சகோ. ஜேம்ஸ் இளங்கோ தி.இ.ச தலைமையாசிரியர்
புனித சூசையப்பர் துவக்கப்பள்ளி விக்கிரமசிங்கபுரம்
“மரணத்தை நீங்கள்
சந்திக்கிறீர்களோ! இல்லையோ
மரணம் உங்களைச்
சத்தித்தே ஆகும்”
ஏன் இந்த அவசரம்? எதற்கு இந்த வேகம் மரணத்தை முத்தமிட அசூர வேகத்தில் பறந்தது ஏன்?
காலையில் எங்களோடு கௌசானல் சுவாமியின் பிறந்த நாள் கொண்டாட்டம். மதிய உணவு நேரத்தில் மனமகிழ்ந்து பேசியது. இரவு உணவு நேரத்தில் தான் நெஞ்சு எரிகிறது என்றாய். பின்பு வழக்கம் போல் நீங்களே மருத்துவம் பார்த்துக் கொள்கிறீர்கள்.
10 மணிக்குமேல் படபடப்பாக இருக்கிறது என்றீர்கள் சரி பார்த்துக் கொள்ளலாம் என்றீர்கள். பிறகு சகோ. ஜெயக்குமாருடன் மருத்துவமனைக்குச் சென்றீர்கள். அங்குதான் உங்களுக்கே உடல் நோவின் உண்மை புரிந்தது. அங்கு கடினம் என்றவுடன் அம்பையை நோக்கி உங்கள் பயணம்.
அப்போது நேரம் இரவு 11மணியைக் கடந்து விட்டது. அத்தனை சகோதரர்களின் அலைபேசியும் அலற ஆரம்பித்து விட்டது. இரவில் உறக்கத்தின் பிடியில் இருந்தவர்களை எழுப்பிச் சொல்லப்பட்ட செய்தி சகோ. இளங்கோ நிரந்தரமாக உறங்கிவிட்டார் என்பதுதான். தூக்கக் கலக்கத்தில் இருந்தவர்களுக்கெல்லாம் இந்தத் துக்க செய்தி சொப்பனத்தில் நடக்கிறதோ என எண்ணும் போது இது சொர்க்கத்தில் நடந்து கொண்டு இருந்தது. ஆம் சகோதரர் விண்ணகத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தார்.
இருக்கும்போதும் அவரைச் சுற்றிச் சகோதரர்கள் இருந்து கொண்டு இருப்பது போல இறக்கும்போதும் அவரைச் சுற்றிச் சகோதரர்கள் இருந்து கொண்டுதான் இருந்தார்கள் நேரம் ஆக ஆக நெஞ்சப் படபடப்பு சகோதரர்களுக்கு அதிகமாகியது.
நடந்துதான் மருத்துவமனைக்குச் சென்றீர்கள். உள்ளுரில் முதலுதவி. பின்பு அடுத்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது நீங்கள் பேசிய கடைசி வார்த்தை “எங்கடா என்னைக் கூட்டிக்கிட்டுப் போகிறீர்கள்” என்பது தான். அதன் பிறகு உங்களைக் கொண்டுபோகவில்லை உங்கள் உடம்பைத்தான் கொண்டு போனோம். கையில் உங்களைத் தாங்கிக் கொண்டு சகோதரர்கள் அருகிலிருக்க உடலை மட்டும் அவர்களிடம் கொடுத்துவிட்டு உங்கள் உயிர் பறந்து போவதை சகோதரர்கள் கண்முன்னே கண்டு காப்பாற்ற முடியவில்லையே என்று கலங்கித்தான் போனார்கள் கண்முன்னே உங்கள் உயிர் கரைந்து போவதைக் கண்டு துடித்துப் போனார்கள்.
இரவு நேரம் இயற்கையே மௌனத்தில் இருக்கும்போது நீங்கள் மயானத்தை நோக்கிப் பயணம். தெரிந்த அலைபேசிகளில் எல்லாம் இந்த செய்தி இடியாக இறங்குகிறது. கண்ணால் பார்க்கின்ற அத்தனை இதயங்களும் துடிக்க மறந்து துயரத்தில் விழுகிறது. சபைத்தலைவருக்குச் செய்தியை அறிவிக்க சகோதரர் செங்கோல் அலைபேசியில் அழைக்க, தாங்க முடியாத வலியால், கண்ணில் தடுக்க முடியாத துளிகள் விழிகளிலிருந்த வேதனைத் துளிகள் விழலாமா? வேண்டாமா? என்று வெளிவர முடியாமலும் வழிந்தோட முடியாமலும் கண்களின் ஒரத்தில் நிற்க கனத்த இதயத்தோடு கடத்துகிறார் இச்செய்தியை
பாஸ், பாஸ் என்று அன்போடு அழைக்கும் எங்கள் சகோதரர் எங்களை விட்டும் பாஸாகிவிட்டார். நாங்கள் தோல்வியடைந்து விட்டோம். எங்களுக்கு இந்த மரணம் சொன்ன ஒரே பாடம். இதுதான் வாழ்க்கை இதுதான் பயணம். ஒவ்வொரு நித்திரையும், நிரந்தர நித்திரைக்கான ஒத்திகை ஆகும்.
வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் முடியலாம் எப்படி வேண்டுமானாலும் முடியலாம். அதற்குள் நம் வாழ்க்கையை நாம் விரும்புவதுபோல் வாழ்ந்து பார்ப்போம். அவர் சொல்வார், இவர் இப்படி சொல்வார் என்று பயந்து உங்கள் பாசத்தை பதுக்கி விடாதீர்கள். உலகம் ஆயிரம் பேசிவிடும் என்று உள்ளுக்குள்ளே நொந்து நூலாகிவிடாதீர்கள். உங்கள் வாழ்ககை உங்கள் கையில் அதில் இன்று மட்டுமே உங்களுக்கு உரியது இன்றைய நாளை இனிய நாளாக்குங்கள்.
நாளை என்ன நடக்குமோ? என்ற கவலை நமக்கெதற்கு? நாளைக்கு என்று ஒதுக்குபவர்களும், பதுக்குபவர்களும் தான். ஏழைகள் வயிற்றில் அடிப்பவர்கள். இருக்கும்போதே அனைத்தையும் கொடுத்த எம்.ஜி.ஆர், அன்னைத்தெரசாள் போன்றவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் கோடி கோடியாய் பொருள் தேடி வைத்திருந்தாலும், கொரோனாவின் பிடியில் மடிந்துதானே போனார்கள். நோயைக் குணமாக்கும் மருத்துவர்களே மடிந்து தானே போகிறார்கள். எனவே எதிர்காலம் குறித்த பயமோ, இறந்த காலம் குறித்த கவலையோ இன்றி நடப்பது நன்மைக்கே. ஒவ்வொன்றும் அனுபவமோ என எண்ணி வாழுங்கள்.
இறந்தவர்கள் வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள். நமக்குக் கொடுக்கப்பட்ட வாழ்க்கையில் அன்பு செய்வதற்கே காலம் போதாது வெறுப்புக்கு இங்கு வேலையே இல்லையே. இன்று என் சகோதரர் போய்விட்டார் நாளை நான்தான். யாரும் எதிர்ப்பார்க்காமல் திடிரென்று அவர் பிரிவு இருந்ததால் எல்லோரும் அதிர்ச்சியாகிவிட்டோம். இருப்பினும் நமக்குக் கொடுக்கப்பட்ட காலத்தில் எத்தனை பேர் மீது அன்பைப் பொழிகிறோமோ அவர்கள் நாம் இறக்கும்போது கண்ணீர் வடிப்பார்கள். ஆகவே நாம் இருக்கும்வரை யாரையும் கண்ணீர் சிந்தாமல் பார்த்துக் கொள்வோம். நாம் கண்ணீர் சிந்தும் அளவிற்கு அன்பைப் பொழிந்தவரை நினைத்துக் கொள்வோம் இப்போது என் சகோதரனுக்காய் இதய அஞ்சலி.
“காடு வெட்டித் தோட்டமிட்டேன்
கண்ணீராலே பயிர் வளர்த்தேன்
தோட்டத்தை அழித்தாயடா – இறைவா
ஆட்டத்தை முடித்தாயடா.’
இவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்