சுதந்திர நாட்டின் அடிமைகள்…

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனை பிரதிபலிக்க முடியாமல் கொரோனாவின் கொடுமையால் பள்ளிகள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. கூட்டம் கூட முடியாத நெருக்கடி நிலையில் எங்கே கொண்டாடுவது 75வது சுதந்திரத்தை.?

இருப்பினும் ஆங்காங்கே கொடியேற்றி சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தலைவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் வாய் கிழிய, காது செவிடாகும் அளவிற்கு கேட்டு விட்டோம். எத்தனையோ பார்த்து எத்தனையோ கேட்டு என்னாச்சு? சக்தியும் கெட்டு புத்தியும் கெட்டு தெருவில் நிற்கிறோம்.

ஆங்கிலேயர்கள் நம்மை விட்டுப் போய் விட்டார்கள்! ஆங்கில மோகம் நம்மைவிட்டுப் போயிருக்கிறதா? படித்தால் ஆங்கில வழிப் பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்று பாமரனும் எண்ணி ஆங்கிலப் பள்ளியில் தன் குழந்தையை படிக்க வைக்க இப்போது தகப்பனால் பணம் கட்ட முடியாமலும் பிள்ளைகளால் படிப்பைத் தொடர முடியாமலும் ஊமை அடிமைகளாய் வாழும் மனிதர்களுக்கு எப்போது சுதந்திரம் கிடைத்தது?

கஷ்டப்பட்டுப் பொருளாதார நெருக்கடியிலும் குடும்பம் நடத்துவதே கடினம் என எண்ணும் போது அதிலும் குடும்ப நிலை புரியாது குடிக்கு அடிமையானவன் ரோட்டில் உருளுவதை எப்படி மீட்டெடுப்பது.?

ஓடி ஆடி விளையாண்டு உறவுகளைச் சார்ந்து உறவாடி கூடி மகிழ்ந்து குடும்பமாய், கூட்டமாய் இருந்த காலம்போய் ஆளுக்கு ஒரு அலைபேசியை கையில் வைத்துக்கொண்டு தனியே தடவிக் கொண்டு திரிகிற அடிமைத்தனத்தை எப்படி மீட்டெடுப்பது.?

குழந்தைகளைச் செல்லம் கொடுத்து கெடுத்த காலம்போய் செல்லைக் கொடுத்துக் கெடுத்து வைக்கிற அடிமைகளை என்னவென்று சொல்வது.

படிப்பது எல்லாம் பாரதத் தாயின் மடியில் பணிசெய்வது மட்டும் அந்நிய நாட்டுக் கம்பெனிகளுக்கு என ஓடி ஓடி உறங்காமல் வயிற்றுப் பிழைப்பிற்காய் உழைக்கும் அடிமைத்தனம் நம்மைவிட்டு ஏன் போகவில்லை.?

ஆளுபவன் நல்லவனாக இருந்தால்தான் வாழும் காலம் நன்றாக இருக்கும் என எண்ணத்தெரியாமல் 500க்கும், 1000த்திற்கும் தனது வாக்குறிமையை அடகு வைக்கின்ற அடிமைகளை எவ்வாறு மீட்டெடுப்பது.?

காதலே கண்ணியமாக இருந்த நம் நாட்டில் கள்ளக் காதலுக்கு அடிமையாகி கணவன் மனைவியையும், மனைவி கணவனையும், கூலி அடிமைகளை வைத்துக் கொலை செய்வதை எப்படி அப்புறப்படுத்துவது?

நாட்டு நலனுக்காக நல்ல பல திட்டங்கள் தீட்டி, செயல்முறைக்கு வரும்போது செயலிழந்து போவது போல ஆளுக்கு ஒருபங்காய் ஆள்பவர்களே தனக்குத் தனக்கு என்று ஒதுக்கியும் பதுக்கியும் வைத்துக் கொள்கிற பச்சோந்தி அடிமைகளை எப்படி அப்புறப் படுத்துவது.?

இல்லறம் என்ற நல்லறம் இந்தியாவிற்குக் கிடைத்த தனிவரம் என தரணி புகழ்ந்த காலம் போய் எத்தனை கணவன்? எத்தனையாவது திருமணம் என்று கூடத் தெரியாமல் விவாகரத்துக் கேட்டு வீதியில் நிற்கின்ற பைத்தியங்களுக்கு எப்படி பாடம் நடத்துவது.?

கள்ள உறவுகளைச் சொல்லி விடுமோ எனப் பெற்ற பிள்ளைகளையே கொன்று விடுகின்ற அரக்கிகளாகத் திரிகின்ற அடிமைகளை எப்படி அப்புறப்படுத்துவது.?

விளம்பரங்களைக் கண்டு மயங்கிற அடிமைகள் அழகுகளைக் கண்டு மயங்குகிற அடிமைகள், பேச்சுகளைக் கேட்டு மயங்கி இருப்பதை இழக்கின்ற அடிமைகள், பணம் வாங்கிக் கொண்டு பாடுகள் பார்க்கின்ற கொத்தடிமைகள், கந்து வட்டிக்கு அடிமைகள், பேசாமல் தவிக்கின்ற பெண்ணடிமைகள் 10 போட்டால் 100 கிடைக்கும் என பசப்பு வார்த்தையால் தன் வாழ்வை இழந்த அடிமைகள், சீட்டில், சூதாட்டத்தில் தன் சொத்தை இழந்த அடிமைகள் இப்படி எத்தனை எத்தனையோ அடிமைகள் இதனையெல்லாம் தீர்த்து வைக்க கோவிலுக்குப் போனால் உள்ளே போக விடாமல் தடுகின்ற அடிமைகள். சாமியார்களில் சாதூர்யப் பேச்சினால் கற்பை இழந்த கன்னியர் அடிமைகள், எத்தனை எத்தனையோ அடிமைகள் இருக்கின்ற நாட்டில் எப்படிச் சுதந்திரம் வாங்கி விட்டோம், சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கிறோம் என்று சொல்வது.?

அதனால் தான் மறுபடியும் நான் மகாத்துமாவைப் பார்த்து கேள்வி கேட்கிறேன். “ஒ மகாத்துமாவே உனக்கும் பொய் சொல்லத் தெரியுமோ! சுதந்திரம் வாங்கி விட்டோமென்று சும்மா தானே சொன்னாய்?”

இத்தனை அடிமைகளை நாம் அன்றாடம் சந்தித்துக் கொண்டிருக்கும் போது இன்றும் நாம் தேசியக் கொடியை கம்பீரமாய் ஏற்றி சல்யூட் அடித்து முட்டாயைக் கொடுத்து சரிகட்டிவிடுகிறோம்.

சரிக்கட்டியது போதும் நம் சரிவுகளைக் கொஞ்சம் கட்டி எழுப்புவோம். என் சுதந்திரம் பெரிதல்ல உன் சுதந்திரம் பெரிதல்ல நம் சுதந்திரத்தைக் கட்டிக்காப்போம் ஒன்றிய அரசில் ஒற்றுமையாய் இருப்போம், மதம், சாதியை விட மக்களைப் பெருமையாய் எண்ணுவோம். மக்களாய் இருப்போம், மக்களோடு இருப்போம்.

“ஜெய்ஹிந்த்”