28

Nov

2018

சாமக்காவலர்களா ! சமூகக்காவலர்களா ! இடையர்கள்

இவர்கள் சத்தம் இல்லாமல் சரித்திரம் படைத்த சாமானியர்கள். இதிகாசங்களைப் புரட்டிப் போட்ட இடையர்கள் தனக்கு ஒன்றுமில்லாத போதும் அனைத்தும் இருந்தும் ஒன்றுமில்லாமல் அலைந்து கொண்டிருந்த இறைவனுக்கே இடம் கொடுத்தவர்கள். இறைவனை மனிதானகக்கூட மதிக்காத அன்றையச் சமூகம் ஏழ்மையைக் காரணம் காட்டி விரட்டி அடிக்கப்பட்டபோதும் ஏழை தம்மால் என்ன இயலும்? என்று எண்ணாமல் இருப்பதைக் கொடுத்து மானிடனாய் அல்ல மனுமகனாய் உயர்த்திப்பிடித்து எண்ணத்தால் பணக்காரர் ஆனார்கள் இந்த இடையர்கள்.

இடையர்கள் என்றவுடன் இந்தியச் சமூகத்தில் வாழும் ஒரு பிரிவினர் என்று எண்ணாமல் சாதியத்தைக் கடந்து சிந்தித்துப்பாருங்கள். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் யாருக்கும் தெரியாமல் யாவராலும் ஒதுக்கப்பட்டு ஊருக்கு அப்பால் ஒரு குடிசையில் ஒதுங்கியிருந்த ஒரு சிறுபான்மையினர். இறைவன் முதன்முதலில் தங்கிய ஏன்? பிறந்த கோயிலை அமைத்துக்கொடுத்தவர்கள். அவர்களைப்பற்றி இக்கட்டுரையில் பேசுகிறேன்.

இன்று பல ஊர்களில் பல கோயில்களுக்குப்பவனி வந்து விட்டேன். எல்லா ஊர்களிலும் கோயில்கள் புதுப்பித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

ஒவ்வொருவரும் தனது திறமைகளை வெளிப்படுத்த பல்வேறு இடங்களிலிருந்து நன்கொடைகள் பெற்று, வரிகள் மூலமாகப் பணங்களைப்புடுங்கி, கொஞ்சம் உழைத்து பணக்காரர்கள் ஆனவர்களை விடாமல் துறத்தி நன்கொடைகள் பெற்று, பாவத்தினால் பணங்களைச் சம்பாதித்துவிட்டு, பயத்தினால் நற்செயல் செய்வதுபோல் பாசாங்கு செய்யும் பரிசேயர்களிடம் பழக்கம்வைத்து, பாதம்கழுவி, பிச்சையெடுத்து அவனை பெரியமனிதர் எனப்புகழந்து நன்கொடைகள் பெற்று கோயிலைப்புதுப்பிப்பதும், கோபுரங்கள் அமைப்பதும், கொடிமரங்கள் தங்கக்கலசத்தால் அமைப்பதும், தரையைத் துளைத்து சலவைக்கல் அமைப்பதும், பணக்காரர்கள் அமர இருக்கைகள் அமைப்பதும் இதனை நான்தான் செய்தேன் எனத் தன் பெயரைக் கல்லறையி;ல் எழுதுமுன் கல்வெட்டுகளில் எழுதி அழகு பார்ப்பதும் இன்று நடைமுறை நாகரிகமாகிவிட்டது.

சரி இவ்வளவு செய்தாகிவிட்டது இதோ டிசம்பரும் வந்துவிட்டது. இப்போது இறைவன் பிறக்கப்போகிறார். என்ன செய்யபோகிறோம். கோயிலுக்குள் குடிசை அமைக்ப்போகிறோம். மீண்டும் வைக்கோல், அதே ஆயர்கள், ஆடுமாடுகள் மாட்டுக்கொட்டில் இதுதானே! இயேசு எங்கே பிறக்கப்போகிறார் குடிசையில் தானே! யாருக்காகப் பிறக்கப்போகிறார் என்று சொன்னால் நமக்காகப் பிறக்கப்போகிறார் என்று சொல்லலாம். ஆனால் யாரிடம் பிறக்கப்போகிறார் இடையர்களிடம்தானே! எதற்கு இந்த இடையர்கள் இவ்வளவு சிறப்புப்பெறுகிறார்கள்? தனக்கென்று எதன்மீதும் உரிமை பாராட்டவில்லை அதனால்தான் உடனே எதையும் அடுத்தவர்களுக்குக் கொடுக்கிறார்கள். தனக்கென்று யாரிடமும் எதுவும் எதிர்பார்க்கவும் இல்லை. அதனால்தான் அவர்களிடம் ஒன்றும் இல்லையென்று தெரிந்திருந்தும் உடனே அவர்களை உள்ளே அழைத்து இடம் தந்தார்கள்.

அன்னை மரியாள், சூசையப்பரின் அந்தப்பயணத்தில் எத்தனையோ பேர்களில் இல்லங்களின் கதவுகளைத் தட்டினார்கள். எல்லோரிடத்திலும் இடம் இருந்தது மனம் இல்லாததால் அவர்களுக்கு இடம் மறுக்கப்பட்டது. இறுதியில் இடையர்களின் கூடாரத்தில் தட்டுவதற்குக் கதவுகள்கூட இல்லை. அவர்களது மனங்களைப்போல் இல்லமும் திறந்தே கிடந்தது. அதனால் எளிதில் இறைவன் குடியேறிவிட்டார். ஒரு கர்ப்பிணிபெண் என்றால் யாருமே இரங்குவார்கள் இன்றைய காலத்தில்கூட ஆனால் அன்றைய சமூகம் அந்த நிலையைக்கண்டும்கூட கதவையும் சாத்தியது மனதையும் மூடியது.

ஆடுமாடுகளில் பிரவசத்தைக்கூட வலிக்காமல் பார்த்துக்கொண்ட இடையர்கள்; பெண் என்றவுடன் இருப்பதை எல்லாம் கொடுத்துவிட்டு நடு இரவுக் குளிரில் அவர்கள் நடுங்கிக்கொண்டு இருந்தார்கள். நாற்றமடிக்கும் என்று ஒதுக்கிவைத்த மாடடைக்குடில்தான் இறைவன் தோன்றும் நாற்றங்காலாகிவிட்டது.

இருப்பதிலிருந்து எடுத்துக்கொடுத்து விளம்பரம்தேடிக்கொள்ளும் உலகில் இருப்பதைக்கூட பிறருக்காக இழக்கின்ற அந்த இடையர்கள் உண்மையிலேயே பிதாமகன்கள்தான், தனது தனக்கு என்று இன்று ஓடிக்கொண்டு இருக்கின்ற உலகில் ஒண்டியிருந்த குடிசையும் வந்தவர்களிடம் கொடுத்துவிட்டு வெளியில் குளிரில் நடுங்கினார்கள். பொருள் இருப்பவர்கள் அருகில் இருப்பதைப் பெருமையாக எண்ணும் இவ்வுலகில் பலரால் ஒதுக்கியவர்களுக்கு உடனிருந்தவர்கள் இடையர்கள் தெரிந்தவர்களை அழைத்து விருந்து வைத்து நினைத்ததைச் சாதித்துக்கொள்ளும் சந்தர்ப்பவாத உலகில் அரியாத ஒரு குடும்பத்திற்காக தம் உடைமையை தாரை வார்த்தவர்கள் பிறர் வயிறு காலியாக இருக்க, தன் அறையை ஆடம்பரப் பொருட்களைக்கொண்டு நிரப்பி, பல உயிர்கள் நிர்வாணமாய் நிற்க தன் இருக்கைகளுக்குக்கூட சட்டைத்தைத்துப் போட்டு பிற மனிதர்கள் வெயிலிலே காய்ந்து உழைத்துக்கொண்டிருக்கிற நேரத்தில் தன் அறையில் குளிர்ச்சியை அமைத்துக்கொண்டிருக்கிற மக்களுக்கு மத்தியில், கூரை இல்லாத குடிலை பிரசவத்திற்கு இலவசமாய்த் தந்த இடையர்கள். கூலியைக் குறைத்து, வட்டிக்குக்கொடுத்து தாலியைக்கூட பிடுங்கி பசியோடு வந்தவர்களை பாராமுகமாக இருந்து, விசேச வீட்டில் கூட எவ்வளவு வரும் என்று எண்ணி மொய்செய்து, பொருள் இருந்தால் உறவு என்றும் பொருள் இல்லையென்றால் தூரத்துச் சொந்தம் என்று துரத்துகின்ற உலகில், இடம்தேடி அலைந்தவர்களை இனம்கண்டு இடம் கொடுத்தவர்கள் இடையர்கள். இவர்களை இன்றும் வரலாறு சாமக்காவலர்கள் என்று சொல்லியது. இல்லை இல்லை இவர்கள் சமூகக்காவலர்கள் இவர்களைச் சந்திக்க ஆசைப்படுகிறேன். அந்தப் பழைய இடையர்களை அல்ல. அந்த பசுமையான நினைவுகளை நினைவுபடுத்தும் இதயத்தில் இரக்கம், ஈரம் உள்ள பிறருக்காகத் தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுக்கின்ற மனிதர்களை…..

ARCHIVES