அவமானமே! அவதாரமாம்!!

சுற்றுகின்ற பூமி தன் அச்சிலிருந்து விலகி சோர்வாகச் சுற்றுவதுபோல், வீசுகின்ற காற்று விரக்தியாய் வீசுவதுபோல, காலை வரும் கதிரவன் களைத்துப் போனதுபோல், இன்று வேகமாக ஓடிக்கொண்டிருக்கிற மனிதர்களும், விரக்தியில்தான் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

காரணம் புறக்கணிப்பு, அவதூறு, ஓரங்கட்டப்படுதல், ஒதுக்கிவைத்தல், புறந்தள்ளுதல் போன்றவை இன்று பொழுதுபோக்காகவே அமைந்துள்ளது. இன்று பலரது உதடுகளில் பரவி நிற்கின்ற வார்த்தைகள், என்னை யாரும் மதிப்பதில்லை. எனக்குரிய மரியாதை கிடைக்கவில்லை, என்னைக் கேட்டு ஏதும் நடப்பதில்லை. நான் இருப்பதே யாருக்கும் தெரியவில்லை என் குழந்தைகளே என் பேச்சைக் கேட்பதில்லை. என் மனைவியே என்னை மதிப்பதில்லை என்ற வார்த்தைதான் நம் வாழ்க்கையையே மயானமாக்குகிறது.

யார் உங்களை மதிக்க வேண்டும்? எதற்கு உங்களை மதிக்க வேண்டும்? எண்ணிப்பார்த்தீர்களா? யாருமே மதிக்கவில்லை என்றால் உங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா? அப்படியென்றால் இந்தப் பூமியில் பலரைச் சிலரும், சிலரைப் பலரும் எப்போதும் கண்டுகொள்வதில்லையே! அதுவும் இப்போது வேகமாக ஓடிக்கொண்டு இருக்கிற உலகில் யாரும் யாரையும் கண்டு கொள்வதேயில்லையே. அப்படி இருக்கப் பொது இடங்களில், பொதுச் சனங்களில், பொது நிகழ்வுகளில் நம்மை ஏற்றுக் கொள்ளாத போது, அவமானப்படுத்தும் போது மட்டம் தட்டும்போது, மரியாதைக் குறைவாக நடத்தும்போது நாம் ஏன் மடிந்து போகிறோம்? மனம் ஒடிந்து போகிறோம்?

நால்வர் கொடுக்கின்ற மரியாதைதான் நம்மை யார் என்று உலகிற்கு அடையாளம் காட்டுமா? நாம் வாங்கிய பட்டங்களும், பரிசுகளும் தான் நமது வெற்றியின் அடையாளங்களா? பொது இடங்களில் மதிக்கப்படுவதுதான் நமது புகழா? தொலைக்காட்சிகளில் தெரிவதுதான் நமது வளர்ச்சியா? பிரபலமாவதும், பதக்கங்களும் தான் நமது இலக்கா?

அப்படியென்றால் வறியவர்களுக்கு என்ன வரலாறு? எளியவனுக்கு என்ன முகவரி? தோற்றவனுக்கு இல்லையா தொகுப்புரை? வீழ்ந்தவனுக்கு இல்லையா பாராட்டுரை? இருக்கிறதோ! இல்லையோ! இனி நீங்கள் எழுதுங்கள். கடலிலிருந்து தூக்கி எறியப்பட்ட தூசிதான் பலரின் கண்ணில் பட்டு காட்சிப் பொருளாக இருக்கிறது. புறம்தள்ளப் பட்டவர்கள்தான் இன்று வரலாறாக மாறி இருக்கிறார்கள். ஒதுக்கப்பட்டவர்கள் தான் உயர்ந்த இடத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள் மறுதலிக்கப்பட்டவர்கள் தான் மறுமலர்ச்சி செய்திருக்கிறார்கள் பிறகென்ன? வரலாறு பாருங்கள்!

நீர்நிலைகள் அனைத்தும் வழித்தடங்களில் வாழ்வோரின் வாழ்வுரிமைச் சொத்து என்று வாதிட்டதால் சித்தார்த்தன் என்ற மன்னன் நாடுகடத்தப்பட்டான். பின்பு அவனே புத்தனாகி அவனடைந்த புகழுக்கே அளவே இல்லை. அந்தப் போதிமரமே அவனுக்குச் சாட்சி.

அடித்தட்டு மக்களின் உரிமையை மீட்டெடுப்பதற்காகச் சட்டங்களைப் போட்டுச் சாமான்யர்களை அடிமையாக வைத்திருந்த மன்னர்களை மிரட்ட, அடித்தள மக்கள் உரிமை பெற, பெண்ணியம் பேசப்பட, உரிமைக் குரல் கொடுத்த இயேசு பிரான் பிறப்பதற்கு சத்திரத்தில் கூட இடமில்லை என ஒதுக்கப்பட்டவர்.

கீதை தந்த பாதையைக் காட்டியவரும், தீமையைத் தகர்த்து நன்மையைச் செழிக்க வைத்தவரும், அதர்மம் தர்மத்தை அழித்துவிடக் கூடாது என ஆதங்கப்பட்டவரும் சத்தியத்தை நிலைநாட்டியவருமான கண்ணன். பிறக்கும்போதே சிறையில் பிறந்து கம்ச மன்னனின் கரத்திற்குத் தப்பி ஆற்று வழியாக அனுப்பப்பட்டவர் நமது கோகுலக் கிருஷ்ணன்.

கடவுளின் அவதாரமாய் ஆன்மகனின் மேல்வரிச் சட்டமாய் அனைத்து உயிர்களுக்கும் நண்பனாய் அதர்மத்தை அழித்தவராய் ஒருத்திக்கு ஒருவன் என்ற உத்தம புத்திரனாய் வாழ்ந்த இராமச் சக்கரவர்த்தி தன் தம்பி பரதன் அரசாள கூனியின் சதியாலும் கைகேயின் பேராசையாலும் காட்டுக்கு அனுப்பப்பட்டவர்.

பாரிஸில் பட்டம்பெற்று வக்கிலாகிப் புகழ் பெற்று உலகெங்கும் புகழ்தேடி பவனிவந்தவர் மோகன்தாஸ் காந்தி. ஆனால் தென்னாப்பிரிக்கா இரயில் பயணத்தின் போது கருப்பர்களுக்கு இரயில் வண்டியில் இடமில்லை என்று வண்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டவர். இன்று மக்களின் மகாத்மா ஆனார்.

மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன் தனது கட்சியிலிருந்து தனது தலைவர்களால் தூக்கி எறியப்பட்ட பிறகுதான் தனக்கு என்று ஒரு கட்சியை ஆரம்பித்துத் தொண்டர்கள் மனதில் இடம் பிடித்து அவர்களின் இரத்தத்தின் இரத்தமாக இறக்கும் வரை தன்னை யாரும் அசைக்கமுடியாதபடி அரியணையில் அமர்ந்திருந்தார்.

மக்கள் திலகம் மரணித்த போது அவரது இறுதி ஊர்வலத்தில் வண்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டவர்தான் அம்மா ஜெயலலிதா. ஆனால் அங்கிருந்து துடித்தெழுந்து தூரிகைத் தட்டி புறப்பட்டு வந்து இறுதி வரை தன்னை யாரும் நெருங்க முடியாதபடி இரும்பு மனிசியாக நின்று ஆட்சி செய்து நிலைத்தவர் அவர்.

கருப்பு நிறத்தைக் காரணம் காட்டி உடன் நடிக்க மறுத்த நடிகைகளைக் கூட காத்திருக்க வைக்கும் அளவிற்கு திரைத்துறையில் தொடர் வெற்றிகளைக் கொடுத்து அரசியலிலும், கால்பதித்து, மக்கள் மனதிலும் இடம் பிடித்த நடிகர் விஜயகாந்தின் வரலாறும் வீர வரலாறு.

அட்டைப்படத்திற்கெல்லாம் இவன் முகம் எடுபடாது எனத் தட்டிக் கழித்தவர்கள் மத்தியில் இன்று ஒவ்வொரு அட்டைப்படமும் இவன் படத்தையே சட்டையாக அணிந்திருக்கும் அளவிற்கு விஸ்வரூப வெற்றியைப் பெற்றவர் விஜய்.

இப்படி ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னும் ஒரு உதாசீனம் ஒளிந்திருக்கிறது. ஒவ்வொரு அரியணைக்கு அடியிலும் ஒரு அவமானம் படுத்திருக்கிறது. ஒவ்வொரு புரட்சிக்குள்ளும் ஒரு புறக்கணிப்பு ஒட்டியிருக்கிறது. ஆகவே யார் என்ன சொன்னால் என்ன! நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உன் படிக்கட்டுதான் உன்னை விமர்சித்தால் நீ வீட்டுக்குள் முடங்கி விடுவாய் என்ற மூடர்களின் முட்டாள்த்தனத்தை மோதி நொறுக்கிவிட்டு முன்னேறு! உன்னை இல்லாதது பொல்லாதது சொன்னால் நீ இடறிவிழுவாய் என்பதனை ஏறிமிதி. அவமானப்படுத்தினால் அடிபணிவாய் என்பதனை அறுத்தெறி நீ காத்திருக்கும் வரைதான் காற்று புறப்பட்டுவிட்டால் புயல். உன்னை அடக்கவும் முடியாது மடக்கவும் முடியாது முடக்கவும் முடியாது புறப்படு! போராடு! புதிய சமுதாயம் படை! வெற்றி உனது! நாளை நமது!.

“புறக்கணிக்கப்பட்டவர்கள்
எழுதிய புதிய வரலாறுதான்
பூமியில் புரட்சியாகும்”