத்தை எடுத்து குளங்களைச் செம்மைப்படுத்த முயற்சிக்கலாம். மயில்களை காக்க சட்டம் போட்டதுபோல வயல்களைக் காக்க வழிசெய்யுங்கள். நதிகளை இணையுங்கள், விதிகளை மாற்றுங்கள். நாம் உழைத்தால்தான் நாம் பிழைக்கமுடியும். பிறர் தருவார்கள் என்று அவர்களுக்குப் பாதம் கழுவுவதைவிட பார்ப்பதைவிட நாமே நமக்குத் தேவையான வடிகால்களை வடிவமைத்துக்கொள்வோம். ஓவ்வொருவரும் உழைப்போம், ஊருக்காக உழைப்போம், வருங்காலச் சந்ததிகளின் வளமைக்காக உழைப்போம், வானம் திறந்து வழிகாட்டும், வெற்றிநமதே.

ARCHIVES