காணும் கடவுள்கள்…

உலகம் முழுவதுமே மயான அமைதியில் பயணித்துக் கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு மனதிலும் மரணபயம் எட்டிப்பார்த்துவிட்டு எழுந்து சென்றிருக்கிறது. காரணம் கொரோனா இரண்டாவது அலை எல்லோரையும் ஒரு உலுக்கு உலுக்கி எடுத்து விட்டுச் சென்றுவிட்டது.

தேர்தல்தான் காரணம். கூட்டம் கூடியதுதான் காரணம். ஆசிரியர்கள்தான் பலிகடா ஆக்கப்பட்டார்கள். எத்தனை உயிர்களை இழந்து விட்டோம் என்ற ஆதங்கங்களும், அவலங்களும் ஆங்காங்கே கேட்டுக் கொண்டே இருந்தது. கண்ணீர் அஞ்சலிப் போஸ்டர்களும் வாட்ஸ் அப்பில் வரும் R.I.P களும் கொஞ்சம் தைரியம் வந்தாலும் குலைநடுங்க வைத்து விடுகின்றது. இப்போது ஒரளவு அலை அடங்கிவிட்டது பயம் தெளிந்துவிட்டது. மக்கள் தங்கள் நடைமுறை வாழ்க்கையில் நடைபோட ஆரம்பித்து விட்டார்கள்.

இந்தக் கொரோனா மக்கள் மத்தியில் ஒரு பெரிய பயத்தை ஏற்படுத்தினாலும் ஒரு மகத்தான மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. மரணம் நிச்சயம். சேமிப்பது அவசியமற்றது. கொடுப்பதினாலும் குறைந்து போய்விடமாட்டோம். கூடுமான வரையில் புண்ணியத்தைத் தேடிக்கொள்வோம் என்ற எண்ணம் அதிகமான பேருக்கு வர ஆரம்பித்துவிட்டது.

அள்ளிக் கொடுத்தவர்கள் பலர், தன்னைக் கொடுத்தவர்கள் சிலர், குழந்தைகள் கூட உண்டியல் காசுகளை அள்ளிக் கொடுத்தனர். ஒரு கல்லூரி மாணவி தன்னிடம் இருந்த ஒற்றைத் தங்கச் சங்கிலியையும் தாரை வார்த்தாள். பல மருத்துவர்கள் துணிந்து நின்று மரணத்தைத் தழுவினார்கள். சில மருத்துவர்கள் தங்கள் திருமணத்தைக் கூட தள்ளி வைத்துவிட்டார்கள். மருத்துவ மனைக்காக வீடுகள் கொடுத்தார்கள் படுக்கை கொடுத்தார்கள். நிறுவனங்களைக் கொடுத்தார்கள் தொழிலதிபர்களும், உயர்ந்த நிலையில் உள்ளவர்களும் தாங்கள் செல்வங்களை அள்ளி அள்ளிக் கொடுத்தார்கள்.

இது எவ்வளவு பெரிய மாற்றம்! இதற்குமுன் 20 வருடங்களை முன்னோக்கிப் பார்த்தால் இலஞ்சம், அபகரிப்பு, வரதட்சனை, வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து, வட்டி, வறுமை எனப் பல கொடுமைகள்தான் கோலோட்சி நின்றது. இதனால் இழப்புகளும் அதிகம் இறப்புகளும் அதிகம். மனிதனை மனிதன் விழுங்குவதற்காக காட்டு விலங்குகளைப் போல் கர்சித்துக் கொண்டு திரிந்தார்கள். அதிலும் அரசுத்துறையும் அரசியல் ஆட்டமும் வாரிச் சுருட்டியதில் பூமியே பாதி புதைந்துபோனது. இவற்றையெல்லாம் மாற்றுவதற்காகப் பூமிக்கு வந்ததுதான் இந்தக் கொரோனா என நான் எண்ணுகிறேன்.

மரணங்கள் நம்மைப் பயமுறுத்தினாலும் மரணத்தின் சராசரி வீதம் குறைவுதான். காரணம் இப்போது வெட்டுக் குத்து, வீதியில் கலவரங்கள் இல்லை. சாதிக் கலவரங்கள் இல்லை சமுதாயக் கூட்டங்களில்லை இவற்றினால் ஏற்படும் இழப்புகளும், இறப்புகளும் இல்லை.

உயர்வாக மதிக்கப்பட்ட வேலைகளும் நிறுவனங்களும் இழுத்துப் பூட்டப்பட்டன. அலட்சியப்படுத்தப்பட்ட விவசாயமும், விவசாயிகளும் தங்கு தடையின்றி தன் பணியைச் செய்து கொண்டிருக்கிறார்கள். குடிசைத் தொழிலையும், பெட்டிக் கடைகளையும் நசுக்கிய மால்கள் எல்லாம் பூட்டப்பட்டு தூசு படிந்து துருப்பிடித்துக் கிடக்கின்றன. மீண்டும் வீதிகளில் கூவி விற்கின்ற சத்தங்கள் காதுக்கு இனிமையாய் கேட்கின்றன. திரையரங்குகள் மூடிக்கிடக்கின்றன உச்ச நட்சத்திரங்கள் முடங்கிக்கிடக்கின்றன. தேவையில்லாத திருவிழாக்களும், ஆடம்பரங்களும் அடக்கி வாசிக்கப்படுகின்றன. ஓடி ஓடி உழைத்தவர்கள் எல்லாம் இப்போதுதான் வீட்டிற்குள் கூடிப்பேசிச் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆடம்பர ஓட்டல்களில் நடத்தப்பட்ட களியாட்டங்களும் பெரிய ஓட்டல்களில் கொட்டப்படும் உணவுகளும் இப்போது கண்ணில் படாதது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.

விளைந்ததையெல்லாம் விற்றுவிட எண்ணியவர்கள் சந்தைகள் இல்லாததால் பக்கத்து வீட்டுக்காரர்களோடு பகிர்ந்து உண்பது பாசத்தை வளர்க்கும் செயலாகும். கொரோனா நோய் இருப்பதனால் எதற்கெடுத்தாலும் மருத்துவமனை செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஏதாவது நோய்வரும் போது இருப்பவன் மருத்துவம் செய்து பிழைத்துக் கொள்வான். இல்லாதவன் மரணமடைவான். இந்த நோய் மட்டுமே வசதியானவர்களை எல்லாம் வாரிச் சுருட்டிவிட்டது. மருத்துவர்களையே மிரட்டிய முரட்டு நோய். இதுவரை மருத்துவரை பணம் பிடுங்குபவர்களாகப் பார்த்தவர்கள் இப்போது அவர்களைத் தெய்வமாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

எவ்வளவு கஷ்டம் வந்தாலும் யாரும் வறுமையில் இறக்கவில்லை விவசாயம் பொய்க்கவில்லை இருப்பதனைக் கொடுத்திட யாரும் தயங்கியதும் இல்லை. கோவில்கள் மூடப்பட்டன மந்திரங்கள் மறக்கபட்டன. ஆனாலும் மனித நேயம் அனைத்து இடங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஓடி ஓடி உணவு வழங்கியவர்கள் எத்தனை பேர்! மருந்துகள் வாங்கிக் கொடுத்த மகான்கள் எத்தனை பேர்! துணிந்து தன்னையே பணயம் வைத்துத் தொண்டு செய்தவர்கள் எத்தனை பேர்! மனிதர்கள் மட்டுமல்ல மற்ற உயிர்களுக்கும் உயிர் கொடுத்தவர்கள் எத்தனை பேர்! சாதி இல்லை, பேதம் இல்லை, அதை விதைக்க நினைத்தவர்களைக் கூட நாம் விரட்டி விட்டோமே! இப்போது எதிரி இல்லை, எதிர்க்கட்சிகள் இல்லை ஒற்றுமையாய் நின்றால்தான் பிழைக்கமுடியும் உழைக்க முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டோம். நல்ல உள்ளங்களை நாடு கண்டுவிட்டது. இன்னும் நல்ல உள்ளங்களை நாடு காணப்போகிறது அது இந்தக் காலகட்டத்தில்தான். நானும் நீங்களும் நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வோம் வாருங்கள் நடைபோடுவோம் நாளைய உலகம் நமது கையிலும் இருக்கட்டும். நல்லதே நடக்கட்டும்!.

“இறக்கும் வரை
இரக்கத்தோடு இருப்போம்”