கணித மேதை…

கடவுளைத் தொழ மறுக்கும் கரங்கள் கூட இணைந்து எழும், உனைத்தொழும்! காரணம் கற்றுத்தந்தவனும் ஒருவகையில் கடவுள்தான் என்ற நோக்கோடு. கணக்கு எனக்கும் பிணக்கு என்று பலகாலம் பாடித்திரிந்தேன் பாரதி போல உனைப்பார்க்கும் வரையில்! பார்த்த பிறகு கணக்கு எனக்கு மணக்கு என மாற்றிக்கொண்டேன். தாய்ப்பறவை தன் குஞ்சுக்களுக்கு கடினமானதையும் மென்மையாக்கி நளினமாய் குஞ்சுகளின் நாவில் தடவுவது போல் அல்ஜிப்ராவைக்கூட அசால்டாக உள்ளத்தில் விதைத்தவன். விதையாய் நெஞ்சுக்குள் புதைத்தவன் உனையென்றி வேறு யார் இருக்க முடியும்!

மரியன்னை நிறுவனத்தின் மகனே! எமக்கு மதிவாழ்வு கொடுக்க வந்த சுதனே! இந்நிறுவனத்திற்கு வந்து போனவர் பலர், வாழ்ந்து சென்றவர்; சிலர். ஆனால் உனது பெயர் மட்டுமே மரியன்னை என்றும் மனதிற்குள் பச்சைகுத்திக் கொண்டாள், மரியன்னை பள்ளியையும் இராஜன் ஆசிரியரையும் ஒன்றுக்கு ஓன்று பிரிக்க முடியாதபடி தொப்புள் கொடி உறவில் எந்நாளும் கட்டிப்போட்டிருக்கும் எமக்குத் தெரிந்த வரையில் இந்நிறுவனத்திற்காகத் தன்னைக் கரைத்துக் கொண்ட அட்சயப் பாத்திரம் நீ. தன்னை உடைத்துப் பள்ளியைச் செதுக்கிய நவீனச் சிற்பி நீ. பள்ளியை மறந்தவன் கூட இன்றும் நீ கணக்கில் வைத்த புள்ளியை மறக்காததால் பலர் இன்று பாரதத்தில் பெரும் புள்ளியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். உனக்கு ஒன்று தெரியுமா? உன்னை வணங்கினால் மட்டுமல்ல நீ நின்ற திசையை வணங்கியவர்கள் கூட நீடிய புகழ் பெற்றவர்கள் வரிசையில் நிற்கிறார்கள் சொந்த ஊருக்குச் சூத்திரமாய் நின்றவன் பந்த பாசங்களையெல்லாம் இந்தப்பள்ளியிலே தேனி மகரந்தம் சேர்த்து போல மனிதற்குள் சேமித்தவன்.

உன்னைத் தொழுதவர்கள் வாழ்நாளில் அழுதது கிடையாது. உயர்ந்த இடத்தில் உட்காரவைத்துப் பார்த்தது, உன் உடனிருப்பும் உதவிக்கரமும். பறவைக்குப் பறக்க வலிக்குமா? மீனுக்கு நீந்துவது நிற்;குமா? காற்றுக்கு வீசுவது கடினமா? பூவுக்கு மலர்வது மறக்குமா? உனக்குக் கற்பிப்பது கடினமா? உன்னிடம் பயின்றவர்கள் அனைவரும் உன் கணிதத்தைக் கற்றவர்களைவிட உன்னைக் கற்றவர்கள் தான் அதிகம். உனக்குத் தலைமைத்துவத்தில் இருந்தவர்கள் எல்லாம் தனக்கு ஒன்று என்று தவித்தால் திரும்பிய திசையெல்லாம் உன்முகம் தானே தெரிந்து இருக்கும்.

பார்த்தீபன் அன்னைத்தெரசாளுக்குச் சொன்னது போல நீ கருவுற்றால் கூட ஒன்று இரண்டு பெண் குழந்தைகளுக்குத்தான் தகப்பனாய் இருக்கலாம் நீ கருணையுற்றதால் எத்தனையோ பெண் குழந்தைகளுக்கு அப்பனாய் நீன்று அறிவுரைகள் கூறி இன்று வரை பெண்கள் உயர்ந்த இடத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள் என்றால் அது உன்னுடைய பாசறையில் பயின்றதால் தானே! குhரணம் நீ கருவுறாத கருணைத்தாய் தன் திருமண பந்தத்தைக்கூட துறவியாய் வாழ வைத்துவிட்டு துறவிகள் குடும்பத்திற்கு தோழனாய் நிற்கிறவன் நீ. காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு என்பார்கள் ஆனால் அந்தக் காக்கையும் குயிலின் குஞ்சினை வளர்ப்பதற்காக தன் குஞ்சினைத் தாரை வார்த்துவிடும் அது போல தவம் இருந்து பெற்ற ஓரே மகனுக்குக் கூட தந்தை என்று இல்லாமல் ஊரார் குழந்தையை ஊட்டி வளர்த்த உத்தம புத்திரன் நீ.

தன் பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும் என்று எண்ணாமல் தன் பிள்ளையைக் கூட இராஜன் சார் என்ன சொல்கிறாரோ அதன் படி நடக்க வேண்டும் என எழுதப்படாத இன்னொரு வேதமாக எம் நிறுவனத்தை சுற்றியுள்ள பத்துப்பட்டிக் கிராமத்து மக்களும் கடைப்பிடித்து வருகிறார்கள். எவன் பெற்ற பிள்ளையோ எப்படி இருந்தால் எனக்கென்ன? என்று கனவிலும் எண்ணாது கண்ணின் மணி போல குழந்தைகளைச் செல்வமாய்ப் பாவித்து கொலு வைத்துக் கொண்டாடினாய் நீ.

நீ கணித ஆசிரியரா? நல் மனித ஆசிரியரா? நடமாடும் புனித ஆசிரியரா? ஓட்டு மொத்த உலகமே எங்களுக்கு நீங்கள் தானே. நீ இல்லாத நாளை நாங்கள் நினைத்துப் பார்க்கவே இல்லை. வகுப்பறையில் உன் வார்த்தைகளை கேட்காவிட்டால் வழிபாடுகள் இல்லாத கோவில்கள் போல அவை இருந்தால் என்ன? பூட்டிக் கிடந்தால் என்ன? உன்னைப்போல் ஆயிரம் ஆசிரியர்களைப்; பார்க்கலாம்! ஆனால் ஒரு அப்பாவைப் பார்க்க முடியுமா? தசவதாரமாய் நடிக்கலாம்! தசவதாரமாய் வாழ்ந்தது உன் வரலாறு அல்லவா? அண்ணனாக, அப்பாவாக, தோழனாக, துணைவனாக, வழிகாட்டியாக, வாழ்ந்து காட்டியதாக அப்பப்பா. உன் நினைவுகளோடு மட்டும் நாங்கள் நடைபோட நெஞ்சுக்குத் திடமில்லை. நீ வேண்டும்! நீ மட்டும் தான் வேண்டும்!

இது விருப்ப ஓய்வல்ல! யாரும் விரும்பாத ஓய்வு அலைகளுக்கு ஏது ஓய்வு? சூரியனுக்கு எப்போது தலை சாய்வு! குஞ்சுகளைத் தவிக்க விட்டு விட்டு தாய்க்கோழி தனியே பறந்து போய் விடுமோ! உனக்கு ஞாபகம் இருக்கிறதா கொடுமுடியின் நுனியில் எனை கொண்டு போய் நிறுத்திய போது நீ தலையிட்டதால் என் தலை தப்பியது. நீங்கள் நிற்கும் போது நாங்கள் தடுமாற மாட்டோம் உங்கள் கழுத்தில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் நாங்கள் பரமசிவன் கழுத்தில் கிடக்கும் பாம்பு. எந்தக் கருடனையும் சௌக்கியமா? என்று கேட்போம்! நீங்கள் இல்லாத நாளை நினைத்துப் பார்க்க மாட்டோம் உங்கள் நெஞ்சைத்தொட்டு சொல்லுங்கள் நீங்கள் மட்டும் என்ன எங்களை மறந்து தங்களை மறந்து இருந்து விடுவீர்களா என்ன? நாளை ஓய்வு பெற்றுச் செல்லுங்கள் வீட்டுக்கு ஓய்வோ தலைசாய்வோ பள்ளியில் தான் நீங்கள் நாளும் பவனி வரவேண்டும். உங்கள் சத்தம் இந்த உலகில் ஒலிக்கும் எல்லா நாட்களிலும் நம் பள்ளியிலும் அது நடைபோட வேண்டும் நாளும் பொழுதும் உங்கள் ஆதரவோடு நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும் நீங்களா! பள்ளியா! நீங்கள் தானே என்றைக்கும் எங்கள் பள்ளி!

நதிக்குத் தெரிவதில்லை அது நடந்து வந்த பாதையில் வளர்ந்த பயிர்களை, ஆனால் பயிரொன்று வாழ்த்துகிறது நதியினை ….

-அன்பு மாணவன்

“அம்மையோ! அப்பனோ! ஆசானோ! தோழனோ!
கனவிலே! நினைவிலே! உருவான கடவுளோ!
வந்துதித்த நிலவோ – எதுவோ
நீயே எமக்கு நிரந்தரக் கிழக்கு”