குழந்தைகளைக் கொன்றுவிடாதீர்கள்!…

இந்தக் கேள்வியை நான் கொலைகாரனிடமோ! குழந்தைகளைக் கடத்துபவர்களிடமோ!, ஆசிரியர்களிடமோ!, காவல்துறையிடமோ! ரௌடிக் கும்பல்களிடமோ! நான் கேட்கவில்லை. பெற்றோர்களிடம்தான் கேட்கிறேன். இன்றையப் பிள்ளைகளைக் கொன்றுவிடாதீர்கள்.

பெற்றோர்களோ! மற்றவர்களோ அதிர்ச்சி அடையவேண்டாம். ஏனென்றால் உங்களது கேள்வி இப்போது எல்லோருக்கும் இருப்பது ஒன்றோ, அல்லது இரண்டோ குழந்தைகள்தான். அதனை எவ்வளவு கண்ணும் கருத்துமாகக் காத்து வேண்டியதையெல்லாம் கொடுத்துக் காப்பாற்றி வருகிறோம். எங்களைப் பார்த்து இந்தக் கேள்விகளைக் கேட்கிறீர்களே! என்பீர்கள், நியாயமானதுதான்.

இவ்வளவு கண்ணும் கருத்துமாக வளர்த்து கடைசியில் கல்வி என்ற அரக்கனிடம் காவு கொடுத்து வருகிறீர்களே! உங்களது கற்பனைகளையும் ஆசைகளையும் வைத்து அவன் கழுத்தை நெறித்து விடுகிறீர்களே! இன்றையப் பிள்ளைகள் புரண்டு படுக்கிற இடங்களே பள்ளியின் திண்ணையாகத்தான் இருக்கும். இன்றையக் காலத்துப் பிள்ளைகள் இறைவனிடம் வரம் கேட்டால்? சாமி! எங்களைப் படித்த பெற்றோர்களிடம் கொடுத்து விடாதே. நாங்கள் பாடாய்ப் படுவோம் எனப்பதறுவார்கள்.

அந்தக் காலத்தில் எல்லாப் பிள்ளைகளும் படிக்காது. விருப்பம் உள்ள பிள்ளைகள் மட்டும் படிக்கும். விருப்பமில்லாத பிள்ளைகள் மற்ற வேலைகளைப் பார்க்கும். பெற்றோர்கள் எண்ணம் எப்படியென்றால் படித்த பிள்ளைகள் விவேகமாகப் பிழைக்கும் மற்றப் பிள்ளைகள் வேலை செய்து பிழைக்கும். பிள்ளைகள் வளர்ச்சியில் பெரிதும் கவலைப்படப் போவதில்லை. ஒருமுறைக்கு இரண்டுமுறை தேர்வில் வெற்றி பெறாத மாணவர்களைப் பார்த்து தகப்பன் வராத சனியனைக் ஏண்டா கட்டிக்கிட்டு அழுவுற! பிடிச்ச வேலையைப் பார்த்துப் பிழைச்சுக்கோ என்பார்கள். இது எவ்வளவு பெரிய ஆற்றுப்படுத்துதல்.

ஒரு ஆசிரியர் பெற்றோரை அழைத்து உங்கள் பையன் இப்போது சரியாகப் படிக்கவில்லை என்று சொன்னால்! சார் அவன் ஏதாவது தப்பு பண்ணிணாச் சொல்லுங்க கண்டிப்போம் படிச்சா படிக்கட்டும் இல்லையென்றால் ஏதாவது வேலை செய்து பிழைக்கட்டும் என்பார்கள். ஏனென்றால் தன் பிள்ளை உயர்ந்த எண்ணங்களில் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டார்களே தவிர உயர்ந்த பதவியில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படவில்லை.

ஆனால் இன்றையப் பெற்றோர்கள் நல்லவனாக வளரவா ஆசைப்படுகிறார்கள்? நல்லாச் சம்பாதிக்கறவனா வளர்க்க ஆசைப்படுகிறார்கள். பள்ளிக்கு வருகிற பெற்றோர்கள் என் குழந்தை ஏன் ஆங்கிலம் பேசவில்லை?. உங்கள் பள்ளியிலேதானே படிக்கிறான் ஏன் மார்க் எடுக்கவில்லை? என்றுதானே கேட்கிறார்கள். இதனால் ஆசிரியர்களும் அதற்கேற்றபடியே கற்றுக் கொடுக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். கடந்த இருபது வருசமா எல்லாப் பெற்றோர்களுக்கும் இஞ்சினியர்களும், டாக்டர்களும் தானே பெரிதாகத் தெரிந்தார்கள்.

ஒரு ஆங்கிலப் பள்ளியில் Project Work என்று குழந்தைகளுக்குக் கொடுக்கிறார். அது ஒரு தேடல், படங்களோ, இறகுகளோ, விதைகளோ, இலைகளோ, சேகரிப்பதாக இருக்கலாம். ஆனால் அவர்கள் கொடுக்கும்போதே. இந்தக் கடையில்போய் சொல்லுங்கள் அவர்கள் கொடுப்பார்கள். அது 300, 500, 1000 ரூபாய்க்கு இருக்கிறது என்பார்கள். அப்படியென்றால் பையன் என்ன நினைக்கிறான். காசு இருந்தால் போதும் எந்த முயற்சியும் எடுக்காமல் என்ன வேண்டுமென்றாலும் சாதிக்கலாம் இதுவா அறிவை வளர்க்கிற கல்வி?

ஒரு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பயங்கரமான வாக்குவாதம் என்னவென்று கேட்டால் Project Work வெள்ளிக்கிழமை கொடுங்கள் அப்போதுதான் நாங்கள் வீட்டில் இருப்போம். செய்வதற்கு எளிதாக இருக்கும் இதுதான் பிள்ளையை வளர்க்கிற இலட்சணம்! ஆனாலும் என்ன கருமமோ அப்படிப்பட்ட பள்ளியில்தான் மாணவர்களைக் கொண்டு கொட்டுகிறார்கள்.

நீட் தேர்வு வந்தது அனிதாவைக் கொன்றது பலபேர் பயந்து இன்று கணிதம், அறிவியல், விருப்பப்பாடம் எடுப்பதே கிடையாது. இல்லையென்றால் இன்று பெற்றோர்கள் எத்தனை குழந்தைகளைக் கொன்றிருப்பார்கள். இன்று பள்ளியில் அதிகமாகப் பணி செய்கிறவர்கள் கணித ஆசிரியர்களும், அறிவியல் ஆசிரியர்களும்தான். பாவம் அவர்களால் கூட, அறிவியல், கணித மாணவர்களை உருவாக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள்.

பிள்ளைகளை விட்டுவிடுங்கள் அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள். விருப்பமில்லாததைச் செய்யச் சொன்னால் பொறுப்பில்லாமலும் வாழ்வார்கள் வெறுப்போடும் வாழ்வார்கள் அவர்களது புள்ளிக்கு நீங்கள் கோலம் போடாதீர்கள் அலங்கோலமாகிவிடும். அவர்கள் வாழ்க்கையில் நீங்கள் வாழதீர்கள். நீங்கள் நினைப்பதை அவர்களிடம் திணிக்காதீர்கள் அவர்கள் விருப்பத்திற்கு வடிகால் அமையுங்கள் வளமான வாழ்வு அமையட்டும் வசந்தம் வீசட்டும்!

“மந்திரத்தால்
மாங்காய்
பழுக்காது!?”