பொறுத்தது பூமி பொறுக்கல சாமி

“நீ நீராய் இருக்கக் கற்றுக்கொள்!”
“ஒதுங்கிச் செல்லவும் தெரிய வேண்டும்!”
“தேவைப்பட்டால் உடைத்துக் கொண்டு செல்லவும் தெரிய வேண்டும்!”

பூமி புரண்டு கிடக்கிறது. புவிவாழ் மனிதன் அரண்டு கிடக்கிறான். கெத்தாய் திரிந்த மனிதர்கள் எல்லாம் கொத்துக் கொத்தாய் மடிகிறார்கள். ஆனால் பூமியில் போர்கள் இல்லை, பூகம்பம் இல்லை, கடும் புயல்கள் இல்லை, கொடும் வெயில்கள் இல்லை, பஞ்சம் பட்டினி இல்லை. கண்ணுக்குத் தெரியாத வைரஸ் கிருமி ஒன்று மனிதனோடு கண்ணாமூச்சி ஆடுகிறது. இதனை ஒரு பெரிய பேரிடர் என்று சொல்லலாமா?

என்னைப் பொறுத்தவரையில் பூமி முழுவதும் பாதிக்கப்பட்டால்தானே பேரிடர் என்று சொல்லலாம், மழை பெய்கிறது, பயிர் விளைகிறது, உயிர்கள் வளர்கிறது, பறவைகள் பாடித்திரிகிறது, விலங்குகள் சுதந்திரமாய்த் திரிகிறது. மனிதன் மட்டும் மரணத்தோடு போராடுகிறான். செய்த பாவங்கள் அவனைச் சிறையிலடைத்திருக்கிறது. மரண தண்டனை கொடுத்து இருக்கிறது.

படைப்பின் சிகரம் மனிதன் என்கிறது ஆன்மீகம். பகுத்தறிவாளன் என்கிறது நாத்தீகம். நடைமுறை நாகரீகத்தில் சுயநலத்தால் சுருண்டு, பூமியைச் சுரண்டி இயற்கையை அழித்து தன் வாழ்வைத் தானே அழித்துத் தற்கொலை செய்துகொண்டான் மனிதன்.

சிறுபஞ்சமூலம் என்னும் நூலில் எவனொருவன் குளம் வெட்டி, வழிந்தோடும் வாய்க்கால் அமைத்து, கிணறுவெட்டி, பயிர் விளைவித்து, மரம் நடுபவன் சொர்க்கத்துக்குச் செல்வான் என்று எழுதப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரையில் இவையெல்லாம் செய்பவன் இருக்குமிடமே சொர்க்கம் தான். அவனே இயற்கையின் கடவுள்.

தமிழர்களுக்கு எப்போதும் இயற்கைதான் கடவுள். சூரியன், மழை, கிணறு போன்றவைக் கடவுளாகவும், வேப்பமரம், ஆலமரம், அரசமரம் போன்றவை இறைவன் அமர்ந்திருக்கும் கோயிலாகவும், யானை, சிங்கம், புலி, சேவல், மயில், பருந்து, எலி, மாடு, குதிரை போன்றவைகளை இறைவனின் வாகனமாகவும் வணங்கி வந்தான். எப்போது மனிதனுக்குப் பேராசை வந்ததோ! எப்போது சுயநலம் புகுந்ததோ! அப்போதே அழிவுப்பாதைக்குச் சென்று விட்டான். அவன் புதைகுழியை அவனே தோண்டிக் கொண்டான்.

சிறுபஞ்சமூலம் நூலில் இயற்கையை அழிப்பவனைப் பற்றிச் சொல்லவில்லை. ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் மனிதன் இவற்றையெல்லாம் அழிப்பான் என கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. இயற்கையை அழிப்பவன் நரகத்திற்குப் போக மாட்டான். அவன் இருக்குமிடமே நரகம்தான். நாகரீக வளர்ச்சியில் நகரம் அமைக்கிறார்கள் என்று பார்த்தால் அவர்கள் இன்று ஒரு நரகத்தைத்தான் அமைத்திருக்கிறார்கள்.

மலைகளை அழித்தான், மரங்களை வெட்டினான், பறவைகளை ஒடுக்கினான், விலங்குகளை விரட்டடினான், விளைநிலங்களை அழித்தான், குளங்களை ஒழித்தான், நீர்நிலைகளைத் தடுத்தான், விவசாயம் மறந்தான் முடிவும் விடிவும் ஒன்றுதான். மனிதன் கண்களை விற்று ஒவியம் வாங்கி கையில் வைத்திருக்கிறான். யாருக்கு என்ன பயன்?

பாட்டி வைத்தியத்தில் இல்லாத மருந்தா? இந்த பாரில் கிடைத்துவிடப் போகிறது? இப்போது மருந்துக்கு மடிப்பிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள். கையில் வெண்ணையை வைத்திருந்தவர்கள் இன்று நெய்க்கு அலைகிறார்கள். பாவம் பகட்டான வாழ்ககை இருட்டுக்குள் தள்ளிவிட்டது.

இயற்கையில் இறைவன் இருக்கிறான் என்பதனை மறந்து அழித்தோம். இப்போது இயற்கை எழுந்து அழிக்கிறது. இயற்கையை அழித்தவர்களை மட்டும் அழிக்கவில்லை. அதனை எதிர்த்துக் கேட்காதவர்கள, நமக்கேன் வம்பு என்று ஒதுங்கியவர்கள் அத்தனை பேரையும் இன்று காவு வாங்கிக் கொண்டிருக்கிறது.

மரணம் நம்மைத்தேடி வரும், நாம் மரணத்தைத் தேடி ஓடலாமா? இறைவன் விடுகின்ற எச்சரிக்கை இது. இதற்கு ஒரே வழி போதும் என்ற மனம் வேண்டும். தேவைக்கு மேல் திருடவும் வேண்டாம், திரட்டவும் வேண்டாம். அடுத்தவர்கள் பொருளை அபகரிக்க வேண்டாம். பணம் பொருளை பதுக்க வேண்டாம். பணக்கார வேசம் பூமியில் வேண்டாம் இருப்பதை பகிர்வோம். இறைவனோடு பேச வேண்டுமென்றால் இயற்கையைப் பேணுவோம். இனியும் மாறவில்லையென்றால் எவரையும் அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.