ஆயுதம் செய்வோம்…

- வன்முறைகளைத் தவிர்க்க

ஆயுதம் என்று உதடு அசைபோட்டவுடன் நெஞ்சம் அச்சத்தில் அல்லாடுகிறது. ஏனென்றால் ஆயுதம் என்றாலே உலகில் ஏதோ ஆபத்து நடக்கப் போகிறது! என்றாகிறது.

ஏதென்ஸ் நகரத்தை அதிகார வர்க்கம் ஆட்டிப் படைக்கும்போது சாக்ரடீஸ் அறிவாயுதத்தை கையிலெடுங்கள் என்று அறைக் கூவல் விடுத்தார். யூத மக்களின் முரட்டுத்தனத்தை ஒழிக்க அன்பாயுதத்தைக் கையிலெடுக்க இயேசு மொழிந்தார். உலகமே துன்பத்தில் துவளும் போது ஆசையை அழிக்கும் ஆயுதத்தை ஏந்துங்கள் என்று புத்தன் போதித்தான். ஆங்கிலேயர்களை அப்புறப்படுத்த காந்தி எடுத்த ஆயுதம் அஹிம்சை. மனிதன் சாதி மதச் சாக்கடையில் கிடக்கும்போது பெரியார் எடுத்த ஆயுதம் சமத்துவம். ஆரியர்கள் ஆதிக்கம் தெற்குத் திசையைத் தூசிபடியச் செய்யும்போது திராவிட இயக்கம் கிளர்ந்தெழும்பிய போது கையிலெடுத்த ஆயுதம் பேனா. எனவே ஆயுதம் என்றவுடன் அரிவாள், கத்திதான் நினைவுக்கு வந்தால் அறிவு சரியாக வேலை செய்யவில்லை! என்றுதான் பொருள்.

ஆயுதம் என்பது, அது குற்றம் செய்வது அல்ல. அதை யார் எடுக்கிறார்கள்? என்பதுதான் முக்கியம். அரிவாளை எடுத்து வேலியை அமைத்தால் அது வன்முறை அல்ல. அடுத்தவர்களை வெட்டினால் தான் அது வன்முறை. ஆயுதம் தவறல்ல. அதை எடுக்கும் கைகள்தான் புனிதமாக இருக்க வேண்டும்.

இன்று பாருங்கள் எங்கு பார்த்தாலும் ஒரு இருக்கமான சூழல் உருவாகிறது. அதிலும் குறிப்பாக மாணவர்கள் மத்தியில் சாதி, மதம், காதல் என்ற மாயையில் மாணவன் சிக்கி சின்னாபின்னாமாகி வன்முறையை வகுப்பறையாக்கி வைத்துள்ளான். வெட்டுவதும், குத்துவதும், சண்டை போடுவதும், அடித்து நொறுக்குவதும் வீட்டுப்பாடமாக அதாவது வீட்டுக்குப் போகும்போது உள்ள பாடமாக வைத்துள்ளான். பொதுச் சொத்துக்களை நாசமாக்குவதும் போக்குவரத்திற்கு இடையூறு செய்வதும் பொழுதுபோக்காக வைத்துள்ளான். இவர்களை என்ன செய்வது?

பிள்ளைகள் செய்கிற தப்புகளினால் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இன்று பிரிந்தே நிற்கிறார்கள். பிள்ளைகள் சொல்வதை நம்பி ஆசிரியர்களைக் குறை சொல்கிற அவலம் அகிலத்தில் புற்று நோயாகப் புரையோடிப் போய் விட்டது. கையும் களவுமாகப் பிடித்துச் சாட்சிகளோடு பெற்றோர்களிடம் கூறும் போது செய்வதறியாது நிற்கிறார்கள். எப்போதுமே இவனுக்கு இது கிடையாது இப்போதுதான் இவன் இப்படிச் செய்கிறான் என்று அப்போதுதான் அவனைக் குறைசொல்ல ஆரம்பிப்பார்கள். அதற்குள் அவன் அந்தத் தவறுகளுடன் ஐந்தாறு வருடங்களைக் கடந்திருப்பான்.!

பெற்றோர்களே! சற்றுப் பொறுமையாகக் கேளுங்கள். உங்கள் பிள்ளைகள் இன்று போதைப் பொருளில் புதையுண்டு போகிறார்கள். சாதி வெறியில் தானும் எரிந்து உடன் இருப்பவர்களையும் எரித்துக் கொண்டிருக்கிறார்கள். தெரியாதவர்கள் விழிக்கிறார்கள். தெரிந்தவர்கள் தவிக்கிறார்கள். அதனைத் தடுக்க வழி தெரியாது பெற்றோர்கள் கண்ணீரோடும், கவலையோடும் காலம் தள்ளுகிறார்கள்.
ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் ஊருக்கு நாலு காவாலிப் பயல்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தான் சண்டியர்களாகி சமுதாயத்தைச் சாக்காடையாக்குகிறார்கள். இவர்கள் தான் சாதி அடையாளங்களை, உடைகளை, ஊர்த்திருவிழாக்களில் அணிந்து கொண்டு உலவிவருகிறார்கள். நேரம் கிடைக்கும் போது போதை பொருள். அது தேவைப்படும் போது களவு. வாய்ப்புக் கிடைத்தால் பாலியல் பழக்கம். இவர்களோடுதான் உங்கள் குழந்தைகள் இப்போது சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்! இது தெரியுமா உங்களுக்கு?

பெற்றவர்களே! உங்கள் பிள்ளைகளை வளர்க்க நீங்கள் உழைப்பைத் தேடி ஊர் விட்டு ஊர் சென்று விடுகிறீர்கள். ஆனால் அந்தப் பொறுக்கிகள் வேட்டை நாயைப் போல ஊருக்குள்தான் உலவி வருகிறார்கள். அவர்களோடு சேர்ந்தால் நாமும் ஹீரோ என உங்கள் பிள்ளைகள் நினைத்துக் கொண்டு தன்னைத் தானே அழித்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் உண்மையிலே உங்கள் பிள்ளைகளை பாதுகாக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்! என்றால் அந்தப் பதர்களை அப்புறப்படுத்துங்கள். ஊர் இளைஞர்களை உங்கள் கட்டுக்குள் வையுங்கள். ஒரு கட்டுப்பாடு விதியுங்கள். நீங்கள் அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டீர்கள் என்றால் உங்களுக்கும் சமாதி கட்டி விடுவார்கள் உங்கள் சந்ததிகளையும் உயிரோடு சாகடித்து விடுவார்கள்.

நீங்கள் வீட்டில் இருக்கும் போது என்ன பேசுகிறீர்கள்.? நம்ம ஆள் பார்த்து நம்ம கேஸைக் கொடுக்க வேண்டும். அவர் நம்மாளுதான் நமது ஆட்களை நன்றாகக் கவனித்துக் கொள்வார். நம்ம ஆட்கள் கடைக்கு வேலைக்குப் போகும்போது நமக்குக் கொஞ்சம் வசதி செய்துக் கொடுப்பார்கள். அது நம்ம ஆளுங்க ஹோட்டல் அங்குபோய்தான் சாப்பிட வேண்டும். நம்ம ஆளுங்கனா சொல்லு, பொண்ணு பேசுவோம்.! இப்படியேத் தானே வீட்டில் பேசிக்கொண்டு இருக்கிறோம். இதனைக் கேட்டுக் கொண்டே தான் நம் பிள்ளைகள் வளர்கிறார்கள். பிறகு “விதை ஒன்று போட சுரை ஒன்றா முளைக்கும்”.

ஆனால் பேசும்போது என்ன சொல்கிறீர்கள்? நாங்கள் எல்லாம் சாதியே பார்க்க மாட்டோம். அருகில் வாழ்பவர்களோடு அண்ணன் தம்பி போல் பழகுவோம் என்கிறீர்கள். ஆனால் சம்மந்தம் பேசும்போது சொந்த சாதியைத்தானே தேடுகிறீர்கள்! உங்கள் குழந்தைகள் பிறசாதியோடு காதலித்துத் திருமணம் செய்தால் ஒன்று ஒதுக்கி வைக்கிறீர்கள் அல்லது ஆணவக் கொலை செய்கிறீர்கள். இல்லையென்று உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும். உங்கள் எண்ணத்தில் இருப்பதுதான் உங்கள் சந்ததியிடம் வளரும்.

அதிகமாகக் கோவிலுக்கு அழைத்துச் சென்றால் அவனிடத்தில் மதப்பற்றும் மத வெறியும் மனதில் பதியும். அதிகமாக உங்கள் வீட்டிலும் ஊரிலும் உலவினால் சாதி வெறி இரத்தத்தில் ஊறும். பள்ளிக்கு அனுப்புங்கள் அதுவும் பணம் கட்டிப் படிக்கும் பள்ளிக்கு அனுப்பினால் அவனுக்கு ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். எல்லோரும் சமமாக எண்ணப்படுகின்ற பள்ளிக்கு அனுப்புங்கள். அவர்கள் கற்றுக் கொடுப்பதைக் கடைபிடிக்கச் சொல்லுங்கள். நீங்கள் உங்கள் குழந்தையிடம் கண்டுபிடிக்காததை அவர்கள் கண்டுபிடித்துத் திருத்தும்போது குறுக்கே பாய்ந்துக் காப்பாற்றத் துடிக்காதீர்கள். ஆசிரியர்கள் எடுக்கும் முயற்சிக்கு நீங்களும் அருகிலிருந்து ஒத்துழைப்புக் கொடுங்கள். ஊரில் திரியும் காவாலிப்பயல்களிடம் ஒட்ட விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் போதைப் பொருட்கள் உங்கள் புருசனிடம் முதலில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் குழந்தைகளோடு அதிகமாக நேரத்தைச்; செலவிடுங்கள். பணம், பொருளைக் கொடுப்பதை விட உங்கள் பாசத்தைக் கொடுங்கள். அது மட்டுமே உங்கள் குழந்தைகளை பாதுகாக்கும்.

“சாக்கடையில் கிடப்பவனை
உடனே தூக்கிவிடுங்கள்
சாதியில் கிடப்பவனை
சாக்கடையில் அமிழ்த்திவிடுங்கள்”