கடவுள் இருக்கான் குமாரு!…

ஊரெங்கும் கொண்டாட்டம், உள்ளம் முழுவதும் உற்சாகம். நாம்தான் சாதித்ததுபோல ஒவ்வொருவரும் இவ்வெற்றிக் கொண்டாட்டத்தைக் கொண்டாடி வருகிறார்கள். காரணம் உலகம் இப்போது போட்டி, பொறாமை, சூது, வஞ்சகம், சூழ்ந்து நிற்க, பிறரை எப்படியாவது கெடுத்து பேராசை பிடித்தவர்களுக்ககு சிலவற்றைக் கொடுத்தாவது வாழ்வில் முன்னேறி விட வேண்டும் என்று குறுக்கு வழியில் வாழ்வைத் தேடும் திருட்டுக் கூட்டத்திற்கு மத்தியில் நல்லவர்கள் நசுங்கிப் போய்விடுவார்களோ என நாடே பயந்தது. ஆனால் பயந்ததுபோல் எதுவும் நடக்கவில்லை காரணம் கடவுள் இருக்கிறான் குமாரு!

இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றது யாரு? என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்லுவீர்கள். என்னைக் கேட்டால் இப்படித்தான் சொல்வேன் ஏனென்றால் நான் கட்சியைச் சொல்லப் போவதில்லை. ஆட்சியைச் சொல்லப் போவதில்லை மதத்தைச் சொல்லப்போவதில்லை என மனம் பேசியதை மனம் திறந்து பேசுகிறேன்.

நாங்கள் இந்த மக்களுக்கு ஆற்றும் சேவையைப் பார்த்தும், செய்யும் உதவியைப் பார்த்தும் எதிர் கட்சிக்காரர்கள் கூட இக்கட்சிக்கு ஓட்டுப் போடாமல் போய் விட்டோமே என வருந்தி வரும் தேர்தலில் தங்கள் வாக்குகளை வாரி வழங்குவார்கள் என்ற நம்பிக்கையுடன் களத்தில் இறங்கினார்கள் ஒரு கூட்டம். பிரதானக் கட்சி என்று பேர் வாங்கிய மற்றொரு கூட்டமோ. அடுத்தவர்கள் அள்ளி வழங்கியதைப் பார்த்து அதில் உள்ள குறைகளைப் பார்த்து அந்த இருட்டுக்கு வெளிச்சம்போடும் திருட்டுக் கும்பலாகவும் எத்தனையோ வாக்குறுதிகளை நிறைவேற்றும்போதும் இன்னும் எதை நிறைவேற்றவில்லை என பூதக் கண்ணாடி வைத்துப் பார்த்து அதனை விளம்பரப்படுத்தி அதனால் அவர்களுக்கு ஓட்டுப் போடாதீர்கள் என ஒரு கூட்டம்.

மனிதர்கள் உணர்ச்சிக்கு அடிமையானவர்கள் எனவே அவர்கள் உணர்ச்சியைத் தூண்டி விட்டு அவர்களை முட்டாளாக்கி மதத்தின் பெயரால் பிரித்து ஆள வேண்டும் என்று வேற்று மதத்துக்காரர்கள் மீது வெறுப்புணர்வை விதைக்க இல்லாத ஒன்றை இட்டுக்கட்டி எல்லோரையும் காயப்படுத்தி அந்த இரத்தத்திலும் இரணத்திலும் தன் ஆட்சியை அலங்கரித்து விடலாம் எனத் தப்புக் கணக்குப் போட்ட ஒரு தாந்தோன்றிக் கூட்டம்.

தமிழ்நாட்டிலே நாங்கள்தான் சாதிய அடிப்படையில் அதிகமான மக்கள் என்று கூறிக் கொண்டு அண்டப் புளுகு ஆகாசப் புளுக்களை அள்ளிவிட்டு சொந்தச் சாதி மக்களிடத்தில் கூட சோரம் போன ஒரு கூட்டம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதைத் தடுத்திடுவோம். இதை நிறுத்திடுவோம் என்று காட்டுக் கூச்சல் போட்டு சத்தமாய் பேசினால் சத்தியம் பேசுகிறோம் என நினைக்கிற ஒரு கூட்டம்.

இதனைப் பயன்படுத்தி நமது கட்சியை எப்படியாவது வளர்த்துவிட வேண்டும் என எண்ணாமல் நம் நலனைவிட நாட்டு நலனே பெரிது. மக்கள் விரும்பும் மனிதர்களிடத்தில் ஆட்சி இருக்கட்டும் நாமும் அவர்கள் உடன் இருப்போம் என எண்ணி அவர்கள் கொடுத்த பங்கைப் பெற்றுக் கொண்டு அவற்றில் மட்டுமே வெற்றிதேட நினைத்த சகிப்புத் தன்மை உள்ள ஒரு கூட்டம்.

இவர்களில் யாருக்கு வெற்றி? நெஞ்சைத் தொட்டு நீங்களே சொல்லுங்கள். கூட்டிக் கழித்துப் பாருங்கள் சத்தியம் ஜெயித்திருக்கிறது. தமிழன் வெற்றியடைந்திருக்கிறான்.

ஒண்டிப் பிழைக்க வந்த ஆரியன் படிப்படியாக ஒவ்வொரு இனத்தையும் அடிமைப்படுத்தினான் ஆனால் தமிழனை மட்டும் தலைகீழாக நின்றாலும் அடிபணிய வைக்க முடியாது எனத் தெரிந்து நரித்தனமாக அவனைப் பிரித்து தன்னை நிலைநிறுத்த வேண்டும் என நினைத்த ஆரியன் பிரிக்கப் பயன்படுத்திய கருவியே சாதியும், மதமும், இதனைச் சரியாகப் புரிந்து கொண்டதால்தான் சில நேரங்களில் தமிழன் சரிவைச் சந்தித்தாலும தன்னைச் சரிசெய்து கொள்கிறான்.

மீண்டும் ஒருமுறை தமிழன் ஜெயித்துவிட்டான் மீண்டு வந்து வெற்றியை நிலைநாட்டிவிட்டான். தன்னுடைய சேவையைச் சொல்லுகிறவனை தோளில் உயர்த்தித் தூக்கிவிட்டான். முன்னர் ஆண்டவனாக இருந்து தனது ஆட்சியின் சாதனையைச் சொல்ல வழியில்லாது அடுத்தவன் குறைகளைச் சொல்லியே ஓட்டுக்கேட்ட அருகதை அற்றவர்களை அப்புறப்படுத்திவிட்டான்.

தன் சாதிதான் அதிகம் அதனால் நாங்கள் ஆள வேண்டும் என்று விளக்குப் பிடித்தவர்களின் திரிகளை தீக்கிரையாக்கிவிட்டான். அக்கினியை அழித்துவிட்டான். தமிழன்

மதம் பின்பற்றுவதற்கும் வழி காட்டுவதற்கும் தான். அடுத்த மதத்திற்குள் அத்துமீறி நுழையும் அயோக்கியர்களால் தன்மதம் எப்போதும் வாழாது வளராது எனப்புரிந்து கொண்டு மதமோ, சாதியோ பிரிப்பதற்காக அல்ல என்பதனை புரியாதவர்களின் கொட்டம் அடக்க, கூடாரம் தகர்க்க, ஆன்மீகப் போரை அகிம்சையால் அடக்கிவிட்டான் தமிழன்.

அடிமைகளைப் பிடிக்கவில்லை அடுத்தவர்களைக் குறைசொல்கிறவர்களைப் பிடிக்கவில்லை. நம்மைப் பிரிப்பவர்களைப் பிடிக்கவில்லை. நல்லவர்கள் போல நடிப்பவர்களைப் பிடிக்கவில்லை நயவஞ்சகர்களைப் பிடிக்கவில்லை. திராவிடன் என்று சொல்லிக் கொண்டு தெய்வத்தின் சாயலில் திரிகின்ற பச்சோந்திகளைப் பிடிக்கவில்லை பேராசை பிடித்தவனைப் பிடிக்கவில்லை, பெண்களை மதியாதவனைப் பிடிக்கவில்லை கடத்தலைப் பிடிக்கவில்லை. கள்ளச் சந்தை பிடிக்கவில்லை உள்ளதை உள்ளவாறு ஏற்றுக் கொள்ளும் உண்மைத் தமிழனைப் பிடித்திருக்கிறது. அவனையே ஓட்டுப் போட்டு உயர்த்தி இருக்கிறார்கள் மீண்டும் ஒருமுறை தமிழன் ஜெயித்துவிட்டான். வாழ்க தமிழ்! வளர்க தமிழன்!.

“வந்தோரை வாழ வைக்கும் தமிழகம்
வாய்ப்பு கிடைத்தவுடன் வழியனுப்பவும் செய்யும்?”