நீங்கள் யார்?…

சமீப காலமாக வேலை இல்லாத் திண்டாட்டம் போல் ஒரு மாயை மனிதர்களை வாட்டி வதைக்கிறது. காரணம் ஒய்வு வயது 60 ஆகிவிட்டது. கொரோனாவினால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டது. பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. பல்வேறு தொழிற்சாலைகளில் ஆட்குறைப்புகள். இதனால் வேலை இல்லாமல் பலர் திண்டாடுவதாக ஒரு சூழ்நிலை உருவாகிவிட்டது.

இதற்கு காரணம் யார்? நாம் தானே! பிள்ளைகளின் எதிர்காலத்தை எதை வைத்து நிர்ணயிக்கிறோம். குணத்தையா? திறமையையா? பழக்கவழக்கங்களையா? நாட்டின் தேவைகளையா? இல்லையே! கல்வியை மட்டுமே வைத்து நிர்ணயிக்கிறோம். அதில் வெற்றி பெற்று விட்டால் வாழ்க்கையில் வெற்றியடைந்து விடலாம். அதில் தோல்வியுற்றால் அனைவருக்கு மத்தியிலும் அவமானம் அடைய வேண்டும் என்றுதானே கற்றுக் கொடுக்கிறோம். படிக்காத மேதைகள் பாரினில் இல்லையா? கல்வியே கிட்டாதவர்கள் தொழிலதிபர்கள் ஆவதில்லையா? எல்லாமே உழைப்பு! உழைப்பு! உழைப்பு மட்டுமே!

நம்முடைய பிள்ளைகளின் உழைப்பையும் திறமையையும், பள்ளிக்கூடத்தில் பாடங்களை மனப்பாடம் செய்வதிலேயே பாழாக்கி விடுகிறோமே! திறமைகளையும், சிந்திக்கும் வேளைகளையும் டியுசன் படிக்க வைத்து சிதறடிக்க விடுகிறோமே! ஏன். உலகத்தில் உயர்ந்தவர்கள், வசதியானவர்கள், பணக்காரர்கள் என்று நீங்களே சிலரைக் கற்பனை செய்து கொண்டு அதனைப் போலவே நம் குழந்தையை உருவாக்க வேண்டும் என எதற்கு எண்ணுகிறீர்கள்? அவர்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்க நீங்கள் யார்? அந்தச் சலுகையையும் அத்துமீறலையும் அதிகப்பிரசங்கித் தனத்தையும் பெற்றோர்கள் என்ற பெயரில் பேராபத்தை விளைவிக்கிறீர்கள்!

ஒரு காலத்தில் எப்படியாவது படிக்க வைத்து ஒரு வாத்தியார் ஆகிவிட்டான் என்றால் அவன் கவலையில்லாமல் வாழ்வான் என்று எல்லோரும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் நோக்கிப் படையெடுத்தோம். பிறகு ஆரம்பப்பள்ளியில் பெண் ஆசிரியை தான் பணியாற்ற வேண்டும் என்றவுடன் படித்த ஆண் ஆசிரியர்கள் எல்லாம் பரிதாபத்திற்கு உரியவர்கள் ஆனார்கள். பணி பகல் கனவாகிப் போனது. என்ன செய்வது? ஏது செய்வது? என்று வழி தெரியாது விழிபிதுங்கி நின்றார்கள்.

சரி மேல்நிலை, உயர்நிலையாவது வேலை பார்க்கலாம் என்று கல்வியியல் கல்வி அதிகமானோர் கற்றார்கள் அதற்கும் வேலை வாய்ப்பு வேண்டுமென்றால் TET தேர்வு என்று வந்தவுடன் அதில் தேர்ச்சி பெற முடியாமல் பரிதவித்தனர் பட்டம், பதவி பகல் கனவானது. அவர்கள் வாழ்வோ பரிதாபத்திற்குரியதானது. இந்த வேளையில்தான் பொறியியல் (Engineering) படிப்பு உயர்ந்தது. அனைவரும் B.E, M.E படிக்க வேண்டும் என்று அலைந்தார்கள். தெருவுக்கு ஒரு பொறியியல் கல்லூரியும், பாலிடெக்னிக்கும் தோன்றியது. கல்லூரி நடத்தியவர்கள் பணத்தை அள்ளிக்குவித்தார்கள். அதில் படித்தவர்கள் மட்டும் தெருவுக்கு வந்தார்கள். வீட்டுக்கு ஒரு பொறியியல் வல்லுநர் வந்தவுடன் தேவைகள் குறைந்தது ஆட்கள் அதிகமானார்கள் இதனால் பொறியியில் வல்லுநர்கள் எல்லாம் ஏதாவது மினிபஸ்ஸில் நடத்துநர் வேலையாவது கிடைக்காத என ஏங்க ஆரம்பித்து விட்டார்கள்.

இப்போது எல்லோருக்கும் மருத்துவத்தின் மீது ஆர்வம் வந்து விட்டது. எப்படியாவது மருத்துவக் கல்லூரியில் இடம் பிடிப்பது இலட்சியமாக இருந்தது. ஆனால் நீட் தேர்வு என்ற ஒன்று, எமனாக வந்து அத்தனைபேர் இலட்சியத்தையும் பாழாக்கியது. இதனையும் தாண்டி அத்தனைபேரும் மருத்துவராகி விட்டோம். என்றால்? எல்லோரும் நோயாளியாக வேண்டும். இல்லையென்றால் நோயாளியாக ஆக்க வேண்டும். அதற்கு ஒரு குறுக்குவழி தேடி மனிதநேயத்தைக் கொல்ல வேண்டும்.

இத்தனையும் குழந்தைகள் ஆசையா? இல்லையே! பெற்றோர்களே பிள்ளைகளை இயக்குறீர்கள்! நீங்கள் யார்? அவர்கள் எதிர்காலத்தை நிர்ணயம் பண்ணுவதற்கு? நீங்கள் போட்ட பாதைகள்தான் இத்தனையும் அதில் அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு பயணித்தார்கள் இப்போது அப்படிப்பிற்கு மதிப்பு இல்லாததால் இருட்டறையில் விட்ட குருடனைப் போல் திண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கு மத்தியில் ஆங்கி மோகத்தில் அலைந்தீர்கள் தமிழ் வழிக்கல்வி இருந்தால் தான் வேலைவாய்ப்பு என்ற தடியால் அடித்து விட்டார்கள். இப்போதாவது புரிகிறதா? உங்கள் யோசனையெல்லாம் மண்ணுக்குச்சமம் தலை…ருக்குச் சமம் நீங்கள் யார்? பிள்ளைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க?

ஆரோக்கியமாக வாழவேண்டுமென்றால் இரசனையோடு வாழ வேண்டும். ஒரு ஓவியத்தை இரசிக்கிறோம். ஓவியனை உருவாக்கினீர்களா? இசையில் மதி மயங்குகிறோம். இசை ஆர்வமுள்ளவனை வாழ வீட்டீர்களா? பாட்டில் பரவசமடைகிறோம். கவிஞனை உருவாக வீட்டீர்களா? கவிதை சோறுபோடுமா? என்று கண்டித்தீர்களே! தாஜ்மகாலை இரசிக்கிறோம். கட்டிடத் தொழிலாளியை உருவாக்கிறீர்களா? ஐயோ என் பிள்ளை வெயிலில் கருத்துவிடுவான் என எண்ணியதோடு அந்த வேலையை ஏளனாய் பார்த்தீர்களே! இது எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் எல்லோருக்கும் சோறுபோடும் விவசாயியை எப்போது உருவாக்கப் போகிறீர்கள்?, அவன் மட்டுமே சோறுபோடுகிறவன். சொந்த காலில் நிற்கிறவன். ஊருக்கு உழைக்கிறவன். தனக்கு மிஞ்சியதை தானம் தருகிறவன். தன்மானம் மிகுந்தவன் இவன் தான் எனக்குத் தாத்தாவாக இருக்க வேண்டும். தந்தையாக இருக்கவேண்டும். தமையனாக இருக்க வேண்டும். இந்த தார்மீக எண்ணம் எங்கு உதிக்கிறதோ? அங்குதான் பூமி செழிக்கும் மக்கள் மகிழ்வார்கள் வாருங்கள். விவசாயியை உருவாக்குவோம். விவசாயியாய் உருமாறுவோம். நாடு செழிக்கும் வீடு மகிழும் வாழ்க வளமுடன்.

“நான் சகதியில்
இறங்காவிட்டால்? – நாளை
நீ அகதியாக
மாறிவிடுவாய்!”