12

Jul

2019

தண்ணீர் தண்ணீர்

ஒரு காலத்தில் இயக்குநர் சிகரம் K. பாலசந்தர் இயக்கிய திரைப்படத்தின் தலைப்பாக இது இருந்தது இந்தத் திரைப்படம் வெளிவந்தபோது தமிழகம் செழிப்பாகவே இருந்தது. அதனால் இந்தத் திரைப்படத்தில் வந்த ஊர் அத்திப்பட்டி என்ற கிராமம் ஆனால் அவ்வளவு தண்ணீர் பஞ்சம் உள்ள ஊர் தமிழகத்தில் எங்கு இருக்கிறது? என்று தேடுவதாகவும், இவ்வளவு தண்ணீர் பஞ்சம் வருமா? என்ற கேள்விக்குறியும் எழுந்தது. ஆனால் இன்று தமிழகமே இன்று அத்திபட்டியாக மாறிவிட்டது.

நாம் வாழும் இந்திய தேசம் ஆன்மீகத்தில் சற்று அழுத்தமாகவே தன் தடத்தைப் பதித்திருந்தது. ஆன்மீகத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட சமூகம் அதிஷ்டத்தை நம்புவதாகவும், அதிசயங்களைக் காண தவம் இருப்பது போலவும் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும். எதிர்காலம், நிகழ்காலப்பயம், பாவ புண்ணியங்களில் நாட்டம் தன்னைவிட ஒரு மேலான சக்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பண்பும் பயமும் ஆன்மிகத்தில் இருக்கும்.

இதனால்தான் ஒவ்வொரு மதங்களிலும் கடவுளுக்கு இணையாக எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லும் தீர்க்கத்தரிசிகள் மதிக்கப்பட்டார்கள். மண்ணுலகில் எதிர்காலத்தைக் கணித்துக்கூறுவதாக நம்பப்படுகின்ற ஜோதிடர்கள், வாக்குத்தத்தம் சொல்பவர்கள் மதிக்கப்படுகிறார்கள். அது கூட நடக்கலாம். நடக்காமலும் போகலாம்.

ஆனால் தீர்க்கமாகவும் தெளிவாகவும் கூறப்பட்ட விசயம்தான் தண்ணீர் தண்ணீர் திரைப்படம். அதனை ஒரு இயக்குநர் தண்ணீர் பிரச்சனையை படத்தின் மூலம் கூறியதால் நாம் அதனை ஒரு பொருட்டாக எண்ணாமல் பொழுதுபோக்காக எண்ணியதால்தான் இன்று தமிழகம் தண்ணீருக்காய் தாகத்தோடு அலைகிறது.

மழை வந்தது. வெள்ளம் வந்தது. அணைகள் பற்றாக்குறையினால் நீர் தேங்க வழியில்லை. நீர்த்தேக்கங்கள் எல்லாம் கட்டிடங்களை பிரசவிக்கும் காலமாகிவிட்டது. நீர்நிலைகள் தூர்வாரும் பணியெல்லாம் நீர்த்துப்போய்விட்டது. ஆறுகள். ஏரிகள், குளங்கள் எல்லாம் அனாமத்துக் கணக்குகளாக எண்ணப்பட்டு பணக்காரர்களின் சொத்தாகப் பட்டா எழுதபட்டுவிட்டது.

பாலுக்கு அழும் குழந்தை தாயிடத்தில் அழுததோடு நின்றுவிடாமல் இரத்தத்தையும் உறிஞ்சுவது போல மானிடன் தனது சுயநலத் தேவைக்காய் நிலத்தடி நீரையெல்லாம் உறிஞ்சி எடுத்துவிட்டு எலும்புக்கூடாய் பூமித்தாயைப் போட்டு மிதிக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டான்.
பொன்முட்டை இடும் வாத்தினைக்கூட தனது பேராசையால் கொன்று குவித்த வியாபாரியைப்போல எதிர்காலத் தமது சந்ததிகளைக்கூட எண்ணாமல் இப்போதே எல்லாவற்றையும் அனுபவிக்கத்துடிக்கும் மானிடக்கூட்டம் வாழ்ந்து கொண்டு இருப்பதனால் இப்போது மனிதர்கள் இயற்கையிடமிருந்து தேவைக்கு அதிகமாகவே திருடிக்கொண்டு இருக்கிறார்கள்.

இரக்கக்குணமும், தியாகப்பரம்பரையும் கொண்டு வாழ்ந்த திராவிட மக்கள் திருடனாகவும், கொள்ளையடிப்பவனாகவும் வேறு ஒரு அவதாரம் எடுத்து வாழ்ந்து வருகிறார்கள். எவன் செத்தால் எனக்கென்ன? எனக்குச் சொத்துச் சேர்ந்தால் சரி என்ற மனோபாவம் கொண்ட மனிதர்களாகத்தான் எங்கும் திரிந்து கொண்டு இருக்கிறார்கள்.

எதற்கெடுத்தாலும் நாட்டைப் பழிப்பவர்களாகவும், அரசியல் ஆட்சியாளர்களைப் பழிப்பவர்களாகவுமே மக்களின் மனநிலை மாறிப்போனது. அரசியல்வாதிகள் எல்லோரும் சேவை செய்ய வாய்ப்பு கேட்பார்கள் நல்லது செய்வதாக வாக்குக்கொடுப்பார்கள். அதனால் மக்களிடம் வாக்குக்கேட்பார்கள். இவர்களும் இப்போது இது இது தேவை எனக்கூறி அதனை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை வந்ததும் இவர்கள் வாக்கு அவர்களுக்கே செலுத்துவார்கள் அவர்கள் வெற்றியடைந்ததும் சேவை செய்ய வாய்ப்புக் கிடைத்ததாகக் கருதி தன்னால் இயன்ற அளவு சேவை செய்து வருவார்கள்.

ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. எதிர்காலம் என்பது இருண்ட காலமாக மாறிவிட்டது. இப்போதே அனைத்தையும் அனுபவிக்கும் ஆசை வந்துவிட்டது. எனவே இன்றையத் தேவையைக் கண்முன் கொண்டு நல்லவரா? கெட்டவரா? நாம் தேர்ந்தெடுக்கப்போகிறவர் என்று எண்ணாமல் நோட்டைக் கொடுத்தால் ஓட்டைக் கொடுப்போம் அதன்மூலம் இந்த நாட்டைக் கொடுப்போம் என்ற அவல நிலைக்குத் தள்ளப்பட்டோம். ஆகையால் இன்று எவரையும் கேள்வி கேட்க முடியாமலும் யாவரிடமும் முறையிட முடியாமலும் முடமாகிப் போனோம்.

தண்ணீர் பஞ்சம் என்றவுடன் ஆளுக்கு ஒரு குடத்தைத் தூக்கிக்கொண்டு போராடத் தொடங்கிவிட்டோம் யாருக்காகப் போராடப்போகிறோம்? யாரை எதிர்த்துப் போராடப்போகிறோம்? நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் நீங்கள் உத்தமர்களா? அரசு எங்களுக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்ய வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியவர்களே! நீங்கள் ஜனநாயகக் கடமையைச் சரியாகச்செய்தீர்களா? ஓட்டுக்கு காசு வாங்கிய கரங்கள் புரட்சிக்கு ஓங்கும் கரங்களாக இருக்காதே! எத்தனையோ பேர் பொறுப்பற்ற தனமாய் ஓட்டுப்போடமலே இருந்திருக்கிறார்கள் அவர்களுக்கும் அரசு சேவை செய்ய வேண்டுமா? யோசித்துப்பாருங்கள்.

இன்னொன்றையும் யோசித்துப்பாருங்கள் மனசாட்சி உள்ளவர்கள் எல்லோருக்கும் மனசு வலிக்கும். குளங்களை, நீர் நிலைகள் தூர்வாருவதற்கென்று 100 நாள் வேலைத்திட்டம் வந்தது அதற்குச் செலவழித்தப் பணத்தை இயந்திரங்கள் வழியாகச் செய்திருந்தால் எவ்வளவோ நீர் நிலைகள் சீரமைக்கப்பட்டிருக்கும். ஆனால் அரசு 100 நாள் வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது அந்த நூறு நாள் வேலைத்திட்டத்தின் சாதனை என்ன? வேதனையாக இல்லையா? பல்வேறு இடங்களில் பேருக்கு தூரு வாரிவிட்டு மரத்தடியில் படுத்துறங்கி வீட்டுக்கு வருவது தெரியாமலா இருக்கிறது?

எதற்குப் பணம்? வேலைக்குப்போன அனைவரும் நமக்கும் எதிர்வரும் தலைமுறைக்கும் நாம் செய்ய வேண்டிய கடமை இந்த நீர் நிலைகளைச் சரிசெய்வது என்று ஒவ்வொருவரும் எண்ணியிருந்தால் இந்த அவலநிலை நமக்கு ஏன் வரப்போகிறது? இதற்கு எதற்கு நூறுநாள். ஓவ்வொரு நாளுமே நாம் கடமைப்பட்டிருக்கிறோம் என்று ஒவ்வொருவரும் எண்ணியிருந்தால் இந்தத் தண்ணீர்த் தட்டுப்பாடு தடம் தெரியாமல் போயிருக்கும்.

இந்தச் சமூக அக்கறை, கடமையுணர்வு, எதிர்பாரா உழைப்பு, தியாக மனப்பான்மை. பேராசையின்மை, உழைப்புக்கு ஊக்கம் என ஒவ்வொருவரும் செயல்பட்டால் நமக்கேன் இந்த நிலைமை.

ஆகவே ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்சனைக்கு அடுத்தவரை குறைகூறி ஆட்காட்டி விரலை நீட்டுகிறோமே தவிர சுய பரிசோதனை நம்மிடம் இல்லாது போய்விட்டது. இனியும் யாரையும் குறைகூறிக் கொண்டே இருந்தால் நம் குறை தீரப்போவதில்லை நம் வறுமை மாறப்போவதில்லை நம்மை நாமே எழுப்பிவிட்டு நமக்காக நாமே வாழக் கற்றுக்கொள்வோம். எவரையும் எதிர்பார்த்து ஏமாந்து போக வேண்டாம் அவரவர் உரிமையைக் கேட்குமுன் அவரவர் உழைப்பைக் கொடுத்து விடுவோம். தமக்காக மட்டுமே நீண்டகரத்தை தாரை வார்த்துக்கொடுப்போம். பிறரின் தேவைக்காய் நம்மைத் தேற்றிக்கொண்டு தம்மையே கையளிக்கும் தாராக மந்திரத்தைக் கற்றுக்கொள்வோம். யாரோ வருவார்! தாகம் தீர்ப்பார்! என்ற எண்ணத்தை எடுத்தெறிந்துவிட்டு நாமே உழைப்போம்! நாமே விதைப்போம் என்ற எண்ணத்தோடு வாழ்வோம்! வளர்வோம்! வரலாற்றில் இடம்பிடிப்போம். இவ்வையகமும் வாழட்டும்.

ARCHIVES