வெயிலோடு விளையாடு…

Posted on : 18-Apr-2024

எங்கும் ஒலிக்கும் அபயக் குரல் வெயில் அதிகமாகி விட்டது. வெளியே போகாதீர்கள் என்பதுதான். நாம் வெளியே போகாமல் இருந்தால் என்ன செய்ய முடியும்? சூரியன் என்பது ஏதோ திடிரென்று தோன்றிய நோயல்ல! எதிர்பாராமல் வந்த இயற்கை அழிவும் அல்ல. ஏறக்குறைய உயிரினங்கள் உருவாகு முன்னே தோன்றியது தான் ஒளி. ஆனால் இப்போது ஏன் நமக்கு அது எதிரியானது சிந்தித்துப் பாருங்கள்.

சூரிய ஒளி மட்டும் இல்லாது போனால் பூமி சூன்யமாகி விடும். உயிர்தோன்றுவதற்கும், வளர்வதற்கும், வாழ்வதற்கும், வாழ்வாதாரமே சூரியன்தான். சூரிய ஒளி இல்லையென்றால் பூமி இரவாகவே இருக்கும். ஏன் சூரியன் இல்லையென்றால் பூமி என்பதே இருக்காது. அதனால் சூரியனைக் கடவுளாகவே வணங்கிய மனித இனம் நாம். அது இன்று நமக்கு ஏன் எதிரியாகப் போனான்?

சூரியன் நமக்கு எதிரியா? இல்லை சூரியனுக்கு எதிராக நமது பயணம் இருந்ததால் சூரியன் நமக்கு எதிரியாய்ப் போனான். இந்தப் பூமியில் தோன்றிய ஒவ்வொரு உயிர்களுமே இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும். இயற்கையை விட்டு விலகுகிற எதுவும் பூமியில் புதையுறத்தான் போகிறது என்பது காலம் நமக்குச் சொல்லும் பாடம்.

மனிதன் உலகில் வாழ்வதற்கு இயற்கை முக்கியம். அதில் அவன் தேடிக் கொள்ள வேண்டியது உணவும், உடையும், உறைவிடமும் மட்டுமே இவற்றையும் மனிதன் இயற்கையோடு வைத்திருந்தான். இயற்கையில் கிடைத்த காய்கறிகள், கனிகள், சில செடிகள், பூக்கள், தண்டுகள் இவற்றை உண்டு வாழ்ந்தான். அவனது உடைகள் என்பது முதலில் மானத்தை மறைப்பதற்காக உருவாக்கப்பட்டது அல்ல. காட்டுக்குள் அலைந்து திரிவதனால், சில உயிரினங்களாலும் அடர்ந்த காடுகளாலும் மனிதனின் மென்மையான பாகங்களுக்கு தீங்கு ஏற்படாதபடி அணியப்பட்டதுதான் ஆடை. அதிலும் முக்கியமாக மரத்தில் ஏறும்போது மார்பிற்குக் கவசம் அணிந்திருப்பார்கள். முடிக்கு ஆபத்து ஏற்படாதபடி தலைக்கு பாகை அணிந்து இருப்பார்கள். காட்டுக்குள் செல்வது குறைந்த பிறகுதான் தலைப்பாகை குறைந்தது. மனிதரிடமிருந்த கோவணமும் மறைந்தது. மரம் ஏறுவது குறைந்த பிறகு மார்புக் கவசம் குறைய ஆரம்பித்தது.

ஆனால் பிற்காலத்தில் பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்ட ஆடையானது. பாதுகாப்பான இடத்திற்கு வந்தபிறகு மனிதன் தனது மறைவான இடத்தை மறைத்து மானத்தைக் காக்க உருவானதாகச் மாற்றிக்கொண்டான். அப்படியென்றால் ஆதிவாசிகள் சிலர் இன்னும் நிர்வாணமாகவும் அரை நிர்வாணமாகவும் திரிகிறார்களே அவர்களுக்கு மானம் என்பது இல்லையா? சிந்திக்க வேண்டியது.

அறிவியல் வளரும்போது ஆன்மீகங்கள் மனிதனை ஏமாற்ற மூட நம்பிக்கைகளுக்குக் காரணங்களைப் போதிக்க ஆரம்பித்தது. நோயையும், பேயையும் வைத்து மனிதனைப் பயமுறுத்தி அவனது பலகீனங்களை மூலதனமாக்கியது. ஒருபுறம் சாமியார்கள் மறுபுறம் மருத்துவர்கள் மனிதனைப் பயமுறுத்த அவன் மரணபயத்தால் இவர்கள் முன் மண்டியிட்டான்.

தொடக்க காலம் பணவர்த்தனம் இல்லாமல் பண்டமாற்று உள்ள காலம். பண்டமாற்று இருக்கும் வரை விவசாயிதான் பணக்காரன், விவசாயிதான் முதலாளி அவன்தான் படியளக்க வேண்டும். அவன்தான் வேலை கொடுக்க வேண்டும். எவனொருவனுக்கு அதிகமான நன்செய், புன்செய் நிலங்கள் இருக்கிறதோ எவர்களுக்கு அதிகமான தோட்டங்கள் இருக்கிறதோ அவர்களே பெரிய பணக்காரர்கள் எனப்படுவர்.

உலகில் பணப் பரிமாற்றம் வந்தபிறகு விவசாயம் விவசாயி, பலமிழந்தார்கள், பணத்தால் எதுவும் வாங்கலாம் என்ற நிலை வந்தபிறகு உற்பத்திகள் தடமாறியது. உழைப்பவர்களின் நிலை மாறியது. விவசாயி வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டான் அதனால் விவசாயிடம் இருந்த நமது வாழ்வாதாரங்கள், அழிக்கப்பட்டன, குறைக்கப்பட்டன, வீழ்த்தப்பட்டன.

முதலில் நாம் அழிந்தது பனைமரத்தால் தான் விவசாயின் வறுமை பனைமரத்தை அழித்தது. இதனால் மனிதனுக்கு பலமும் வளமும் கொடுக்கிற பனையின் பொருட்கள் பற்றாக் குறையானது. கருப்பட்டிக்குப் பதில் சீனி வந்தது. மனிதனுக்கு சர்க்கரை வியாதி வந்தது. ஓலைக்குப் பதில் சிமெண்ட், செங்கல் வந்தது. மனிதனுக்கு வெப்பத்தினால் அம்மன் படுதல், காமாலை, தலைச்சுற்று, இரத்தக் கொதிப்பு வந்தது. பதனீர், கள்ளுக்குப் பதில் டாஸ்மார்க் வந்தது மனிதனை நரம்புத் தளர்ச்சி ஏற்படுத்தி மூளையை மழுங்கடித்தது. நடைபிணமாய் நடக்க வைத்தது. பனங்கிழங்கு, பனங்குறுத்து, தவுண் என்றதெல்லாம் மாறி நொறுக்குத் தீவனத்தால் மனிதனின் பருவமாற்றங்களில் பருவக்கோளாறு ஏற்பட்டு பரிதாப மரணத்தைத் தழுவுகிறான். இதனால் இலையும் உதிர்கிறது, பூவும் உதிர்கிறது. பழுத்த மரங்களும் விழுகிறது.

ஒவ்வொரு ஊரின் நடுவிலும் மரங்கள் இருந்தன. மக்கள் அதில் இளைப்பாறவும், படுத்துறங்கவும், அந்த மரங்கள் பயன்பட்டன. ஆனால் இன்று அனைத்து மரங்களும் வெட்டப்பட்டு பேருந்து நிலையம், கோவில் கட்டுகிறேன் என்று பேராபத்தை விலை கொடுத்து வாங்கிவிட்டோம் மரத்தடியில் நாம் அனுபவித்த சுத்தமான காற்று, மர நிழலினால் வடிகட்டிய சூரிய ஒளியை இழந்து இன்று அறைகளில் குளிர்சாதனப் பெட்டியில் நம்மைக் குறுக்கிக் கொண்டதால் வெப்ப நோய்க்குத் தப்பமுடியாமல் தவிக்கிறோம்.

ஊருக்குள் நின்ற மரங்களையெல்லாம் வெட்டி வீடுகள் கட்டிவிட்டோமே! இப்போது எப்படி இருக்கிறோம்? மரங்கள் இல்லாத குடியிருப்பில் வாழும்போது இன்று இந்த வெயிலில் நாம் வீட்டில் இருக்கும்போது பிணங்கள் எரிக்கும் தகனமேடையில் படுத்துக் கிடப்பதுபோல எரிந்துகொண்டு இருக்கிறோமே! இதைவிட வேறென்ன எச்சரிக்கை வேண்டும்.

நெடுஞ்சாலை அமைக்கிறேன் என்று இருக்கிற மரத்தையெல்லாம் வெட்டி விட்டோமே. இப்போது புரிகிறதா? அது நம்மை உயிரோடு எரிக்க வெட்டப்பட்ட மரங்கள் என்பது. வேகமாய் போவதற்கு என்றீர்கள்! பாமரன் எதற்கு வேகமாய் போகணும்? எங்கு போனாலும் பணக்காரன் வேகமாய் போக பாமரன் இளைப்பாறும் மரங்களை ஏன் அழித்து விட்டீர்கள்? அந்தப் பாவத்திற்குதான் சூரியபகவான் சுள்ளெனச் சுட்டு எரிக்கிறான். ஏழைகளை எரித்து பணக்காரர்களுக்கு குளிர்காய உருவானதுதான் அரசா?

நமக்குத் தேவை இந்தியாவின் சாலைகளை இணைப்பதல்ல! இந்திய நதிகளை இணைப்பது. நதிகளை இணைத்தால் நாடு செழிக்கும்? நாடு செழிக்க விவசாயி உழைப்பான். விவசாயம் பிழைக்கும் விவசாயம் செழித்தால் உயிரினங்கள் பெருகி, நோய்கள் விலகும். தொற்று நோய்கள் எட்டியே நிற்கும் முறையான உணவுப் பழக்கமும் அதன் மூலம் நன்னெறியில் சமூகப் பழக்கம் வளரும்.

ஒவ்வொருவரும் ஒரு மரம் வளர்ப்போம். ஊருக்குப் பொதுவான மரங்களையும் வளர்ப்போம். சாலைக்காக வெட்டப்பட்ட மரங்களின் சாபங்களிலிருந்து நம் சாவுகளைத் தள்ளி வைக்க மீண்டும் சோலைகளை அமைப்போம். காடுகள் அழிவதைத் தடுப்போம். மணல் அரிப்புகளையும், அள்ளுதலையும் நிறுத்துவோம். மீண்டும் ஒரு பசுமைப் புரட்சி பூமிக்கு வேண்டும். அது அமையாவிட்டால் இனி பூமியும் தாங்காது. பூமி வெப்பமடைந்து விட்டால் எந்தச் சாமியாலும் நம்மைக் காப்பாற்றவும் முடியாது. மக்கள் விழித்துக் கொண்டு, மண்ணையும், மண் வளத்தையும் காத்து மரத்தை வளர்த்து மகசூல்கள் பெருகவில்லையென்றால் சூரிய பகவானால் நமது சொர்க்க பூமி நரகமாய் மாறி அழியப் போகும் தூரம் வெகுதொலைவில் இல்லை.

“இறைவன் நம்மை
காக்கத் தந்த வரமே
தாவரம் ஆகும்”