கடவுளைத் தேடாதே….

நோயும் இயற்கை அழிவும் மனிதனை நொறுக்கிக் கொண்டிருப்பதால் மனிதன் தன் ஆயுளை இழந்துவிடுவோமோ என ஆண்டவனைத் தேடி ஓட ஆரம்பித்து விட்டான். அனுபவிக்கத் துடிக்கின்ற மனிதன் தன் ஆயுளைக் கூட்டிக் கொள்ள நினைப்பான் எப்படியாவது இறைவனிடம் வரம் வேண்டி இன்னும் பல ஆண்டுகள் இப்பூமியில் வாழத் துடிப்பான். ஆனால் சாதாரண மனிதன் வாழும் வாழ்க்கையை இரசிப்பான், அனுபவிப்பான். “வெந்ததைத் தின்போம் விதி வந்தால் சாவோம்” என்பதனைக் கொள்கையாக வைத்து வாழ்ந்து கொண்டிருப்பான்.

நிகழ்காலத்தில் நிறைவாய் வாழத் தெரியாமல் எதிர்காலத்தில் ஏதோ இருப்பதாக எண்ணிக் கொண்டு இருப்பவன் தான் சுயநலவாதியாக இருப்பான். இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று ஓடி ஓடி பொருள் தேடுவான் யாருக்கும் உதவவும் மாட்டான் தேவை அதிகமாகும் போது திருடுவான், சுரண்டுவான், ஒதுக்குவான், பதுக்குவான் அவன் மனச்சாட்சி அவனைக் குத்திக் கிழிக்க அவன் மாற்று வழியைத் தேடுவான். இறைவனிடம் சரணடைவான். காது குத்துவான், முடியை எடுப்பான், காணிக்கையைப் போடுவான், பலி கொடுப்பான். கும்பாபிசேகம் நடத்துவான், கோயிலை புதுப்பிப்பான் இதெல்லாம் யோசித்துப் பாருங்கள் இது இறைவனுக்குப் பயந்து அல்ல மரணத்திற்குப் பயந்து மாற்றுவழி தேடுவான்.

அனுபவிக்கத் துடிக்கிறவன் மரணத்திற்குப் பயப்படுவான் அதனால் தான் ஒவ்வொரு மனிதனும் தவம் இருந்து ஒறுத்தல் இருந்து ஒழுங்குகளைக் கடைபிடித்து இறைவனுக்குப் பிடித்தமாக வாழ நினைப்பார்கள். மாலை போடுவார்கள், பாதயாத்திரை செல்வார்கள், நோன்பு இருப்பார்கள், தபசு செய்வார்கள். இதுவெல்லாம் செய்தால் இறைவனுக்குப் பிடிக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டோமே! இதுதான் இறைவனுக்குப் பிடிக்குமா? இதனை யாராவது நினைத்துப் பார்த்ததுண்டா? ஏதோ ஒரு விபத்தில் உன் உயிரைக் காத்த கடவுளுக்கு உன் தலையிலுள்ள…. கொடுத்தால் போதுமா? இது ஏற்புடையதா? இல்லை ஏமாற்று வேலையா?

வாழ ஆசைப்படுகிற அத்தனை பேரையும் ஒன்று கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் வாழ வேண்டுமா? பிறரை வாழ வையுங்கள் தர்மம் தலை காக்கும். இந்த வரலாறு நமக்குத் தெரியும் கொடுத்ததால் கர்ணன். இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறான். தர்மம் செய்கிறவர்களின் கரங்களின் வழியே கர்ணன் இன்னும் சிரிக்கிறான். அதனால் தான் கடவுளே அவனிடம் கையேந்தி நிற்கிறான். கொடை செய்கிறவன் மனிதன். கொடையினால் அவன் தெய்வமாகிறான். கொடை கொடுக்கும்போது கடவுளே அவனிடம் கையேந்துகிறான். கடவுளிடம் பிச்சை கேட்கும் கலியுகப் பணக்காரர்களுக்கு மத்தியில் கடவுளே கையேந்தி நிற்பது கொடுக்கும் குணம் உள்ள நல்லவர்களிடம் மட்டுமே.!

கடவுளைக் காண வேண்டுமா? தேடிப்போய் தர்மம் பண்ணுங்கள் கொடுப்பது எதுவாக இருந்தாலும் பெறுபவர்களுக்கு அது பயனுள்ளதாக இருக்க வேண்டும். உணவைக் கொடுங்கள், உடையைக் கொடுங்கள், நீரைக் கொடுங்கள், மோரைக் கொடுங்கள் என எது உங்களால் கொடுக்க முடியுமோ? அதனைக் கொடுங்கள். தனக்குத் தனக்கு என்று சேகரித்து வைத்து எவனும் சுகமாய் வாழ்ந்ததாய் சரித்திரம் கிடையாது இருப்பதைக் கொடுப்பவன் எப்போதும் இறப்பதும் கிடையாது கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் இறந்து எத்தனை ஆண்டுகள் கடந்து விட்டது. இன்னும் எத்தனையோ பேருக்கு அவர் கடவுளாக வாழ்கிறார். சமீபத்தில் இறந்த நடிகர் மயில்சாமியைப் பற்றி விவேக்கைப் பற்றி அவர்கள் கொடையைப் பற்றி என்னவெல்லாம் பேசுகிறார்கள். அவர்களைப் போல உங்கள் பெயரும் பிற உதடுகளால் உச்சரிக்கப்பட வேண்டுமென்றால் தர்மம் பண்ணுங்கள்.

கிறிஸ்தவர்கள் தவக்காலத்தில் ஒறுத்தல் உபவாசம் என இருப்பார்கள் அதனால் என்ன பயன்? நீங்கள் ஒறுத்தல் செய்தது இன்னொருவருக்குக் கிடைக்க வேண்டும். நீங்கள் ஒதுக்குவது இன்னொருத்தருக்கு உதவுவதற்காக! இல்லையென்றால் அது ஒதுக்குவது அல்ல உங்களுக்காகப் பதுக்குவது. கொடுக்கும்போது யாருக்கும் காசு கொடுக்காதீர்கள். சிலர் சிலரை வைத்து பிச்சையெடுத்து பிழைப்பதாக ஒரு செய்தி உள்ளது. ஆகவே யாருக்கும் உணவும் உடையும் கொடுங்கள் எங்கேயோ இருந்து ஏவி விட்டு எவனோ ஒருவன் கொழுத்துத் திரிவதற்கு நீங்கள் கொடுக்காதீர்கள். நீங்கள் கொடுப்பதைப் பிறருக்குத் தெரியும் படியாகவே கொடுங்கள் அதனைப் பார்த்து பிறரும் கொடுக்கட்டும் கொடுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும் என்ற கொள்கை நிலைக்கட்டும்.

எதை நாம் கொண்டு வந்தோம்? எதைக் கொண்டு போகப் போகிறோம்? எல்லாம் யாராலோ நமக்கு இங்கே கொடுக்கப்பட்டது தானே! நாமும் நம்மால் முடிந்தவரை இங்கேயே கொடுத்துவிட்டுப் போவோமே! அப்படிக் கொடுத்தால் நாம் விட்டுவிட்டுப் போவது நமது பொருளை மட்டும் அல்ல நமது பெயரையும் தான். பொருளைப் பதுக்கியவன் பெயரைப் பழித்துவிடுவான். ஆகவே பொருளைக் கொடுப்போம் பெயரை எடுப்போம்.

காக்கையைப் பாருங்கள் கூடி உணவருந்தும் சிங்கம் வேட்டைக்குப் போனால் காடே செழிப்பாகும். நாம் மட்டும் ஏன் நமக்கு என்று வைத்துக் கொள்கிறோம்? பூமியில் நமக்குக் கொடுத்ததெல்லாம் பிறரோடு பகிர்வதற்காக…. ஆகவே இனியும் கடவுளைத் தேடாதீர்கள். கடவுள் நம்மைத் தேடிக் கொண்டிருக்கிறார். எல்லோரும் கோயிலுக்குப் போகிறீர்களே அவர் எப்போதோ கோயிலை விட்டு வெளியேறிவிட்டார். இனியும் கடவுளுக்கு வாயில் உதிர்க்கும் மந்திரம் தேவையில்லை. பிறர் வாழ்க்கைக்கு உதவும் வழிதான் வேண்டும் இனியும் கோயில்களைக் கட்டாதீர்கள். இடிந்து விழும் குடிசையில் இறைவன் குடியிருக்கிறான் அவனைக் கட்டி எழுப்புங்கள்.

பாதயாத்திரை வேண்டாம் பாதையில் கிடக்கும் அனாதைகளுக்கு உதவுங்கள் கல்லிலும் சிலையிலும் கடவுளைத் தேடாதீர்கள். சல்லுடைப்பதிலும் மண் அள்ளுவதும் காயப்பட்டுப்போன கரங்களோடு கடவுள் திரிகிறார்கள், கொட்டு மேளங்கள் அதற்கு தட்டு ஏந்தி சாப்பாட்டிற்கு வழியில்லாமல் சந்தியில் இறைவன் நிற்கிறான். கேட்காத கடவுளுக்கு படைப்பதைவிட கையேந்திக் கேட்கிற கடவுளுக்கு கொடுத்து உதவுவோம். உங்கள் தவமே பிறருக்கு உதவி செய்வதாக அமையட்டும் உங்களது அர்ச்சனை பிறருக்கு ஆறுதல் கூறும் வார்த்தையாக இருக்கட்டும். உங்கள் மந்திரம் பிறருக்கு துன்பம் துடைப்பதாக அமையட்டும். கல்லுக்கும் மண்ணுக்கும் சேலை கட்டுவதைவிட நிர்வாணமாய் நிற்கிற குழந்தைகளுக்கு கட்டுங்கள். ஏனென்றால் குழந்தையும் தெய்வமும் ஒன்று. வாருங்கள் கடவுளுக்கே வரம் கொடுப்போம் மற்றவர்கள் வாழ வழிகொடுப்போம். சாமியே….. சாமி நீயே…..

“சாமியை நீ வணங்குவதைவிட
சுhமியாய் உன்னை பிறர்
வணங்க வேண்டும்”