சர்க்கஸ் உலகம்

காட்டுக்குள் திரிகின்ற வீரமிக்க விலங்குகளைப் பிடித்து, அதன் சுயத்தைச் சாகடித்து வயிற்றுப் பிழைப்பிற்காக ஆடவைத்து, குதிக்க வைத்து, தான் சொல்கிறபடியெல்லாம் செய்யவைத்து, காசு சம்பாதிக்கும் ஒரு வேடிக்கை மனிதர்களின் விசித்திர விளையாட்டுகள்தான் சர்க்கஸ். ஒவ்வொரு விலங்கும் தனக்குரிய ஆண்மையையும் ஆளுமையையும் இழந்து மனிதன் சொல்கிறபடி ஆடுகின்ற அடிமை விளையாட்டை காசு கொடுத்து வேடிக்கைப்பார்க்கும் விசித்திர மனிதர்கள்தான் அங்கு வேடிக்கைபார்க்கச் செல்லும் வாடிக்கை மனிதர்கள். இதனைக்கூட ஒரு வகையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்று எண்ணிக்கொள்ளலாம். இதேபோல்தான் இன்றைய உலக வாழ்க்கையிலும் மக்கள் உருண்டோடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இன்று வேடிக்கையாக இருக்கிறது.

உங்களுக்குத் தெரிந்த ஒரு கதையை உங்களுடைய கருத்துப்பகிர்விற்காக வைக்கிறேன்.

ஒருமுறை சர்க்கஸ் கூடாரத்திற்குச் சென்று ஒரு M.A பட்டதாரி ஒரு வேலை கேட்கிறான். தன்னுடைய துன்பங்களைச் சொல்லி தனக்கு வேலை இல்லையென்றால் வாழ முடியாத நிலையையும் எடுத்துச் சொல்கிறான். வேலையே இல்லை என மறுத்த சர்க்கஸ் கூடாரத்தலைவனோ அவனுடைய நிலையைக் கண்டு இரங்கி இந்தக் கூடாரத்தில் குரங்கு ஒன்று இறந்துவிட்டது. அதுபோல் வேடமணிந்து கொண்டு நடி என்று கூறிவிட்டான். அவனும் சரி என்று கூறிவிட்டான். சர்க்கஸ் ஆரம்பமானது.

குரங்கு வேடமணிந்தவன் இங்கும் அங்கும் குதித்து விளையாடிக் கொண்டிருந்திருந்தான். திடிரென எதிர்பாராத விதமாகச் சிங்கத்தின் குகைக்குள் விழுந்துவிட்டான். அங்கு சிங்கம் படுத்திருந்தது குரங்கு வேடிமணிந்தவனுக்குப் பயம். அவன் சிங்கத்தைப்பார்த்துப் பயந்து என்னை ஒன்றும் செய்துவிடாதே நான் வயிற்றுப்பிழைப்பிற்காக இந்த வேடம் அணிந்திருந்தேன் தெரியாமல் உன்னிடம் வந்து மாட்டிக்கொண்டேன் என்னை விட்டுவிடு எனக்கெஞ்சினான்.

உடனே சிங்கம் பேசத் தொடங்கியது. கவலைப்படாதே நானும் மனிதன்தான். உன்னைவிட அதிகம் படித்தவன் என்பதனால் எனக்கு சிங்கவேடம் கொடுத்திருக்கிறான். நானும் எனது வயிற்றுப்பிழைப்பிற்காக இப்படி நடித்துக்கொண்டு இருக்கிறேன் என்றான். இவர்கள் நடிப்பதையும், இவர்களை சர்க்கஸ்காரன் ஆட்டிப்படைப்பதையும் வெளியில் காசு கொடுத்து வந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

இதனைச் சற்று எண்ணிப்பாருங்கள். உங்களுக்குப் பல உண்மைகள் புரியும். இன்று படித்தவர்கள் ஏன்? உயர்படிப்பை எண்ணிப்பாருங்கள், IAS, IPS, P.hd, விஞ்ஞானி பொறியியல் வல்லுநர்களை எல்லாம் தன் சுயத்தை இழக்கவைத்து அரசியல்வாதிகள் என்னும் சர்க்கஸ்காரன் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறான். இதனை வெளியில் உள்ள மக்கள் வேடிக்கைப்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இன்று IAS, IPS எல்லாம் அரசியல்வாதிகளின் கூடாரங்களில் சிங்கம் புலியாக இருந்தாலும் சீற முடியவில்லையே அவன் ஆட்டிப்படைப்பதற்கெல்லாம் ஆட வேண்டியிருக்கிறது மீறினால் பந்தாடப்படுவார்கள்.

பல டாக்டர்கள் இன்று அரசியலில் இருந்தும் இன்னும் அரசியல் படுத்த படுக்கையாகத்தான் இருக்கிறது பல வக்கில்கள் அரசியலில் இருந்தும் இன்னும் நீதி தேவதை குற்றக்கூண்டில்தான் நிறுத்தப்படுகிறாள்.

இதில் படித்தவர்கள், உயர் அதிகரிகளால் இந்தச் சமூகத்தை மாற்ற முடியுமா? என்றால் மாற்றமுடியாது ஏனென்றால் அதிகாரிகள் அதிகாரிகள்மட்டும்தான், ஆனால் அரசியல்வாதிகள் தொண்டர்கள் என்றும் கூட்டத்தைக் கொண்டவர்கள் இவர்கள் தாங்களும்தான் சுரண்டப்படுகிறோம் என்பதை எப்போது உணர்கிறார்களோ! அப்போதுதான் நாடு சுத்தப்படும். அரசியல்வாதிக்கு எதிராக அவர்களே திரும்புவார்கள் புரட்சிவெடிக்கும். உண்மை நிலைக்கும்.

எப்போதோ எரியப்படும் எலும்புத்துண்டுகளுக்கு எவர்மீதும் பாயும் இந்த ஏமாளிகள் இருக்கும் வரை அரசியல்வாதிகளின் ஆட்டத்திற்கு அஸ்தமனம் இல்லை. காசுக்கு ஓட்டுப்போட்ட கூட்டங்கள் இன்று வேடிக்கை மனிதர்களாகத்தானே இருக்கிறார்கள். நாளைய தலைமுறையைப்பற்றி இங்கு யாருக்கும் கவலை இல்லை நாடுநலம்பெற, வீடு வளம்பெற வேண்டும் என ஒரு சமுதாயம் விரும்பினால் படுத்துறங்கும் பாமரன் எழுந்திருக்கவேண்டும். இந்த அடியாள் தனத்தைச் சுடுகாட்டில் வைத்து எரிக்க வேண்டும். கட்சித்தொண்டன் காணமால்போய் சமுதாயத் தொண்டு ஆற்றுபவனாக சாமானியன் மாறவேண்டும். இன்று கட்சித்தலைவன், சாதித்தலைவனின் துப்பாக்கிகளாகச் செயல்படும் பரிதாபத்துக்குறியவர்களே அவனது தோட்டாக்கள் உன்னைத்துளைக்கும் முன் அவனை நோக்கி அவனது துப்பாக்கியைத் திருப்பிவிடு, அவன் போடுகின்ற எலும்புக்காய் அடுத்தவர்களைக்கடிக்கும் நாய்களாக இல்லாமல் அவனது ஆயோக்கியத்தனத்தையும் கண்டு இப்போதே குரையும் தேவைப்பட்டால் கடித்தும்விடுங்கள் இல்லையென்றால் உங்கள் சாவுக்கும் சாம்பலுக்கும் வெகுகாலமில்லை இனியும் நீ சர்க்கஸ் புலியல்ல, சரித்திரம் படைக்கும் புலி. வேங்கையே வெளியே வா, விடியல் வெகுதொலைவில் இல்லை தொண்டனாக இருக்காதே தொண்டு ஆற்றுபவனாக இரு. நாளைய உலகம் உன் கையில் நம்பிக்கையோடு நடைபோடு.

//

Comments are closed.