நானும் யூதாஸ்தான்…

மனிதர்கள் பலர் விரோதிகளால் வீழ்வதைவிட தூரோகிகளால் அழிந்ததே அதிகம். யூதர்கள் வரலாற்றில் யூதாசும் நமது வரலாற்றில் எட்டப்பனும். கிரேக்கத்தில் புருட்டஸ் என்ற வார்த்தையும் காதில் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறது. காட்டிக் கொடுப்பது, கழுத்தை அறுப்பது, பழித்துப் பேசுவது, குழியைப் பறிப்பது, இல்லாது உரைப்பது, பொல்லாங்கு பகர்வது, விட்டு விலகுவது, எதிர்ப்பக்கம் தாவுவது, இல்லாதது சொல்வது, வீண்பழி சுமத்துவது, இவையனைத்தும் ஒருவனை உயிரோடு சித்ரவதை செய்து புதைப்பதற்குச் சமம் இதனைச் செய்பவனை யூதாஸ் என்றும், எட்டப்பன் என்றும் உரைப்பார்கள்.

இப்போது கிறிஸ்தவர்கள் எல்லோருக்கும் தவக்காலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்போது எல்லோர் நாவிலும் யூதாஸ் என்ற வார்த்தை வந்து அமரும் காரணம் அவன்தான் இயேசுவைக் காட்டிக் கொடுத்துவிட்டான் என்று அவனை இழிவாகக் கருதுகிறார்கள்.

காட்டிக் கொடுத்தவர்கள் எல்லாம் யூதாசும் அல்ல, காட்டிக் கொடுப்பதெல்லாம் தீயவைக்கும் அல்ல. இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளிக்க எண்ணியபோது ஒரு சிறுவனைக் காட்டினார்கள். அதனால் அனைவரும் பசியாறினார்கள். கானாவூர் திருமணத்தில் திராட்சை ரசம் தீர்ந்தவுடன் அப்பிரச்சனைக்குத் தீர்வு காண பொறுத்தமான மனிதர் இயேசுதான் என மரியாள் இயேசுவை அடையாளம் காட்டினாள். திருமணம் மகிழ்ச்சியில் முடிந்தது. இரவு விருந்து உண்ண எங்கே இடம்? எனத் தேடும்போது குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்த பெண் அந்த இடத்தைக் காட்டிக் கொடுத்தாள். கனானேயப் பெண் ஒருத்தி தன்னிடம் தண்ணீர் வாங்கிக் குடித்தவர் ஒரு இறைவாக்கினர் என்று ஊருக்கு அவரைக் காட்டிக் கொடுத்தாள். இப்படி எத்தனையோ காட்டிக் கொடுத்தல்கள் விவிலியத்தில் விரவிக் கிடக்கிறது. ஆகவே காட்டிக் கொடுத்தவர்களெல்லாம் மோசமானவர்களும் அல்ல அதனால் யூதாஸ் கேவலமானவரும் அல்ல.

யூதாஸ் இயேசுவின் குழுவோடு இணைந்த ஒரு பிறநாட்டுக்காரன். அவன் ஒரு போராளிக் கூட்டத்தைச் சேர்ந்தவன். அழகானவன், அறிவானவன். பணத்தைக் கட்சிதமாகச் சேகரிக்கவும். சிக்கனமாகச் செலவழிக்கவும் திறமை பெற்றவன். ஆகவேதான் ஒரு பெண் இயேசுவின் பாதத்தில் நறுமணத் தைலத்தால் கழுவும்போது அதன் மணத்தை வைத்தே இதனை இவ்வளவு விலைக்கு விற்கலாம் என்று கூறியவன். அதனால்தான் அவனிடம் பணப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

யூதாசின் திட்டம் என்னவென்றால் கொடுங்கோல் அரசு மாற்றப்பட வேண்டும். அதற்குப் பொறுத்தமானவர் இயேசு. ஏனெனில் நோய்களைக் குணமாக்குகிறார், உணவு வழங்குகிறார். அரசின் தவறுகளை எதிர்த்துக் கேட்கிறார், குருக்களைக் கண்டிக்கிறார், கொள்ளையர்களை விரட்டுகிறார். என் அரசு விரைவில் வரும் அதனை நிறுவுவேன் எனச் சூழுரைக்கிறார். உடனே அவரோடு இருப்பவர்கள் எல்லாம் அதனைத்தான் ஆவலோடு எதிர்ப்பார்க்கிறார்கள். அதனால்தான் அவர்களுள் சிலர் ஆண்டவரே நீர் மாட்சியோடு வரும்போது நான் வலப்புறமும், என் சகோதரன் இடப்புறமும் இருக்க வேண்டும் எனப் போட்டியிடுகிறார்கள்.

ஆனால் அவர்களுக்குள் இருந்த ஏமாற்றம் இறையரசு என்று முழங்குகிறார். ஆனால் இருக்கிற அரசை ஒடுக்கித் தன் அரசை நிறுவாமல் நழுவியே செல்கிறாரே! என ஆதங்கம் அனைவருக்கும் இருந்தது. ஆகவே இரு அரசர்களும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டும் மோத வேண்டும் என சீடர்கள் வழிதேடினர். அதில் யூதாஸ் புத்திசாலி என்பதால் அரசிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு காசைப் பெற்றுக் கொண்டு காட்டிக் கொடுத்தான்.

காட்சி மாறுகிறது. இயேசுவைப் பிடிக்க வருகிறார்கள். இயேசுவோ யாரைத்தேடி வந்தீர்கள்? என்று கேட்டு எந்த எதிர்ப்பும் இல்லாமல் அவர்களுடன் சென்று விடுகிறார். இதனால் சீடர்களுக்கு அதிர்ச்சி! பயம் இது என்ன? இயேசு இப்படிச் செய்துவிட்டாரே? என எண்ணும்போது இயேசு சொல்வது ஒன்றுதான் இறைத்திட்டம் வேறு. மனிதத் திட்டங்கள் வேறு. இறைத்திட்டத்திற்கு மாறாக நடப்பவர்கள் அனைவரும் யூதாஸ்களே!

இயேசு தொடக்கத்திலேயே தன் சாவைப் பற்றிச் சொன்னவுடன் இராயப்பர் மறுக்க “சாத்தானே அப்பாலே போ!” என்றார். யூதாஸ் காட்டிக் கொடுக்க நினைத்தபோது “சாத்தான் அவனுக்குள் புகுந்தான்” என்றார். இறைத்திட்டத்திற்கு மாறாக மனிதர்கள் பலர் சேர்ந்து கொள்கையை மறந்து நல்லவர்களை வீழ்த்தி நன்மையைத் தடுத்தால் அவர்கள் யூதாஸ்களே.

இல்லாது உரைத்து, பொல்லாங்கு பேசி, உண்மையை மறைத்துப் பதவியை அடைய நினைப்பவர்கள் யூதாஸ்களே. கூட இருந்தே குழிபறித்து நல்லவர்களை வீழ்த்தியவர்கள் யூதாசைப் போல கயிற்றில் தொங்கித்தான் மரணத்தைச் சந்திக்க வேண்டும். கூட்டம் இருப்பதால், கொடியைப் பிடித்தவர்கள் சட்டத்தை வளைத்தவர்கள் எல்லாம் சவப்பெட்டியில் அடங்கிப்போனார்கள். சரித்திரத்தில் முடங்கிப் போனார்கள். இவர்களைப் பார்த்துத்தான் இயேசு சொல்கிறார் “இவர்கள் பிறவாது இருந்தால் நலமாக இருக்கும்!”. “இப்போது சொல்லுங்கள் நீங்கள் பிறந்ததால் பூமிக்கு என்ன பயன்? இல்லை நீங்கள் பிறவாமல் இருந்திருந்தால் பூமியும் நல்லவர்களும் நலமாக இருந்திருப்பார்களா? சரி நீங்களும் யூதாஸ் இல்லையே!?”.

“யூதாஸிடம் பணப்பொறுப்பு இருந்தது, தப்பில்லை ஆனால்
பணப் பொறுப்பில் இருப்பவனெல்லாம் யூதாசாகி விடக் கூடாது”.