உள்ளாட்சியா?… உன் ஆட்சியா?

இப்போது உள்ளாட்சித் தேர்தல் ஒன்பது மாவட்டங்களில் நடைபெற இருக்கிறது. அதற்குள் நாளுக்கு ஒரு நாடகம் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. சில இடங்களில் இந்தப் பதவி ஏலம் விடப்படுகிறது. சில இடங்களில் குத்தகைக்கு எடுக்கப்படுகிறது. சில இடங்களில் முன்பணம் கொடுக்கப்பட்டு கோவிலில் வைத்து சத்தியம் வாங்கப்படுகிறது. இதனால் நேர்மையானவர்கள் சாதாரண நிலையில் உள்ளவர்கள் போட்டியிடத் தயங்குகிறார்கள். தோற்கிறார்கள்.

உண்மைகள் புறப்படு முன்னே பொய்கள் இறக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்து விடுகிறது. அதுவும் இன்றைய அரசியல் கேவலமான பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டது. நேர்மையானவர்கள் போட்டியிட ஆசைப்பட்டால் அவர்களை அசிங்கமாகவும், ஆபாசமாகவும் சித்தரித்து வதந்திகளைப் பரப்பி அவர்களுக்கு வாக்குகளை சேகரிக்க விடாமல் தடுத்து விடுகிறார்கள். அவர்களை தவறான மனிதர்களாகக் காட்டி விடுகிறார்கள்;. தன்னுடைய பணபலத்தால்…

இதுவரை அரசியல்வாதிகள் கொள்கை ரீதியாக முட்டிக்கொள்வார்கள், மோதிக் கொள்வார்கள் இது ஒரு கோர்ட் சீன் பார்ப்பதுபோல சுவராஸ்யமாக இருக்கும் ஆனால் தற்போது ஒவ்வொருவரும் அடுத்தவர்களின் அந்தரங்கங்களை அலசி ஆராய்ந்து திரையிட்டுக் காட்டும் போது ஏதோ ஆபாசப்படம் பார்ப்பதுபோல் இருக்கிறது. இதனால் பெரியவர்களே இப்படித்தானோ! என எளிதில் இளைய சமுதாயம் துணிந்து கெட்டுப்போகத் தயாராகிறது. இலைமறை காயாக இருந்த பல விசயங்கள் இப்போது மந்தையில் பந்தி வைக்கப்படுகிறது. ஒவ்வொருவர் மடியிலும் வந்து கொட்டப்படுகிறது.

21ஆம் நூற்றாண்டில் பயணிக்கிறோம். இந்தியா வல்லரசாகிறது என்றெல்லாம் பொய்யுறைகளைப் பரப்புறையாகப் பாசாங்கு காட்டிக் கொள்கிற நாம் இன்னும் பெண்களுக்குப் போதுமான மரியாதை கொடுக்கவில்லையே? பெண்களை மதிக்காத எந்தச் சமுதாயமும் வாழ்ந்ததாக இதுவரை வரலாறு பேசவில்லை. பெண்கள் போட்டியிடுவதை ஆணாதிக்கம் தடுத்துவிடும் என்பதற்காக அவர்களுக்கு என்று சில தொகுதிகளை அரசே ஏற்படுத்தித்தந்துள்ளது. அதிலும் ஆண்களே ஆட்சி செய்ய விரும்புகிறார்கள். பெண்களைப் பேருக்கு வைத்துவிட்டு, கணவன்மார்கள் ஆட்சி செய்கின்ற கண்றாவிகளைப் பார்க்கச் சகிக்கவில்லை.

சில இடங்களில் பெண்கள் தடுக்கப்படுகிறார்கள், மிரட்டப்படுகிறார்கள் அதையும் தாண்டி துணிந்த பெண்களால் பல இடங்களில் புரட்சி ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. அந்தப் புரட்சிப் பெண்கள் இருக்கிறவரைக்கும் பெண்மைக்கு வறட்சி இருக்காது. அதற்குப் பரந்த எண்ணமுள்ள எல்லோரும் ஒன்றிணைவோம்.

சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் ஒரு செய்தியைக் காண நேரிட்டது. பார்த்த கண்கள் பூத்துப் போயின. பார்த்த எண்ணங்கள் பரவசமாயின. என் தாய்த் திருநாட்டில் இப்படி ஒரு தங்கச்சியா? இப்படி ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தங்கச்சியோ!, தாரமோ!, மகளோ! முன்வர ஒவ்வொரு ஆண்மகனும் நமது ஆண்மையின் அடையாளத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பல்வேறு தடைகளைத் தாண்டி ஒரு தங்கச்சி வந்து வேட்புமனு தாக்கல் செய்து ஊராட்சி மன்றத் தலைவராகிறாள். காரணம் இது கடந்த முறை வரை இத்தொகுதி மலைவாழ் மக்கள் மற்றும் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இடம் ஆகும். இம்முறை பட்டியலின மக்கள் போட்டியிடும் தொகுதியாக மாறியது. எனவே மக்கள் மத்தியில் பட்டியலின மக்கள் போட்டியிடுவதா? என எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். எகத்தாளம் பேசியிருப்பார்கள். எவள் வந்து போட்டியிடுவாள்? என்று இருமாப்பாய் உருமியிருப்பார்கள். இந்த ஆணாதிக்கச் சமுதாயத்தின் முதுகெலும்பை நொறுக்கியது போல வந்து தலைவராகிவிட்டாள் அந்தத் தங்கை. அவளைப் பாராட்டுவோம். பாதுகாப்புக் கொடுப்போம்.

ஓட்டுப் போடுவது மட்டும் நமது கடமை, உரிமை என ஒவ்வொருவரும் உட்காந்து விடாதீர்கள். அது சுயநலத்தைச் சோறு பொங்கிச் சாப்பிடும் சோம்பேறிகளின் வேலை. பொதுநலம் காணவே நாம் பூமிக்கு வந்துள்ளோம். ஆகவே யாராகயிருந்தாலும் அரசியலில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபட்டுத்தான் ஆக வேண்டும். அதிலும் ஒடுக்கப்பட்டோர் உரிமை வாழ்வு பெற வேண்டும். தடுக்கப்பட்டோர் தடையைத் தாண்டி வர வேண்டும். விளிம்பிலுள்ளோர் வீறு கொண்டு எழ வேண்டும். பெண்கள் சம உரிமை பெற வேண்டும். சமத்துவத்தில் திளைக்க வேண்டும். அதற்காக நாம் உயிரையும் கொடுக்க வேண்டும்.

இந்தியாவில் பெண்களுக்குச் சம உரிமை கிடைத்தால் மட்டுமே இந்தியா வல்லரசாகும், நல்லரசாகும். அதுவரை அது எந்தக் கொம்பனாலும் முடியாது. ஆகவே, இது உள்ளாட்சி அல்ல, உன் ஆட்சி. காசுக்கு விலை போய் விடாதே! நேர்மையானவர்கள் ஜெயிக்க வேண்டும். யார் யாருக்கு எந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டதோ அவர்கள் தடையின்றிப் போட்டியிட்டு வெற்றியடைய வேண்டும். பெண்கள் சமத்துவம் பெற வேண்டும். உழைப்போம், உயர்த்துவோம். போராடுவோம், புரட்சியை விதைப்போம். இதோ ஒரு திரைப்படப் பாடல்.

“ஓ ஒரு தென்றல் புயலாகி வருதே
ஓ ஒரு தெய்வம் படி தாண்டி வருதே”
அடுக்களை துடைப்பதும், படுக்கையை விரிப்பதும் அது பெண்ணின் தொழிலில்லையே.
சரித்திரம் படைக்கவும், தரித்திரம் துடைக்கவும் வருவதில் பிழையில்லையே!

என் பாடல் வரிக்கு வடிகால் அமைத்து வாய்க்கால் வெட்டுவோம் வாருங்கள், வரவேற்பு நடத்துங்கள் புதிய சமுதாயம் பூமியில் தளைக்கட்டும்.