கானல் நீர் கனவுகள்…

பெற்றோர்களே பெரியோர்களே ஒவ்வொருவருக்கும் குழந்தைகள் பிறப்பது கடவுள் தந்த வரம் என எண்ணிக் கொண்டாடுகிறோம். ஒருகாலத்தில் எத்தனை குழந்தைகள் பிறந்தாலும் அதனதன் திறமைக்கு ஏற்ப தொழிலைக் கற்றுக் கொடுத்து குணத்திற்கு ஏற்ப வழிநடத்தி ஒவ்வொரு குழந்தைகளையும் தாங்கள் குடும்பத்திற்குப் பெருமை சேர்க்கும் அளவிற்கு வளர்த்து ஆளாக்குவார்கள். இது காலப்போக்கில் அதிகமான குழந்தைகள் பெற்றால் சரியாகக் கவனிக்க முடியாது என்று ஒன்றோ, இரண்டோ குழந்தைகளைப் பெற்று அவர்களுக்குத் தேவையான வசதியெல்லாம் செய்து கொடுத்து தன் கனவினை நனவாக்கும் குழந்தைகளாக வளர்க்க ஆசைப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் நினைப்பதுபோல நீங்கள் நினைப்பதுபோல நான் நினைப்பதுபோல குழந்தைகள் வளர்கின்றனவா? இல்லையே!

நிச்சயமாக வளரவில்லை அதுவும் மிகவும் கவலை அளிக்கும் அளவிற்கு குழந்தைகளின் போக்கு வந்து விட்டது. நிச்சயம் இன்றைய இளைய தலைமுறையை வைத்து எதிர்கால இந்தியாவைக் கட்டமைக்க நினைப்பது கூமுட்டைகளை அடைவைத்து குஞ்சு பொரிக்கும் எனக் காத்திருப்பதற்கு சமமாகிறது. இந்தக் குழந்தைகள் இப்படிக் கெட்டுப் போவதற்கு பெற்றோர்கள் காரணமா? பிள்ளைகள் காரணமா? ஆசிரியர்கள் காரணமா? கல்வி நிறுவனங்கள் காரணமா? ஊடகம் காரணமா? சமூகம் காரணமா? எனப் பட்டிமன்றம் வைத்துப் பகுப்பாய்வு செய்து பார்த்தால் ஏறக்குறைய எல்லோருமே காரணமாகிவிடுகிறோம். தகுதிக்குமீறி ஆசைப்பட்டு ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கிற பெற்றோர்கள் தன் குழந்தைகளை கண்டுகொள்ளவே நேரமில்லாது உழைப்பதால் குழந்தைகள், யாரும் காணச் சகிக்காத முறையில் வளர்ந்து வருகிறது.

ஆசிரியர்களைக் குறை சொல்லவே முடியாது. ஆசிரியர்களை அரசாங்கம் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. ஊடகம் ஒவ்வொன்றையும் ஊதிப்பெரிதாக்கி ஆசிரியர்களை ஒரு குற்றவாளியைப் பார்ப்பது போல பார்க்க வைத்துள்ளது. பெற்றோர்களோ தாங்கள் பிள்ளைகள் மீது வைத்துள்ள அளவற்ற நம்பிக்கையால் ஆசிரியர்களை அசிங்கமாக நடத்தி விடுகிறார்கள். இதில் குளிர்காய்கின்ற மாணவன் அப்பனை அடியாளாய் பயன்படுத்தி ஆசிரியரை அடக்கி வைக்கிறான். இதனால் விரக்தியுற்ற ஆசிரியர் எவன் மகன் எப்படிப் போனாலென்ன என்ற கனத்த இதயத்தோடு அதனைக் கடந்து போகிறார்கள். ஊருக்கு நாலு வருத்தபடாத கூட்டங்கள் இருந்து கொண்டு உண்மைக்குப் போராடுவதுபோல் பேசிக்கொண்டு காசு கரக்கத் துடிக்கும் கரையான்களாலும் ஆசிரியர்கள் கைகட்டப்படுகிறது.

பெற்றோர்களே உங்கள் நிலைதான் மிகவும் பரிதாபம். ஏனென்றால் கடவுள் மீது நம்பிக்கை வைத்தது போல் உங்கள் குழந்தைகள் மீது நீங்கள் வைத்திருக்கிறீர்கள். ஆனால் அவைகள் சாத்தான்களை விடக் கேவலமாக வளர்க்கிறது. ஒருகாலத்தில் குழந்தை குடும்பத்தின் சூழ்நிலை அறிந்து வாழும். ஆனால் பெற்றோர்களின் ஆங்கில மோகத்தால் தகுதிக்கு மீறி கடனை வாங்கியாவது குழந்தை கழுத்தில் டை கட்ட வேண்டும். வட்டி கட்டியாவது பிள்ளை வாகனத்தில் செல்ல வேண்டும் சொத்தை வித்தாவது அவன் ஷூ போட்டுவர வேண்டும் என்ற பெற்றோர்களின் பேராசை பிள்ளைகள் மீது திணிக்கப்பட்டு வருகிறது. இதனால் இன்று பிள்ளைகளுக்குச் செல் இல்லாத வாழ்க்கையை சிந்திக்க மறுக்கிறது. ஆடம்பர உடையைத் தவிர மற்றதை அணிய மறுக்கிறது. தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு தடம் மாறுகிறது. தரித்திரத்தைக் கட்டிக் கொள்கிறது. தாய் தந்தையை மதிக்க மறுக்கிறது.

உங்கள் குழந்தைகளின் உண்மை முகம் தெரிய வேண்டுமா? அவன் பள்ளிக்குச் செல்லும்போது பேரூந்து நிலையத்தில் பெற்றோர்களே கவனியுங்கள். எத்தனை காதல் லீலைகள் அங்கு அரங்கேறுகிறது. அதனைக் கண்டால் கலங்கிப் போவீர்கள் பேரூந்தில் பயணிக்கும்போது பார்த்து விடாதீர்கள். அவன் செய்கிற அட்டூழியங்களால் தனக்கு இப்படி ஒரு பிள்ளையா? எனத் தற்கொலை செய்து விடுவீர்கள்.!

இப்போது பிள்ளைகளிடம் அலைபேசியை வேறு கொடுத்துவீட்டீர்கள். ஏதோ ஒரு சிலர் ஒதுக்குப் புறமாய் பார்த்த ஆபாசத் திருட்டுப் படங்களை இப்போது உள் வீட்டில் வைத்து கலர்கலராக பார்த்து இரசிக்கும் பயங்கர உலகத்தில் நம் குழந்தைகள் பாழ்பட்டுக் கிடக்கிறது. பனிரெண்டாம் வகுப்பினை தாண்டுமுன்னே ஐந்து காதல் மூன்று முறிவு என முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆணுக்குப் பெண் இளைப்பில்லை என பெண் குழந்தைகளும் மது அருந்துவதை படம் போட்டு பகிர்ந்து வருகிறது. ஊருக்கு நான்கு ஊதாரிகள் தடம் மாறும் குழந்தைகளின் தடம் பார்த்து தன் வலைக்குள் வீழ்த்தி போதைக்கு அடிமையாக்குகிறார்கள். பாலியல் சீண்டல்களில் பாடம் நடத்துகிறார்கள். கருக்கலைப்புகள் அதிகமான கண்றாவி உலகத்தையும் நாம் கண்டு கொண்டுதான் இருக்கிறோம். வேலிக்குள் வளராத ரோஜா செடியில் உள்ள பூக்கள் கசக்கப்படும் கொஞ்சம் அயர்ந்தால் ஆடுகள் நுழைந்து அத்தனையும் மேய்ந்து விடும். அதுபோல் தான் நம் குழந்தைகளும் கவனமாக இருப்போம் கண்ணுக்குள் வைத்துப் பாதுகாப்போம்.

கூடுமான வரையில் அவர்களுக்கு என்று நேரம் ஒதுக்கி உறவாடுவோம். அவனுடைய நண்பர்களையெல்லாம் இனம் கண்டு அவன் குணமறிந்து பழகச் சொல்வோம். குடும்ப நிலையை அறிய வைத்து அதற்கேற்ப வாழ்க்கை நடத்தவும் கற்றுக் கொடுப்போம். மாதம் ஒருமுறை ஆசிரியர்களைச் சந்தித்து உறவாடுவோம். ஆசைகளை அளவோடு வைக்கச் சொல்வோம். உறவுகளின் உண்மைத் தன்மையும் நட்பையும் கற்பையும் உயிரென மதிக்கவும். பெரியோர்கள் வழிநடக்கவும் கற்றுக் கொடுப்போம். தம் குழந்தைகள் தடம் மாறாமல் போவதற்கு அவனுக்குத் தகுந்த வழிகாட்ட தகுதியுற்றவர்கள் அத்தனைபேர் உதவியையும் வாங்கிக் கொள்வோம். தேவையற்ற உறவுகளும் தீண்டத்தகாத பழக்கங்களும் தீயைப் போன்றது அது நமது குடும்பத்தை மட்டுமல்ல நம் குலத்தையே அழித்துவிடும் என்பதனைக் கற்றுக் கொடுப்போம். குழந்தை மனதோடு பழகுவோம். குழந்தைகளோடு பழகுவோம். குழந்தைகளுக்காக வாழுவோம்.

“பொறுப்பற்ற சுதந்திரம்
பொறுக்கிகளை உருவாக்கும்”