கை நீட்டாதீர்கள்….

எத்தனையோ மனிதர்கள் நம்மைக் கடந்து விட்டுப் போனாலும் சிலர் மட்டும் நம் மனதிற்குள் மகிழ்ச்சூட்டி அரியணை போட்டு அமர்ந்து கொள்கிறார்கள். அப்படி ஒரு மகான் என் மனதிற்குள் மழையாய் வந்து, குடையாய் நின்று, விதையாய் விழுந்து, மலையாய் எழுந்து என் மானசீகக் குருவாய் மனதிற்குள் நிற்பவர் விவேகானந்தரும் ஒருவர். துறவிக்குத் துறவி தூண் தானே! இருப்பினும் ஏதோ அவர் கைகளை நீட்டாமல் சொன்ன பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பல பாடங்களை அவரது எழுத்துக்களால் பதிவு செய்தவர். அவரது வாழ்க்கை ஒரு பாடம், வார்த்தை ஒரு பாடம், கடிதம் ஒரு பாடம், கருத்துக்கள் ஒரு பாடம், அத்தனையும் தாண்டி அவர் கைகட்டி நிற்கின்ற ஒரு படம் எனக்கு மிகப் பெரிய பாடம். அதனையே இங்கு பதிவு செய்கிறேன்.

பொதுவாகப் பிறர் முன் கைகட்டி நிற்பது ஏனோ அடிமைத்தனத்தின் அடையாளம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் விவேகானந்தரைப் பார்த்த பிறகுதான் எனக்குப் புரிந்தது மனத்தை அடக்குகின்ற மகத்தான சக்தி என் மனதை என் பிடிக்குள் வைத்திருக்கிறேன் என்பதின் வெளி அடையாளமே இப்படிக் கைகட்டி நிற்பது எனப் புரிந்து கொண்டேன். கோபமோ, காமமோ, தலைக்கனமோ, தான்தோன்றித்தனமோ அடக்குமுறையோ, அத்துமீறல்களோ, அனைத்தையும் காட்டுமிராண்டித்தனமாக நம் உடல் வெளிப்படுத்துவது கையும் காலும் தானே! அதனைக் கட்டுக்குள் வைத்துவிட்டால் அது கடவுளின் உருவம் தானே! கைகளை நீட்டுவதை குறைத்துக் கொள்ளுங்கள். ஏன் விட்டு விடுங்களேன் நீங்கள் கடவுளாகத் தெரியலாம்.

நாம் எங்கெங்கு கைநீட்டுகிறோம் என்று உங்களுக்கு தெரியும் அதில் ஒரு சிலவற்றை உங்கள் கவனத்திற்குப் பதிவு செய்கிறன். முதலில் அடிக்கக் கை நீட்டுவது! குழந்தைகளை, குடும்ப உறுப்பினர்களை மாணவ, மாணவிகளை குற்றவாளிகளை உரிமை இருக்கிறது என்று உடனே கைநீட்டி விடாதீர்கள். நீங்கள் அடித்துதான் அவர்களை திருத்த வேண்டும் என்று நினைக்கின்ற அகங்கார மனநிலையை அப்புறப்படுத்துங்கள். காட்டு விலங்கிடம் கூட காட்டும் அன்பினை காட்டி பயங்கர விலங்குகளைக் கூட பாசத்தால் கட்டிப்போட்டிருக்கும் பயிற்சியைப் பழகிப் பாருங்களேன்.

தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பிறரையும் தவறாக வழிகாட்டி நாகரிகமாகப் பிச்சை எடுத்து அடுத்தவர்கள் உழைப்பையும் உரிமையையும் சுரண்டுகின்ற ஒட்டுண்ணிகளே நீங்கள் கை நீட்டாதீர்கள். பச்சோந்திகளே பழகி விட்டோம் நிறுத்த முடியவில்லை என்றால் கைகளைப் பறித்து விடுங்களேன்.

அடுத்தவர்கள் மீதுள்ள குறைகளைச் சுட்டிக்காட்ட உரத்த குரலும், ஓங்கிய கரங்களும், வெளிறிய முகமும் வேங்கையைப் போல சீறலும் இருக்கும். அதற்கு முன் உங்கள் பாதையை உற்றுப்பாருங்கள். எந்த இடத்திலும் குறைகளோ, கரைகளோ, தெரியவில்லை என்றால் பிறருக்கு புத்திமதி சொல்லுங்கள்; நிச்சயம் வாய்ப்பில்லை! பிறகு ஏன் நீங்கள் கை நீட்டுகிறீர்கள்? குற்றம் சுமத்துகிறீர்கள்.

நெருங்கிய நண்பர் என்று சிலரை நெஞ்சில் சுமப்போம். பதவியில் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் பக்க பலமாய் இருப்போம் என்பதனை பகர, பறைசாற்ற கைகுலுக்குவோம். அதை விட்டுவிட்டு வாய்ப்புக் கிடைக்கிறது என நினைத்து வக்கிரப் புத்தியை மனதில் வைத்து பிறர் உடலைத் தொட்டு உற்சாகமடையும் சதை தேடும் பிணம் திண்ணிக் கழுகளிடம் மறந்தும் கை நீட்டாதீர்கள்.

இருமனம் இணைகின்ற திருமணம் இல்லற வாழ்வில் எல்லோர் முன்னிலையிலும் இணைந்து பயணத்தைத் தொடர்கிறோம் என்பதன் அடையாளமாய் பெரியோர்கள் கரம் பிடித்துக் கொடுப்பார்கள். இத்தகைய கரங்கள் பிரிந்து, விவாகரத்தால் விலகி, கள்ளக்காதலில் காணாமல் போய், தவறான தொடர்பால் தவறான கொலையில் தாறுமாறாய் நிற்கின்ற உலகில் உள்ளத்து அன்போடும், ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கின்ற அசைக்க முடியாத நம்பிக்கையோடு ஒருவரோடு ஒருவர் இருக்கும்போது பாதுகாப்பாகவும் பயமில்லாமலும் பயணத்தை தொடர வேண்டுமே தவிர எச்சூழலிலும் இதயக் கலப்பில்லாமல் கண்மூடித்தனமான காதலுக்குக்கூட கை நீட்டி விடாதீர்கள்.

தோழனோடு பயணிக்க, தோழியோடு கதைபேச தோள்களில் கை வைத்து துணையாக நடைபோடுவோம். ஆனால் இன்று தோள்களில் கைவைத்து துணையாக நடைபோடுவோம் ஆனால் இன்று துரோகங்கள் அதிகமாகி உறவுகள் தூரமாகி, சந்தேகங்கள் வாழ்க்கையாகி தேகங்களைச் சீர்குலைக்கின்ற பகல்வேசப் பச்சோந்திகளிடம் உண்மை நட்பைத்தேடி ஒருபோதும் கைநீட்டி விடாதீர்கள்.

அன்பின் ஆழம் ஒருவரையொருவர் அணைத்துக் கொள்வது தாயோடு, தந்தையோடு, தாயையும், தந்தையையும் கண்முன் நிறுத்துபவர்களோடு, கணவனோடு, காதலனோடு, உடலைப் பொருட்டாக மதிக்காது உள்ளத்தில் ஊடுருவி நிற்கும் உன்னத உறவோடு கட்டி அணைப்பார்கள். அதிகாரத்தோடு, பணத்தோடு ஆட்டிப் படைக்கும் குணத்தோடு நாகரீகம் போல் நவீன ஊடகத்தைச் சாக்காக வைத்துச் சரீரத்தை கட்டியணைக்க வரும் இச்சை தீர்க்க துடிக்கும் கரங்களுக்கு கை நீட்டிவிடாதீர்கள்.

இயலாமையால் இருப்பதைக் கொடுங்கள் எனக் கேட்கும் யாசகர்களுக்குக் கொஞ்சம் கைகளை நீட்டுங்கள்.

கல்விக்காகவும், கருத்துக்காகவும், எழுத்துக்களைப் பதிவு செய்யத் துணியும் உங்கள் கரங்கள் சுயநலத்தில் சுருங்கி விடாமல் பிறர் நலம் தேடி பதிவு செய்ய உங்கள் கைகளை நீட்டுங்கள்.

விவசாயிகளே! மழை வெயில் தட்ப வெட்பம், காலச்சூழல் உங்களுக்குச் சாதகமாக இருக்கிறதோ இல்லையோ! எப்போதும் விதைகளோடும் விளைச்சலைப் பெருக்க விவசாயம் காக்க நீங்கள் கரங்களை நீட்டுங்கள். நீங்கள் கைகளைச் சுருக்கிவிட்டால் எங்கள் வாழ்க்கை சுருங்கிப் போகும். எனவே நீங்கள் கைகளை மட்டுமல்ல விரல்களையும் விசாலமாக நீட்டுங்கள். விவசாயம் பெருகும் எங்கள் வீதிகளும் மாறும். நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்..

“கடவுளின் கரங்களைத்
தொழுவதை விட
விவசாயின் கரங்களை
முத்தமிடுவது வேண்டிய
வழிபாடாகும்”