மூன்றாம் உலகப்போர்…

மனித வாழ்க்கை மகத்தானதாக அமைய வேண்டுமென்றால் உடலும், மனமும் ஒருங்கே சிறப்பாக அமைய வேண்டும் உடலுக்கு இரண்டு கண்கள், இரண்டு கால்கள், இரண்டு கைகள் என்பது போல மனதிற்கு கல்வியும், ஒழுக்கமும், இரண்டும் கலந்தது. இதில் ஒன்று குறைந்தாலும் ஊனமாகிப் போகும். ஆனால் இன்றையக் காலக் கட்டத்தில் கல்வியில் இருந்து ஒழுக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் கழன்று கொண்டிருக்கிறது. பூமி கலவரமாகிக் கொண்டு இருக்கிறது.

மூன்றாவது உலகப்போர் எப்போதோ ஆரம்பமாகிவிட்டது. மூன்று மூன்று குழுவாக முட்டிக் கொண்டிருக்கிறோம். அதில் ஒன்றுதான் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இவர்களுக்கிடையே ஆரம்பித்திருக்கிற இந்த அக்கப்போர் எதிர்காலச் சந்ததிகள் தம் கண் முன்னாலயே நாசமாகப் போவதைப் பெற்றோர்களாலும், ஆசிரியர்களாலும் தடுக்க முடியாமல் தவிப்பது. இப்போது கண்முன் காட்சிகளாகி கண்ணீரோடு தத்தளிக்கிறோம்.

பெற்றோர்கள் செய்கிற தவறு! ஆசைகள் அதிகம், குழந்தைகள் குறைவு உலகம் சொல்வதை வைத்துக் கொண்டு அதில் ஒன்றிரண்டைப் பெற்றுக் கொண்டு உலகிலுள்ள அத்தனை கலைகளிலும் தன் குழந்தைதான் முதல்வனாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவது ஒரு ரகம். தேவையைவிட ஆசையை நிறைவேற்ற ஓடி ஓடி உழைப்பதாக எண்ணிக் கொண்டு தன் குழந்தைகளை கண்டு கொள்ளாத பெற்றோர்கள் ஒரு ரகம். அல்லது தன் குழந்தை கெட்டுப்போவதற்கு அம்மாதான் காரணம் என்று அப்பாவும், அப்பாதான் காரணம் என்று அம்மாவும் ஒருவர் ஒருவரைக் காரணம் காட்டித் தப்பித்துக் கொள்வதும் இதனால் குழந்தைகள் தப்புத் தப்பாய் செய்வதும் இன்று வாடிக்கை ஆகிவிட்டது. இப்போது எல்லோருமே இதனை எப்படித் தடுப்பது என்று வழிதெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறோம்.!

மாணவர்கள் ஆசிரியர்களுக்கு இன்று என்ன பிரச்சனை?. உலகம் ஒரு சவலாய் இருக்கிறது. உலகம் முழுவதுமே அயோக்கியத்தனத்தின் உச்சத்தில் உலவிக் கொண்டிருக்கிறது. நல்லவர்கள் எல்லாம் பதுங்கிக் கொள்கிறார்கள். ஒதுங்கிக் கொள்கிறார்கள், விளங்காதவர் எல்லாம் வீதியில் உலவி வரும்போது அவர்களைப் பார்த்துப் பார்த்து அவர்களைத் தான் ஹீரோவாக எண்ணிக் கொண்டிருக்கும்போது அவர்களாக மாற வாழ ஆசைப்படுகிறார்கள். அதே சூழலை ஆசிரியர்கள் அறுவெறுக்கிறார்கள். அந்தப் பாதையில் தன் மாணவர் விழுந்துவிடக் கூடாதே! என்று தவியாய் தவிக்கிறார்கள். கடுமையை அதிகரிக்கிறார்கள். இதனால் மாணவன் கடுப்பாகிறான். ஆசிரியர்களை எதிர்க்கிறான். எதிரியாகப் பார்க்கிறான். இதனால் தான் முட்டல்கள் மோதல்கள்.

பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உள்ள பிரச்சனைகள்!. பெற்றோர்கள் இந்தப் பாழாப் போன சமுதாயத்தில் பழகிப் போனதால் அதனை அவர்கள் சகித்துக் கொள்கிறார்கள். ஆனால் ஆசிரியர்களுக்கு அதனை சகிக்க முடியாததால் மாணவர்களைக் கண்டிக்கிறார்கள். ஆனால் பெற்றோர்களுக்கு இது பெரிய குற்றமாகத் தெரியவில்லை. இதனால் ஆசிரியர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பதில்லை. பெற்றோர்களின் அலட்சியம் ஆசிரியர்களுக்கு அவர்கள் மீதும் வெறுப்பாக மாறுகிறது.

ஆசிரியர்களுக்கு உரிய சவால்! இன்றளவும் அவர்கள் மதிக்கப்படுவதால் தான். இன்றளவும் பழைய மாணவர்கள் ஆசிரியர்களைக் கையெடுத்துக் கும்பிடுவது தான். மாதாமாதம் கவலையின்றி ஊதியம் வாங்குவதுதான். மாணவர்களோடு இருப்பதனால் அவர்கள் மனம் எப்போதும் இளமையாக இருப்பதுதான். பிறருக்கு வழி காட்டியாக இருப்பதனால் ஓரளவு அறநெறிகளைக் கடைபிடித்து ஒழுகுவதால்தான். சென்ற இடமெல்லாம் ஏதாவது ஒரு மாணவன் வந்து வணங்குவது காலைத் தொட்டுக் கும்பிடுவது. இதனைக் காணுகின்ற சமுதாயம் ஆசிரியர்களின் ஹீரோயிசத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை வில்லனாய் நின்றே முறைத்துப் பார்க்கிறது.

இதனால் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் புழுதியை வாரித்தூற்றுகிறது. ஆசிரியர் மாணவனை அடித்துவிட்டால் அது பிரச்சனை. மாணவர்களை வைத்துப் பிரச்சனை எங்கேயாவது ஒன்றிரண்டு தானே! எத்தனை ஆசிரியர்கள் எத்தனையோ நல்ல நல்ல காரியங்களைச் செய்து கொண்டுதானே இருக்கிறார்கள்! எத்தனைபேர் பாராட்டுகிறார்கள்? ஆசிரியர்களைத் தண்டிக்க, கண்டிக்க ஓடிவருகிற இயக்கங்கள், கட்சிகள், சாதிகள் ஆசிரியர்களைப் பாராட்ட ஏன் வருவதில்லை?. மாணவன் தண்டிக்கப்பட்டான் என மார்தட்டி வருகிற கூட்டம், அந்த மாணவனின் வளர்ச்சிக்கு எதுவும் செய்வதில்லையே. மாணவனுக்கும், ஆசிரியருக்கும், பள்ளிக்கும் பிரச்சனையைப் பெரிதாக்கி அவனைப் பள்ளியிலிருந்து நீங்கும் வரை ஓய மறுக்கிறார்களே!. இப்படி பல மாணவர்களுக்கு அவர்கள் மரணக் குழி வெட்டி விட்டார்கள்.

பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளை இன்னும் நீங்கள் சரியாக உணரவில்லை. சில குழந்தைகள் போதைப் பொருளில் பொழுதைக் கழிக்கிறது. சில குழந்தைகள் பள்ளிக்கே வர மறுக்கிறது!, ஆனால் என் குழந்தை யோக்கியன் என்றுதான் இன்றுவரைச் சொல்லுகிறீர்கள். பிள்ளைகள் இந்தப் பூமியில் நமக்குக் கிடைத்த பெரிய வரங்கள் அதனைச் சாபங்களாக மாற்றிவிடாதீர்கள். உங்கள் குழந்தை உங்கள் மகன்! ஆனால் அவன் ஆசிரியருக்கு மாணவன் நீங்கள் கருவறையில் உடலுக்குள் வைத்து வளர்த்தீர்கள். ஒரு ஆசிரியர் வகுப்பறையில் வைத்து உள்ளத்தில் சுமந்து வளர்க்கிறார்கள். நீங்கள் அவன் தவறு செய்யும் திருத்துகிற உரிமை இருப்பதுபோல அவர்களுக்கும் இருக்கிறது. அதில் மூக்கை நுழைக்காதீர்கள். ஊடகத்திடமோ, ஊர் மக்களிடமோ தெரிவித்து ஆசிரியர்களை அவமானப் படுத்தாதீர்கள்.

பெற்றோர்களே உங்கள் குழந்தையை தன் குழந்தையாக நினைக்கும் ஆசிரியர் உங்களுக்கு யார்? உங்களிடமிருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவனுக்கு நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துத் தரும் ஆசிரியர்களுக்கு நீங்கள் தரும் வெகுமதியென்ன? என்னதான் நீங்கள் ஊட்டி ஊட்டி வளர்த்தாலும் உயர்ந்தபிறகு அவன் ஆசிரியர் காலைத்தானே தொட்டு வணங்குகிறான். அப்படியென்றால் அப்பாக்களைவிட ஆசிரியர்கள் உயர்ந்தவர்களாகத்தானே தெரிகிறார்கள். ஆகவே பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை உயர்த்திட ஆசிரியர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுங்கள். ஊடகங்களே ஆசிரியர்களை உற்சாகப்படுத்தாவிட்டாலும் ஊனப்படுத்தி விடாதீர்கள். சங்கங்களே ஆசிரியர்களுக்குச் சமாதிக் கட்டாதீர்கள். அவர்கள் கைகள் கட்டப்பட்டால் சுடுகாடுகள் தான் உங்களை சுற்றி இருக்கும். எதிர்காலத்தைச் செதுக்கும் நவீன சிற்பிகள் ஆசிரியர்கள் அவர்கள் செதுக்கட்டும் எல்லாம் சிலைகள் ஆகட்டும். வணங்கும் இடத்தில் வைப்போம். ஆசிரியர்களையும் வணங்குவோம்.

“குரு இல்லையென்றால்
பூமி துருப்பிடித்து
தூர்ந்து போகும்.”