மண்ணை ஆள்பவர்கள்…

மண்ணை ஆள்பவர்களை மன்னன் என்று புராணங்களும், இதிகாசங்களும் சொன்னது. ஆனால் தலையில் மண்ணை வைத்துக் கொண்டு ஆண்ட மானங்கெட்டவர்களையும் இந்த வரலாறுகள் வழியின்றி வலியோடு பேசியிருக்கிறது. ஆனால் அந்த வரலாறு அவர்களோடு அவர்கள் வம்சத்தையே முடித்தும் வைத்திருக்கிறது.

எவன் ஆண்டால் எனக்கென்ன? பூமியில் வாழ்வதற்குப் போதுமானது. ஒரு பிடி உணவு, ஒரு சாண் உடை இதனைக் கொடுப்பவன் விவசாயியும், தொழிலாளியும் தான். அவன் மண்ணைத் தோண்டி என்னை வாழ வைக்கிறான். விவசாயி மண்ணோடு போராடுகிறான். வான்மழைக்கு விண்ணோடு போராடுகிறான். இயற்கையோடு போராடுகிறான், செயற்கை உரங்களோடு போராடுகிறான் பயிரை அழிக்கும் உயிர்களோடு போராடுகிறான் அலையோடு போராடுகிறான் விலையோடு போராடுகிறான் இத்தனையும் செய்கிறானே இந்த விவசாயி! எதற்காக? எந்த விதத்திலும் அவனை ஏற்றுக் கொள்ளாத என்னையும் வாழவைப்பதற்காக! இப்போது எண்ணிப் பாருங்கள் விவசாயி எவ்வளவு பெரிய போராளி என்று!? அதுவும் அடுத்தவர்களுக்காக!

ஒவ்வொரு குழுவையும் வழி நடத்துபவன் தலைவன் எனப்பட்டான். அவனது முதல் வேலையே அவனை நம்பியிருக்கிற உயிர்களுக்கு உணவு, உடை, பாதுகாப்பு வழங்குவதே ஆகும். உற்பத்தியாகிற உணவுப் பொருளை இல்லாதவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்து வாழ வைப்பதுதான். அவனது முதல் கடமை.

இப்போதும் விவசாயிகள் மாறவில்லை பிறருக்குக் கொடுப்பதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். உழைத்தவர்கள் இப்போது போராடிக் கொண்டிருக்கிறார்கள். காரணம் உழைப்பவனை அடிமையாக்கி உற்பத்திப் பொருட்களை பிடிங்கிவிட்டு பணக்காரர்களின் பதுக்குக் குழியில் பதுக்குவதற்குப் பட்டாபிசேகம் பெற்றவர்கள் பாடாய்ப் படுகிறார்கள்.

வரலாற்றில் பல நாட்களில் கேவலமான ஆட்சிகளால் கருப்புப்பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன மக்கள் பஞ்சம், பட்டினி, கொள்ளை நோயினால் தாக்கப்பட்டு அவ்வப்போது பூமி தன்னைத் தானே சிதைத்திருக்கிறது. சில நேரங்களில் 23ம் புலிக்கேசிகளின் கோமாளித்தனங்களும் அவ்வப்போது அரங்கேறித்தான் இருந்திருக்கிறது.

மன்னர்களின் மடமை நாட்டுக்குக் கொடுமையாய் முடிந்திருக்கிறது. இலக்கியங்களில் கடை ஏழு வள்ளல்கள் என்று புகழப்பட்ட மன்னர்களில் ஒருவன் பேகன். இவன் காட்டில் மயிலுக்குப் போர்வை போர்த்தியவன் ஆனால் வீட்டில் அவன் மனைவி கண்ணகி அவன் பிரிந்து வாடி இருந்தால், இதனைக் கண்ட புலவர்கள் எல்லாம் அவனைத் தன் பாடல்களால் கழுவி ஊற்றினார்கள்.

மக்களும், மனையில் உள்ளவர்களும் வாழத் துடித்துக் கொண்டிருக்கும்போது பூனைக்குப் புணுகு தடவுவதும் மயிலுக்கு மசுறு புடுங்குவதுமா மன்னனுக்கு வேலை?

காக்கைக் கூட்டம் அதிகமாக இருக்கிறது ஆகவே காக்கையைத் தேசியப் பறவையாக்குங்கள் என்றால் நாம் ஒத்துக்கொள்வோமா? ஆனால் ஓட்டுக்கள் அதிகமாய்ப் பெற்றவனைத்தானே நம்மை ஆளத் தகுதி என நினைக்கிறோம்! அதனால் இன்று தரங்கெட்டு நிற்கிறோம்.

இப்படியே போனால் எதிர்காலம் என்னாகும். விவசாயம் செய்ய வேண்டும் என்பதற்காக விவசாயி போராடுகிறான். செய்ய வேண்டிய வேலையைச் செய்வதற்கு அதிகாரிகளுக்கு நாம் இலஞ்சம் கொடுக்கிறோம். கொஞ்சம் கவனிங்க என்பவனைப் பணத்தால் குளிப்பாட்டுகிறோம். குடிக்க, கூட்டிக் கொடுக்க எல்லா…..வேலையும் பார்த்து காரியத்தை முடித்துவிட்டால் எவரெஸ்டு சிகரத்தில் ஏறிக் கொடியை நாட்டியதுபோல் சிலிர்த்துக் கொள்கிறோம். இந்த விவசாயியை மட்டும் ஏன் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறோம். மறந்து போனோமா? இல்லை மரத்துப் போனோமா?

இந்தக் கடிதம் மூலம் உங்கள் கரம் தொழுகிறேன். உங்கள் கரம் விவசாயிகளின் பலமாக மாற வேண்டும். உன்னை வாழ வைக்கத் துடிக்கும் அவர்களை வாழ வைக்க உங்கள் இதயம் துடிக்க வேண்டும். அவர்கள் வணக்கத்திற்குரியவர்கள் என்பதனை ஏற்றுக்கொள்ளுங்கள்! எடுத்துச் சொல்லுங்கள். அவர்களுக்காய் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என நான் கேட்கப் போவதில்லை! ஆனால் ஏதாவது அவர்களுக்காய்ச் செய்யுங்கள் என்று மட்டும் கேட்கிறேன். பாராமலேயே இருப்பதற்கு நாம் பிணமுமல்ல! பார்த்துக் கொண்டே சும்மா இருக்க நாம் கிறுக்கனுமல்ல, உணர்ச்சியுள்ளவர்கள். இதற்கு நீதி வேண்டி நீங்கள் களத்தில் தோன்றினால் மின்னலாகுங்கள், இறங்கினால் இடியாகுங்கள், சுற்றினால் சூறாவளியாகுங்கள், சேர்ந்துவிட்டால் சுனாமியாகுங்கள். சோறு போட்டவர்கள் விவசாயிதான். நாம் கொஞ்சம் உப்பும் போட்டுக் கொண்டோமல்லவா!

“முதுகெலும்பு பழுதுபட்டால்
முடங்கிப் போவோம்
நாட்டின் முதுகெலும்பே
விவசாயிதானே!”