என்ன செய்யப் போகிறோம்?…

“கல்வியே கல்லறைக்கு
அழைத்தால்…
பள்ளிகள் எதற்காக?”

மொட்டுக்கள் எல்லாம் மலர்களாகும் என்று நினைத்து கொண்டிருக்க சருகுகளாகி சமாதியில் விழுகின்றதே! கனவுகளைச் சுமந்து கொண்டு கண்ணெதிரில் திரிந்தவன். நினைவுகளைச் சுமக்கவிட்டு கல்லறையில் உறங்குகிறான். தேர்வுகள் எல்லாம் தேர்வதற்குதானே தவிர தவறுவ(இறப்ப)தற்காக அல்ல.

நீட் தேர்வு என்று நீட்டி முழக்கிக் கடைசியில் பிள்ளைகளை அடக்கி ஒடுக்கி அடக்கம் பண்ணிவிட்டோமே! எவ்வளவு பெரிய குற்றத்தைச் செய்துவிட்டோம்! இந்த மாணவர்களின் தற்கொலைக்குத் தேர்வு மட்டும் தான் காரணமா? அல்லது அதனைத்தேடிப் போனதும் ஒரு காரணமா? சிந்திக்க வேண்டும்

வைத்தியம் ஒன்றுதான் இனி பிழைப்பதற்கு ஒரே வழி என்று பைத்தியம் பிடித்ததுபோல் அதற்கே அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறோமே இது மாற்றத்திற்கான வழியா? இல்லை மன வியாதிக்கான முதல் சுழியா?

டாக்டர் படிப்புத் தான் உயர்ந்தது. அதனை எப்படியாவது அடைந்தே தீர வேண்டும என்று இப்போது இந்தச் சமூகம் வியாதியாய் அலைகிறதே! இதனை எந்த மருத்துவரிடம் காட்டிக் குணப்படுத்துவது என்றுதான் புரியவில்லை. அதிலும் ஒரு சில கிழடுகள் உன் கழுத்தில் அந்தத் டெதஸ்கோப்பைப் பார்த்து விட்டுத்தான் நான் கண்ணை மூடுவேன் என்று கடைசி ஆசையைச் சொல்ல, அந்த மாணவனுக்கு கனவு நனவாகுமோ எனப் பயந்து கழுத்தில் கயிற்றை மாட்டிக் கொண்டு அவன் கண்ணை மூடிவிடுகிறான். நம் கண்முன்னே கல்லூரிப் பூக்களெல்லாம் கல்லறைப் பூக்களாக மாறிக் கொண்டு வருகிறதே! இந்தக் கருமாந்திரத்தைத் தீர்க்க எந்தக் கடவுள் வரப்போகிறான்? கண்ணீரோடு கையேந்துகிறேன்.

கல்வி என்பது ஒரு வாளியை நிரப்புவது போலல்ல. அது மனதிற்குள் கனன்று கொண்டிருக்கும் நெருப்பைப் பற்ற வைப்பது. அது என்னவென்று முதலில் தெரிய வேண்டியது பெற்றோர்களுக்கே. அவர்கள்தான் தங்களது பிள்ளைகளின் மனதில் என்ன இருக்கிறது. என்பதனை உணர்ந்து தனது குடும்பச் சூழலில் அதனை எப்படி நிறைவேற்றி வைப்பது என்பதனைத் தெரிந்து புரிந்து கொண்டு அதற்கேற்றப் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்த்து ஆசிரியர்களிடம் அவன் திறனைக் கூறி வளர்க்கச் சொல்லுவதுதான் கல்வி. அதுதான் பெற்றோர்களின் கடமை.

பிள்ளைகளின் விருப்பத்தைவிடப் பெற்றோர்களின் பேராசையே பிள்ளைகளைக் குழிக்குள் தள்ளுகிறது. நீ என்ன செய்வாயோ தெரியாது? டாக்டராக ஆகியே தீரவேண்டும் என ஒரு கமாண்டர்போல் பெற்றோர்கள் கட்டைளையிட அவன் எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையில் அவனால் செய்ய முடிந்தது தற்கொலை மட்டுமே இப்போது சொல்லுங்கள் யார் குற்றவாளி?

குழந்தைகள் பூக்களைப் போல் மென்மையானவர்கள். அவர்களைப் போர்க்களத்தில் நிறுத்துகிறீர்கள். உங்கள் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையைக் கற்றுக் கொடுங்கள். எச்சூழலிலும் வாழ வழிகாட்டுங்கள். எது வந்தபோதும் கலங்காத நல் மனதை வளர்த்துவிடுங்கள். அவமானங்களைக் கூட படிக்கற்களாக மாற்ற அவனுக்குச் சொல்லிக் கொடுங்கள் வறுமையிலும் பெருமையாக வாழலாம் என வாழக்கைப்பாடம் நடத்துங்கள். எது வந்தபோதும் நான் இருக்கிறேன் என்று அவன் கையைப் பிடித்துச் சொல்லுங்கள்.

என் தாத்தா படிப்பறிவில்லாதவர்தான் ஆனால் ஒன்று சொல்லுவார் காலுக்குத் தகுந்தாற் போல்தான் செருப்பு தைக்க வேண்டுமே ஒழிய செருப்புக்குத் தகுந்தாற்போல் காலை வெட்டக் கூடாது. என்பார் அதேபோல் தன் பிள்ளைகளுக்குத் தகுந்த(படிப்பு) செருப்பை எடுக்க வேண்டுமேயொழிய செருப்புக்கு(படிப்பு) தகுந்தபடி சிறார்களின் பாதங்களைச் சிதைக்காதீர்கள்.

கல் கிடைத்தால் சிலை செய்யலாம் களிமண் கிடைத்தால் பானை வனையுங்கள் அதில் ஏன் சிலை செய்ய வேண்டுமென்று களிமண்ணைக் கட்டாயப்படுத்துவது காட்டுமிராண்டித்தனமல்லவா? மலையிலிருந்து குதிப்பது தற்கொலையாக இருக்கலாம். ஆனால் தள்ளி விடுவது தற்கொலையல்ல! கொலை! இங்கு நடப்பது தற்கொலையல்ல தள்ளி(படிப்பில்) விடப்படும் கொலை, இதுவரை, சிசுக்கொலை, ஆணவக்கொலை, வரதட்சணைக்கொலை என்ற வரிசையில் இப்போது தகுதிக்கு மீறி ஆசைப்படும் படிப்புக் கொலை. ஆகவே வர இருக்கின்ற காலங்களில் நாம் தடுக்க வேண்டியது தற்கொலையை அல்ல அதற்குத் தள்ளிவிடும் பேராசைப் பெற்றோர்களை. நீங்கள் கட்டிய தொட்டில் மருத்துவத்திற்கு மட்டுமல்ல மற்ற அனைத்திற்கும்தான் மறந்து விடவேண்டாம்! நாளை நமதே!

“உற்பத்தியாகும் மலையே
நதி ஒடுமிடத்தைத்
தீர்மானிக்கக் கூடாது
பலருக்கும் பலன்கொடுக்க – அதுவே
பவனி வரட்டும்.”