நல்லா இரு….

- வாழ்த்துக்கள்

நல்லா இரு என்பது பெரியோர்களின் எண்ணமும் விருப்பமும். அது வாய் வழியாக வழிமொழிவது ஆசீர்வாதம். இங்கு வாழ்ந்து கொண்டிருப்பவர்களிடம் கேட்டுப்பாருங்கள். எப்படி இருக்கிறீர்கள்? என்றால் பலர் ஏதோ இருக்கிறோம்! என்பார்கள். சிலர் பரவாயில்லை என்பார்கள் சிலர் நல்லா இருக்கிறோம் என்பார்கள். அந்த நல்லா இருக்கிறோம் என்பது கூட அர்த்தம் தெரியாமல் அறியாமையில் சொல்வதாக இருக்கும்.

சிலர் நல்லா இருக்கிறேன். ஏனென்றால் பணம், செல்வாக்கோடு இருக்கிறேன் என்பார்கள். அதன் பெயர் நான் வசதியாக இருக்கிறேன் என்பதுதான். நல்லாயிருக்கிறேன் என்பதல்ல. சிலர் நான் பெரிய பதவியில் இருக்கிறேன் என்பார்கள். அது பதவியில் இருக்கிறீர்கள் ஆனால் நல்லா இருக்கிறீர்களா? நல்லா இருக்கிறேன் என்பது பதவியில் இருப்பதல்ல, பணத்தில் திளைப்பதல்ல, அதிகாரத்தில் குதிப்பதல்ல, ஆளுமையை வளர்ப்பதல்ல. உங்கள் எண்ணம் போல் உங்களால் வாழ முடிகிறதா? மற்ற மனிதர்களுக்காக மாறுவேடம் போடாமல் வாழ முடியகிறதா? இல்லையே. பிறகு எப்படி நான் நல்லாயிருக்கிறேன் என்று நா கூசாமல் எப்படிச் சொல்லமுடியும்?

அவர்கள் என்ன நினைப்பார்களோ! இவர்கள் என்ன நினைப்பார்களோ! அவர்கள் என்ன சொல்வார்களோ! இவர்கள் என்ன சொல்வார்களோ! என்று மற்றவர் விருப்பப்படியே நாம் வாழ்ந்து, வாழ்ந்து நம் மனதிற்குப் பிடிக்கும் படி ஒருநாள் கூட வாழாமல் இந்த மண்ணில் இருந்து மறைகிறோம். பெண்ணாய் பிறந்தால் இப்படித்தான் இருக்கவேண்டும். கீழ்சாதி என்றால் அப்படித்தான் இருக்க வேண்டும் வேலைக்காரன்தானே அதற்கு தகுந்தாற்படி பேச்சு, படிப்பு சுத்தமாயில்லையே. பிறகு என்ன பேச வேண்டிக் கிடக்கோ, எனக்குத் தெரிய டவுசர் போட்டுக்கிட்டு அலைஞ்ச சின்னப்பய என மட்டம் தட்டிப் பேசும் மடையர்களுக்குப் பயந்தா நாம் நமது விருப்பப்படி வாழப்பயந்தோம்?

ஒரு நாள் துறவற உடையுடன் தேவாலயத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும்போது அந்தத் தேவாலயத்திலிருந்து சிரித்த முகத்தோடு ஒரு குழந்தை என்னை நோக்கி ஓடி வந்தது. ஒரு நிமிடத்தில் அந்தக் குழந்தையைத் தூக்கி முத்தமிட நினைத்தேன். அதற்குள் என் மனம் என்னைக் குட்டியது. யாராவது இதை தப்பாக எடுத்துக்கொண்டால் இவ்வளவு குழந்தை ஆசையை வைத்துக் கொண்டு எதற்குத் துறவியாய் போனாய்? எனச் சொல்வார்களோ அல்லது இந்தக் குழந்தைக்கும் இவருக்கும் என்ன தொடர்பு எனச் சொல்வார்களோ? அல்லது குழந்தையை வைத்தே அவனது அம்மாவை வளைக்க நினைக்கிறாறோ என நினைவுக்குள் தேள் கொட்ட குழந்தையைபப் பார்த்தும் பாராதுபோல் கோயிலுக்குள் செல்கிறேன். குழந்தை என்னைப் பார்த்து வருத்தத்துடன் வாடி நிற்கிறது. உள்மனம் மட்டும் ஓங்கிக் கத்துகிறது. குழந்தையும் தெய்வமும் ஒன்று. இங்கு தெய்வத்தை வரண்டாவில் விட்டுவிட்டு தேவாலயத்திற்குள் என்ன புடுங்கப் போகிறாய்? என்ற கேள்வி சரிதானே!.

ஆணாய் பிறந்ததால் பெண்களோடு பேசுவதற்கு எவ்வளவு அச்சப்பட வேண்டியிருக்கிறது. பெண்ணாய் பிறந்தாலே பேசுவதற்குக் கூட பயமாய் இருக்கிறது. விரும்பியவர்களுடன் பேச முடியவில்லை. விரும்பியதையும் பேச முடியவில்லை. ஆயினும் இந்த வெட்கங்கெட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அன்பைப் புதைத்து நட்பைச் சிதைத்து, உதவி செய்ய மறுத்து, உடனிருப்பவர் கழுத்தை அறுத்து, சட்டத்தையும், சம்பிரதாயத்தையும் தூக்கி நிறுத்த துணைபோகும் தொடை நடுங்கிகளா நாம்? சே கண்ணாடி முன்னால் நின்று பாருங்கள் உங்களையே நீங்கள் காரித்துப்ப வேண்டும் போல் தோன்றும்!

இந்தப் பூமியில் ஒரு பெண்ணாய் பிறந்து பாருங்கள் உடையில் கட்டுப்பாடு, நடையில் கட்;டுப்பாடு, உணர்வில் கட்டுப்பாடு, உணவில் கட்டுப்பாடு ஆக சுதந்திரத் தட்டுப்பாடு, சுதந்திரமாக வெளியே வர நினைத்தால் காதல் மாயைக்குள் வழுக்கி விழுவது. ஒருவனைக் காதலித்துப்பார் உயிரைக் கொடுப்பேன் மயிரைக் கொடுப்பேன் என்பான். ஆனால் அடுத்தவனோடு பேச நினைத்தால் ஆசிட் ஊத்திடுவேன் என்பான்.

தன் வாழ்க்கைக்கு வழித்துணையே தனக்கு வந்த மனைவி என்பான். ஆனால் அடுத்தவர்களைத் தொடக்கூடாது அதிகமாய் பேசக் கூடாது, எதிர்த்துப் பேசக் கூடாது. எதிர்வீட்டைப் பார்க்கக் கூடாது. ஒரு ஆயுள் கைதியை தன் வீட்டுக்குள் வைத்துப் பூட்ட கல்யாணம் கோலம் காண்கிறான். எல்லாவற்றையும் உதறிவிட்டு எழுந்து நடக்காத முடியாதபடி சமயங்களும், சமுதாயங்களும் ஏகப்பட்ட விலங்குகளைப் பூட்டி வைத்திருக்கிறது. கொஞ்சம் மீற நினைத்தால் விமர்சனம் என்ற பெயரில் அவர்கள் உன்னை வஞ்சம் தீர்த்துக் கொள்வார்கள். இப்படித்தான் கழுகு உயரப் பறக்கும்போது காக்கை அதைச்சீண்டும் ஆனால் அதனைக் கண்டு கொள்ளாத கழுகு உயரப் பறக்க பறக்க காக்கை முடியாமல் இறக்கையைச் சுருட்டிக்கிட்டு இருந்த இடம் தெரியாமல் போய்விடும். அதே இடத்தில் நின்றாலோ பின்வாங்கினாலோ, காக்கை கழுகை அசிங்கப்படுத்திவிடும். நீ கழுகாய் சுதந்திரமாகப் பறந்து கொண்டே இரு பல காக்கைகள் காணாமல் போய்விடும்.

எதற்காக இந்த வாழ்க்கை? இஷ்டப்பட்டா இதனைச் செய்கிறாய்? மானத்தைக் காப்பாற்றிவிட்டாய்! மரியதையைக் காப்பாற்றிவிட்;டாய்! குலப்பெருமையைக் காப்பாற்றிவிட்டாய்! சாதியை காப்பாற்றிவிட்டாய்! சம்பிரதாயத்தை காப்பாற்றிவிட்டாய்! சபாஷ்! ஆனால் உன்னைக் கொன்று விட்டாயே! உன் உணர்ச்சியைக் கொன்று விட்டாயே? கற்புக்கரசி கண்ணகி ஆனால் அவள் வாழ்ந்த வாழ்க்கை? கற்பைக் காப்பாற்றினாள் ஆனால் கடைசிவரை அவளைக் காப்பாற்றவே இல்லை பரிதாபமாக வாழ்ந்து செத்தாள்!

ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். ஊதியம் வாங்கினீர்கள் என்றால் அது ஒரு மாதம் நம்பிக்கையை தரும் ஒரு வீடு ஒரு தலைமுறைக்கு நம்பிக்கையைத் தரும் சொத்து சுகங்கள் எதிர்கால நம்பிக்கையைத் தரும். ஆனால் நல்லவன் வேஷம் நாளைக்கே கலைந்துவிடுமே. இதனைக் காப்பாற்றவா இப்படி நாயாய் அலைகிறோம்? பிறருக்காக நல்லவனாக வாழ்ந்து, வாழ்ந்து நமக்குக் கெட்டவனாய் மாறிவிட்டோம். பிறர் பேச்சுக்குப் பயந்து, பயந்து நமது ஆசைகளை, அன்பை புதைத்துவிட்டோம். எண்ணம் இருந்தும் பேசாததால் எத்தனையோ நல்ல உள்ளங்களை இழந்துவிட்டோம். அந்தந்த வயதில் அந்தந்த வாழ்க்கை வாழமுடியாமல் போனதால் வாழ்க்கையில் வெற்றுப் பக்கத்திற்கு வெள்ளையடித்து கல்லறைகளாய் காட்சிக்கு வைத்திருக்கிறோம். நல்லா வாழாத வாழ்க்கை எல்லாமே நாம் நரகத்தில் இருப்பதற்குச் சமம் தான். சொந்த காலில் நிற்க வேண்டும் என்றார்கள். சொந்த மனம் படி வாழச் சொல்லிக் கொடுக்கவில்லை. இனிமேலாவது கொஞ்சம் முயற்சி பண்ணுவோம். கோபம் என்றால் கொந்தளிப்போம். பாசம் என்றால் கட்டி அணைப்போம். வீழ்ச்சி என்றால் சத்தமிடுவோம். மகிழ்ச்சி என்றால் முத்தமிடுவோம். நடப்பது நடக்கட்டும் நாம் நாமாக இருப்போம்.

“துணியாத வரை
வாழ்க்கை பயங்காட்டும்
துணிந்து பார் வாழ்க்கை
வழி காட்டும்”