பிச்சைக்காரர்களை உருவாக்காதீர்கள்…

பொதுவாக ஒரு பொன்மொழி சொல்வார்கள் தீவிரவாதிகள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள் என்று அதேபோல்தான் இக்கட்டுரையில் கூறவிரும்புகிறேன். இரக்கப்பட்டோ அல்லது பிறர் புகழ வேண்டுமென்றோ அல்லது ஏதாவது எதிர் பார்த்தோ உங்களது பொருளாதாரத்தை வைத்துப் பிறரைப் பிச்சைக் காரர்களாக மாற்றி வீடாதீர்கள். உணவு, உடை கொடுங்கள். எக்காரணத்தை முன்னிட்டும் அவர்கள் தேவையை நிறைவேற்றுவதைவிட பணம் கொடுக்க ஆரம்பித்தால் நீங்கள் பிச்சைக்காரர்களை உருவாக்குகிறீர்கள் என்று அர்த்தம்.

பிச்சைக்காரர்கள் பல வகைப்படும் பல இடங்களில் பல கோணங்களில் பல மனிதர்களைச் சந்திப்பீர்கள் அவர்கள் யார்? அவர்களுக்கு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?

முதல் வகைப் பிச்சைக்காரர்கள் உடல் ஊனமுற்றோர், வியாதிக் காரர்கள் இவர்களை இவர்களுக்கு என்று நடத்தப்படுகின்ற விடுதிகளில் சேர்க்க உதவி செய்யுங்கள் அவர்களைச் சந்திக்கும் போது உணவு வாங்கிக் கொடுங்கள். உடைகள் வாங்கிக் கொடுங்கள் இவர்களுக்குப் பணம் கொடுத்துப் பழக்கிவிட்டால் பிறகு இரசீது அடித்து அடிக்கடி உங்களைச் சந்திக்க வருவார்கள் பணம் கொடுக்காமல் போக மாட்டர்கள் கொடுக்கவில்லை என்றால் ஏசுவார்கள்.

இரண்டாம் வகையில் குழந்தையை வைத்துக் கொண்டு அல்லது குழந்தைகள் பிச்சையெடுப்பார்கள் இது மிகவும் மோசமானது அவர்களுக்கு ஏதாவது வேலை கொடுக்கிறேன். குழந்தைகளைப் படிக்க வைக்கிறேன் என்று சொல்லிப்பாருங்கள் ஓடிவிடுவார்கள் இவர்களை ஒரு போதும் ஆதரிக்காதீர்கள் இவர்களுக்கு நீங்கள் பிச்சை போட்டால் குழந்தைகளைக் கடத்திப் பிச்சையெடுக்க வைக்கின்ற கும்பலுக்குக் கொள்ளை இலாபம். ஆகவே, குழந்தைகள் கடத்தலை அடியோடு ஒழிக்க வேண்டுமென்றால் குழந்தைகளுக்குப் பிச்சை போடாதீர்கள். தேவைப்பட்டால் உணவு, உடை வாங்கிக் கொடுங்கள்.

திருநங்கைகள் வந்து பிச்சையெடுப்பார்கள். இவர்களுக்கு இன்று சம அந்தஸ்து, பல சலுகைகள், வேலைவாய்ப்புகள் கொடுத்தாகி விட்டது. அந்தப் பாதையில் அவர்கள் முன்னேறட்டும். இல்லாவிட்டால் ஒரு நாள் கொடுக்கவில்லையென்றாலும் திட்டிக் கொண்டே செல்வார்கள்.

கார்ப்பரேட் திருடர்கள் இவர்கள் ஏதாவது குழந்தை படத்தைப் போட்டு இக்குழந்தைக்கு இந்த வியாதி எனவே, பணம் அனுப்புங்கள் என்று ஒரு கும்பல் இளகிய மனத்தவர்களை எல்லாம் ஏமாளியாக்கிக்கொண்டிருக்கும்.

சிலர் நாகரீகத் திருடர்கள் இவர்கள் எல்லோரிடமும் கேட்க மட்டார்கள். குறிப்பிட்ட சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் போய் நான் தொலைவில் உள்ள ஊர்க்காரன் வருகிற வழியில் அனைத்தையும் பறிகொடுத்துவிட்டேன். ஊருக்கச் செல்ல வழியில்லை. எனவே, ஏதாவது உதவி செய்யுங்கள் என்று 500, 1000 ரூபாய்களை பெற்றுச் சென்று டாஸ்மார்க் கடைப்பக்கம் ஒதுங்குவார்கள்.

சிலர் குழந்தைகளைப் படிக்க வைக்க வழியில்லை ஏதாவது உதவி செய்யுங்கள் என்பார்கள். இன்று தமிழகத்தைப் பொறுத்த மட்டில் அரசுப் பள்ளிகளில், தமிழ் வழிக் கல்வியில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்காக ஆசிரியர்களே மாணவர்களுக்கு அனைத்தும் கொடுத்துப் படிக்க வைக்கிறார்கள். ஆகவே, இப்படி யாராவது வந்தாலும் ஏமாந்து விடாதீர்கள்.

என் மனைவிக்கு உடல் நிலை சரியில்லை. என் கணவருக்கு ஆபரேசன் என்று ஒரு கூட்டம் அலைந்து கொண்டு இருக்கும். இவர்களிடமும் ஏமாந்து விடாதீர்கள். கையில் அட்டையுடன் ஒரு கூட்டம் அலையும். அதில் அவர்களது பாவப்பட்ட கதை என்று, ஒன்று கற்பனையில் வடிக்கப்பட்டிருக்கும். கண்கலங்கி விடாதீர்கள். பிறகு உங்களது கண்ணீரைத் துடைக்க வேண்டியதிருக்கும்.

அதிகாரப்பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஒரு இரசீது அடித்து வைத்துக் கொண்டு நாட்டுக்கு நல்லது செய்வது போல் நடிப்பார்கள். நற்செயல் செய்வது போல் பொய் சொல்வார்கள். நன்கொடை என்ற பெயரில் நம் குடலை உருவுவார்கள். மயக்க மொழி பேசுவார்கள். இதயம் இளகி உருகி ஓடுவது போல் கதை சொல்வார்கள். இவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். இல்லையென்றால் உங்களை நச்சரிப்பார்கள்.

அலுவலகப் பிச்சைக்காரர்கள் தாங்களின் ஆடம்பரத்திற்காக தாங்கள் செய்ய வேண்டிய பணிக்காகப் பிச்சையெடுப்பார்கள் அலுவலகத்தில் அதிகாரிகளாக உட்கார்ந்து கொண்டு நாகரீகமாகச் சட்டை அணிந்து கொண்டு அடுத்தவர்கள் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகள். இலஞ்சம் என்ற பெயரில் மானிடச் சமுதாயத்தின் பச்சை இரத்தம் குடிக்கும் பந்சோந்திகள். இவர்களிடம் இருக்கும் அதிகாரம் தான் இவர்களது திருவோடு, நம்மிடம் தட்டிப் பறிக்கும் தரம் கெட்ட பிச்சைக்காரர்கள் இவர்களைத் தடுத்து நிறுத்துங்கள்.

ஒரு சில பிச்சைக் காரர்கள் உண்டியல் வைத்தோ உண்டியல் எடுத்தோ பிழைப்பை நடத்துவார்கள் இவர்களிடமும் எச்சரிக்கையாக இருங்கள்.

வாக்காளப் பிச்சைக்காரர்கள் தேர்தல் வந்து விட்டால் தெருவுக்கு வந்து விடுவார்கள் குடும்பத்தின் எண்ணிக்கையைக் காட்டி கும்பிடுபோட்டு ஏஜெண்ட்களின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து ஓட்டுக்கு இவ்வளவு என்று வெட்கம் இல்லாமல் வீட்டுக்கு வாங்கிச் செல்லும் ஏமாளிப்பிச்சைக்காரர்கள்.

இப்படி எத்தனையோ பிச்சைக்காரர்களை நீங்களும் பார்த்திருப்பீர்கள் பிச்சைக்காரர்களை உருவாக்காதீர்கள் உறவுக்காரர்களைப் போல் உணவு கொடுங்கள் உடை கொடுங்கள் ஓருபோதும் பணம்தராதீர்கள் அது பல்வேறு பிச்சைக்காரர்களை உருவாக்கிவிடும்.

“தூண்டில் கொடுங்கள்
மீனைக் கொடுக்காதீர்கள்”