16

Apr

2018

உன்னால் மட்டுமே!

உன்னால் மட்டுமே!

உன்னால் மட்டுமே!

இருபத்தியோரம் நூற்றாண்டைத் தொடங்கியதிலிருந்து தொல்லைகளும் நம்மைத் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. எங்கும் மக்களிடையே அலுப்பும் சலிப்புகளும் அங்கலாய்ப்புகளுமே தேசியகீதமாகத் தெருவில் கேட்கப்படுகிறது. உணவுக்குத் தட்டுப்பாடு, உணர்வுகளுக்குத் தட்டுப்பாடு, வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை வாட்டுதல், வறட்சி தலைவிரித்தாடுதல், ஊழல் தாண்டவமாடுதல் இலஞ்சம், ஏமாற்று, கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் சீண்டல்கள் என ஒரு நரகத்தையே உருவாக்கி நாளும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அறிவியலில் வளர்ந்துவிட்டோமென்று அலைபேசி, தொலைபேசி, தொலைக்காட்சி, பேஸ்புக், டுவிட்டர், கணிணி என ஒவ்வொருவரும் தன்னைத் தொலைப்பதற்காக அதற்குள் எதனையோ தேடி திரிந்து கொண்டிருக்கிறார்கள். மண்ணை மதித்து விவசாயத்தை வாழவைத்து உணவினை உற்பத்தி செய்து மனிதன் வாழும்வரை மாண்புடன்தான் வாழ்ந்து வந்தான். என்றைக்கு நம் இளைஞர்களிடம் வெளிநாட்டுவேலை அல்லது வெளிநாட்டு கம்பெனிகளில் வேலை என்றவுடன் அவர்கள் நடை உடை பாவனை எல்லாம் வெளிநாட்டுக் கலாச்சாரத்தை தனக்குள் கலந்துவிட்டார்கள், நமது கலாச்சாரம் அவர்களிடமும் காணாமல் போய்விட்டது. உள்நாட்டுப் பணமதிப்புகூட அவர்களால் உதாசீனப்படுத்தப்பட்டுவிட்டது.

இது ஒருபுறம் இருக்க தமிழர் என்றாலே அடிக்கவும், ஒடுக்கவும், அடக்கவும், நொறுக்கவும் ஆங்காங்கே தமிழன் அனாதையாகவும், அகதியாகவும் தமிழனின் தலையெழுத்து எழுதப்பட்டுவிட்டது. இதன் உச்சம் இலங்கையில் அந்தப்பரம்பரையே கதறக்கதறக் கருவருக்கப்படும்போதும் உலகம் மௌன அஞ்சலி மட்டும் செலுத்திக்கொண்டிருந்து.

விலங்குகளை வதைத்தால்கூட புளுகிராஸ் போராடுகிறது. ஆனால் தமிழன் தாக்கப்படும்பொது மட்டும் கேட்க நாதியற்றுக்கிடக்கிறானே என எண்ணும்போது இரத்தக்கண்ணீர் வருகிறது.

தமிழ்நாட்டிற்குள்ளேயே நம் தமிழ்மொழி ஆங்கில மோகத்தால் அழிக்கப்படுகிறது. அனைத்துப் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை ஆங்கிலக்கல்வி கற்க ஆசைப்படுவதால் தமிழ் இலக்கியங்களும் அழிந்து கொண்டு வருகிறது. ஏற்கெனவே பாட்டி வைத்தியம். மூலிகை வைத்தியம் உடல்உழைப்பு அனைத்தையும் இழந்துவிட்டு நாகரீகம் என்ற பெயரால் நடைபிணமாகத் திரிகிரிறார்கள் இதனால் தமிழ், தமிழன், தமிழ்நாடு கொஞ்சம், கொஞ்சமாக அழிக்கப்படுவதை யாருமே கண்டு கொள்ளப்படாமலேயே இருக்கிறோம்.

இதனால்தான் தமிழ்நாடு தத்தளிக்கும்போது அதாவது மழையின் பற்றாக்குறை விவசாயத்தின் வீழ்ச்சி, விவசாயிக்கு வறுமை வெள்ளத்தின் அழிவு, கூடங்குளம், கல்பாக்கம், ஓக்கியோபுயல், சாகர்மாலா, குமரித்துறைமுகம், கதிரமங்கலம் நெடுவாசல், நியுட்ரினை, ஸ்டெர்லைட் (தூத்துக்குடி) என்பவையெல்லாம் தமிழகத்தை தள்ளாட வைத்தபிறகும் என் தமிழ் இனம் கொதித்து எழவில்லையே? எழ வேண்டிய என் இளைய சமுதாயமோ, ரசிகர்களாகவும், ரவுடிகளாகவும், எடுபிடிகளாகவும், வழிப்பறி, ஜெயின்பறிப்பு கூலிப்படைகள், கட்சித்தொண்டர்கள் என கோர்ட்டருக்கும், கோழிப்பிரியாணிக்கும் காணாமல் போய்விட்டார்கள். தமிழ் மக்களோ வாக்குரிமையை தனக்கே வாயக்கரிசியாகப் போட்டுக்கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இதற்கு முடிவே கிடையாதா என எண்ணும்போது ஒரு விடிவே கிடைத்திருக்கிறது. அதுவும் தெற்கே சூரியன் உதித்திருக்கிறது. வடக்கே மெரினாவில் உதித்தது ஆனால் இன்று தெற்கே குதித்திருக்கிறது. அதுவும் போராட்டத்தில் குதித்திருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலைக்காகக் களமாடுகிறது என் தமிழ்தேசம் குரங்கணிக்காடு பற்றி எரிந்து 26 உயிர்களைப் பறித்துவிட்டது. இப்போது தெற்கே வேள்வித்தீ பரவிக்கொண்டிருக்கிறது. இனி தடையேது இதற்கு விடைகிடைக்காமல் எந்தச் ஜீவனும் வீட்டுக்குப்போகாது. ஊடகங்கள் உண்மையை உரைக்கவில்லை என வருத்தப்படவேண்டாம். எல்லோர் கையிலும் அலைபேசி இருக்கிறது அதுவே ஊடகம். சிலர் காசுக்காகக் குரைப்பார்கள் அவர்கள் கட்சித்தொண்டர்கள் காசுக்காகக் குரைக்காமல் இருக்கிறார்கள். என்றால் அவர்கள் ஒரு சில ஊடகங்களே அதற்காக வருந்த வேண்டாம். உண்மை உறங்காது அது வழித்துவிட்டது. இனி விடைகாணாமல் திரும்பாது இருக்கிற வரையில் போரடுவோம். இரண்டில் ஒன்றைப் பார்த்துவிடுவோம். வியாதிவந்து சாவதைவிட போராளியாய் சாவோம்.

ARCHIVES