என்ன துணிச்சல் உங்களுக்கு?

How Dare You?

“வாருங்கள் வேட்டையாடுவோம்
விலங்குகளை அல்ல
மனித மாமிசம் சுவைக்கும்
மாபாதகர்களை – நாம்
நரபலி கொடுத்திடுவோம்”

என்ன துணிச்சல் உங்களுக்கு? இது எங்கேயோ கேட்ட குரல்! கண்முன்னே இயற்கை அழிவதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கும் கோழைகளாக உலகத் தலைவர்களையெல்லாம் நினைத்து ஸ்வீடன் நாட்டுப் போராளியான கிரேட்டா தன்பர்க் என்ற 17 வயதுப் பெண் சட்டையைப் பிடித்து சரியாய் கேட்ட கேள்வி இது! அந்த வார்த்தையில் அவள் கோபமும் வேகமும் அவ்வளவு ஆக்ரோசமாக அலறும். அதிரும். இயற்கையைச் சீண்டியதற்கே இவ்வளவு கொதித்தவள், இவள் வயதில் இருக்கும் இளம் பெண்களைச் சீண்டினால் என்ன கொதிப்புக் கொதிப்பாள்? ஏன் ருத்ரத் தாண்டவமே ஆடிவிடுவாள்!

இதே மனநிலையோடு இந்தியாவை ஏறிட்டுப் பாருங்கள் உத்திரபிரதேசத்தில் ஹாத்ராஸ் என்ற நகரில் ஒரு பெண்ணின் பாலியல் வன்கொடுமைச் செயல் வெறும் செய்தியாகவே நம்மைக் கடந்து போகிறதே! நாம் என்ன கேள்வி கேட்டிருக்கிறோம்? இதனை கிரேட்டா தம்பர்க் கேள்வி கேட்டால் எப்படி இருக்கும் நினைத்துப் பாருங்கள்.

பட்டியலினப் பெண்கள் என்றால் எச்சிலைப் பாத்திரமா? கண்ட நாய்களும் காறி உமிழ்ந்து விட்டுப் போக? எங்கிருந்து வந்தது அவர்களுக்கு இந்தத் துணிச்சல்? அந்தக் கொடிய கயவர்களால் குற்றுயிரும் குலையுருமாய்ப் போனவளை எட்டு நாளில் மருத்துவமனையில் வைத்து எதுவுமே செய்யாமல் இறந்த பிறகு யாருக்கும் தெரியாமல் எரியூட்டிய இரக்கமற்ற காவல் துறைக்கு எங்கிருந்து வந்தது இந்தத் துணிச்சல்?

உயர்ந்த சாதி என்ற திமிரில் ஒரு பெண்ணை உருக்குலையச் செய்துவிட்டு உண்மையை உளறிவிடுவாள் என்று அவள் நாக்கை அறுக்குமளவிற்கு அந்த நாதாரிகளுக்கு எங்கிருந்து வந்தது இந்தத் துணிச்சல்?

தனது மரணத்திலும் உண்மை செத்துவிடக் கூடாது என்று அப்பெண் உண்மையை உறைத்த போதும் அந்தக் கருப்புச் சட்டைக்காரன் ஊடகங்கள் எல்லாம் ஒடிவிடும் நாளை எங்களிடம் தான் வரணும்! என்று விசத்தைக் கக்கிய அந்த வேடதாரிகளுக்கு எங்கிருந்து வந்தது இந்தத் துணிச்சல்?

ஊடகங்களும், சமூகவியலாளர்களும் உண்மையைக் கண்டறிய ஊருக்குள் செல்லும்போது தடுத்து நிறுத்திய அந்தத் தரித்திரம் பிடித்தவர்களுக்கு எங்கிருந்து வந்தது இந்தத் துணிச்சல்?

ஒன்று கேட்கிறேன் உண்மையைப் புதைக்க இவ்வளவு உழைக்கின்ற கைக்கூலிகளே! உங்கள் வீட்டில் பெண் குழந்தைகளே இல்லையா? இல்லை எங்கள் வீட்டுப் பிள்ளைக்கு இது நடக்கவில்லை என்று எகத்தாளத்தில் இருக்கிறீர்களா?

அனைவருக்கும் ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன் பட்டியலினப் பெண்தானே என்று பதராமல் இருந்து விடாதீர்கள் இந்தப் பட்டியலில் நீங்களும் நானும் வருவதற்கு நெடுநாள் இல்லை, வெறிநாய் ஒன்று வீதியில் யாரையோ கடித்துவிட்டது என்று வீட்டில் பத்திரமாய் இருப்பவர்களே அது வீட்டுக்குள்ளும் நுழைவதற்கு வெகுகாலம் இல்லை, அந்த நாள் வரும்பொழுது உங்களால் ஓடவும் முடியாது ஒதுங்கவும் முடியாது.

பெண் குழந்தையைப் பெற்றவர்கள் அடி மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருப்பதுபோல என்பார்கள் நாம் அடிமடியில் வைக்க வேண்டியதல்ல நெருப்பை. நம்மைத் தொட்டால் நெருப்பை தொட்டவன் மடியில் வைக்க வேண்டும். பிஞ்சுகளைக் கசக்கிற கயவர்களின்…. அறுத்தெரிய வேண்டும். இது வன்முறையல்ல வரைமுறையாக இருக்கவேண்டும்.

பெண் குழந்தையைப் பெற்றவர்கள் அதனைப் பேணிக்காக்கப் போராளிகளாக வேண்டும். ஆணுக்கு ஒரு மனசு என்றால் பெண்ணுக்கு இரண்டு மனசு. குழந்தைகளைச் சுமக்கும் கருப்பையும் பெண்ணுக்கு ஒரு மனசுதான். ஆகவே குழந்தைகளைச் சுமக்கும் தாய்மார்களே உங்கள் குரல்கள்தான் வக்கீலாக வாதாட வேண்டும். உங்கள் கரங்கள் தீர்ப்பெழுதி நிறைவேற்ற வேண்டும். பெண்ணைத் தீண்டுபவனுக்கு மண்தோண்டப்படும் நிச்சயம்.

இனி மூடி மறைப்பதற்கு ஒன்றுமில்லை முக்காடு போட்டு அழுவதற்கும் நேரமில்லை எங்கெங்கு பாலியல் வன்முறை என்று பேச்சு வருகிறதோ! அங்கெல்லாம் நீதி கிடைக்கும் வரை உங்கள் போராட்டம் நிலைக்க வேண்டும்.

பல்வேறு தாய்மார்கள் தாங்கள் குழந்தைகளைப் பற்றி எதுவும் தெரியாமல் அவன் குற்றச் செயல்களில் கையும் களவுமாகப் பிடிபட்டபோதும் என்பிள்ளை இப்படிப் பண்ணியிருக்கவே மாட்டான் என்று வரட்டுக் கௌவரவத்தில் வாதாடும் பெற்றோர்களே நீங்கள் பிறவாது இருந்திருத்தல் இந்தப் பூமி நலமாக இருந்திருக்கும்.

இலக்கியத்தில் ஒரு தாய் தன்மகன் போர்க்களத்தில் புறமுதுகிட்டான் என்று கூறியவுடன் அவன் அப்படி இறந்தால்! அவன் பாலுண்ட மார்பை அறுத்தெறிவேன் என்றாள். அதேபோல் தான் இன்று என்மகன் ஒரு பெண் குழந்தைக்குத் தீங்கு செய்தால் தன் மார்பையல்ல மகனையே அறுத்தெரிகின்ற வீரப்பெண்மணிகள் வேண்டும் இந்தப் பூமிக்கு!

நாட்டுக்கு வெளியே ஒருபிடி மண்ணைத் தொடுகிற அயல் நாட்டினைக் கண்டு கொதித்தெழுகிற என் தேசமே. நாட்டுக்குள் என்பெண்ணைத் தொடும்போது மட்டும் ஏன் மௌனமாகிறாய்? மயானமாகிறாய்? கொதித்தெழு! கூட்டமாய் எழு!

“இந்தியத் தாயே
இறந்த என் மகளை மீண்டும்
பெண்ணாகக் கொடு! – இல்லை
அந்தக் கயவர்களை மண்ணாகக் கொடு?”

“பெண் குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு என் வலி தெரியும் என் மொழி புரியும்”