சதுரங்க வேட்டை

சதுரங்கம் என்பது ஒரு விளையாட்டு, மனிதன் தன் வாழ்வின் தேவைக்குச் சேமிப்பு வைக்கத் தொடங்கிய நாளிலிருந்து கிடைக்கும் ஓய்வினை அவன் இன்பமாகக் களிக்க ஏற்படுத்திய இன்னொரு நாகரீகம் விளையாட்டு. விளையாட்டு என்பது பொழுதுபோக்கிற்காகக் கண்டுபிடித்த புதிய போர்முறை. இங்கு ஆடு, புலி ஆட்டம் உண்டு, தாயக் கட்டம் தாண்டல் உண்டு. வெட்டு, குத்து விறுவிறுப்பு ஆட்டம் உண்டு. இங்கு ஆயுதங்கள் இருக்காது, இரத்தம் தெரிக்காது போர்கள் நடக்கும்.

ஊருக்குப் பொதுவான மண்டபங்களில் எப்போதுமே தாயக் கட்டங்கள் வரைந்து இருக்கும் ஊருக்குப் பொதுவான மரத்தின் நிழலில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டு விளையாட்டுகள் அரங்கேறும். விடுமுறை நாட்களிலும், நாடும், காடும் செழிப்பான நேரங்களிலும் பொழுது போக்குகள் அதிகமாக அதிகமாக விளையாட்டுகளின் ஆர்வமும் நேரமும் அதிகரிக்கும். விளையாடுபவர்களின் எண்ணிக்கையைவிட வேடிக்கை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். அருகிலிருப்பவர்கள் ஆலோசனை வழங்குவார்கள் ஆர்ப்பரிப்பார்கள் ஊரே கேட்குமளவிற்கு உரக்கச் சத்தமிடுவார்கள் சவால் விடுவார்கள் மொத்தத்தில் ஒரு யுத்தமே அங்கு அரங்கேறும்.

இருபது ஆண்டுகளுக்கு முன் கிராமத்தில் நான் கண்ட காட்சி இது. சிலர் சீட்டும், விளையாடுவார்கள் பெண்கள் வீட்டுக்குள்ளேயே தட்டாங்கல், பல்லாங்குழி என விளையாடுவார்கள் விளையாட்டில் அவ்வளவு எளிதில் யாரையும் யாரும் வென்றுவிட முடியாது.

ஏனென்றால் விளையாட்டில் வெற்றியடைய முதலில் துணிச்சல் வேண்டும், சரியான முடிவெடுக்கத் தெரிய வேண்டும் சில நேரங்களில் சூழ்ச்சி வேண்டும் காலங்களைக் கணித்து ஆட வேண்டும் இது எல்லாம் விளையாட்டுதான் என்றாலும் இது மூளைக்கு முக்கியமான ஒன்று ஏனென்றால் இத்தனையும் வாழ்க்கைக்குத் தேவையானது ஆனால் விளையாட்டில் ஒருவேளை தோல்வியைத் தழுவினாலும் அது வாழ்க்கையில் வெற்றியடைய வழிவகுத்து விடும்.

கிராமங்களில் தனி விளையாட்டை விட குழு விளையாட்டுக்கள் அதிகமாக இருந்தது இதனால் தியாகம், விட்டுக் கொடுத்தல், ஆலோசனை வழங்குதல் பிறருக்கு உதவுதல், வெற்றி, தோல்விகளைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளுதல் போன்றவை சாதரணமாக அரங்கேறக் கூடிய ஒன்று இதனால் வெற்றி தலைக் கனத்தையும் கொடுக்கவில்லை தோல்வி அவமானத்திலும் வீழ்த்தவில்லை. இன்னும் இன்னும் போராட வேண்டும் என்ற எண்ணத்தைத்தான் தந்தது.

இந்த குழுவிளையாட்டு என்னை தனிமையாக விடவில்லை எப்போதும் எனது குழுவுக்கு ஆள் வேண்டும் என்று பிறரோடு நான் அன்பாக இருக்க வழிவகுத்தது.

பிறரோடு எப்போதும் இருப்பதால் தனிமை யாரையும் தொட்டதும் இல்லை தற்கொலைக்கு யாரையும் விட்டதும் இல்லை. குழுவாக இருந்தால் தான் விளையாட முடியும் என்ற எண்ணம் எப்போதும் இருப்பதால் பிறரை எப்போதும் சுமையாகப் பிரித்துப் பார்த்ததில்லை. இதனால் அந்தத் தலைமுறைகள் அத்தனையும் தனிக்குடித்தனத்தை நாடியதே இல்லை. எப்போதும் கூட்டுக் குடும்பமாகக் கொடி கட்டிப் பறந்தார்கள்.
எப்போது இந்த விளையாட்டுக்களைத் தொலைத்தோம்? என்று நினைவில் இல்லை யார் தொலைத்தார்கள்? என்று சொல்லவும் முடியவில்லை. குழந்தைகள் விளையாட மறந்து விட்டார்களா? என்றால் குழந்தைகள் விளையாடும் அளவிற்கு உடற்தகுதி இருக்கிறதா? என்ற கேள்வி எழும்புகிறது. காரணம் பள்ளிக்குக் கூட நடந்து போகத் தெரியாத, புத்தகங்களைக் கூட சுமக்க இயலாத மாற்றுத் திறனாளியாக அக்குழந்தைகளை மாற்றப் பயிற்சி நடப்பது போல இன்றையச் சமூகம் குழந்தைகள் மீது இரக்கப்படுகிறது.

சரி பெற்றோர்கள் தான் விளையாட்டை தொலைக்க வைத்தார்களா? என்ற கேள்வியும் எழும்புகிறது காரணம் எந்தப் பெற்றோர்களும் தன் குழந்தையை விளையாட்டு வீரனாகப் பார்க்க ஆசைப்படுவதில்லை. எப்போது பார்த்தாலும் படி, படி என்று அவனைப் பாடாய் படுத்துவதிலேயே குறியாய் இருப்பார்கள் படிக்க வேண்டும் இதற்காக நடிக்கக் கூடாது விளையாடக் கூடாது, ஆடி விடக் கூடாது, பாடிவிடக் கூடாது என்று பாதுகாப்பாய் பெற்றோர்கள் பாதுகாத்துக் கொள்வார்கள். பள்ளி நேரம் கடந்தும் தனிப் படிப்பு என்று அவனுடைய அத்தனை நேரங்களையும் களவாடி விடுவார்கள். பாவம் இந்தத் தலைமுறை செய்த பாவம் இப்போ இருப்பவர்களுக்குப் பிள்ளையாய் பிறந்ததுதான்.

அதனைக் கடந்து பள்ளிகளுக்குச் சென்றால் விளையாட்டுப் பாடவேளை தொடக்கத்தில் இருக்கும். காலம் செல்லச் செல்ல காலாவதியாகிவிடும் கடைசியில் கால அட்டவணையில் மட்டுமே விளையாட்டு இருக்கும். விளையாட்டுத் திடல் புதர் மண்டிக் கிடக்கும் மறந்தும் மாணவன் அங்கு சென்று விடாமல் மற்ற ஆசிரியர்கள் பார்த்துக் கொள்வார்கள். பெற்றோர்கள் இந்த நடவடிக்கைகளுக்குப் பக்காவாக பக்கவாத்தியம் வாசிப்பார்கள்.

இதனால் இந்தத் தலைமுறை விளையாட்டையும் விடமுடியாமல் வெளியிலும் சொல்ல முடியாமல் கல்வி அடிமைகளாகக் கால்கள் கட்டப்பட்டுக் கிடக்கிறது. இதனால் குழந்தைகள் என்ன செய்வது என்று தெரியாமல் செல் விளையாட்டுகளில் சிக்கிக் கொண்டு சிதைந்து கிடக்கிறது.

அரசாங்கம் குடும்பங்களை குடிக்கச் சொல்லி கடைதிறக்கிறது பிள்ளைகளை ஆங்கிலம் படிக்கச் சொல்லி பள்ளிகளைத் திறந்துவிட்டிருக்கிறது இந்த இரண்டு போதைகள் இன்று சமூகத்துக்குள் அத்து மீறி நடந்து ஆட்டம் போட வைக்கிறது. ஆட்டம் காணவும் வைத்து விட்டது. இந்த இரண்டிலுமே தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு செலவழித்த குடும்பங்கள் இன்று நடுத்தெருவில் நிற்கிறது. குடிக்கக் காசில்லாதவன் வீதியில் நிற்கிறான். படிக்க பீஸ் இல்லாதவர் பாதியில் நிற்கிறான் இருவருமே அவமானப்பட்டு இடையில் நிற்கிறார்கள்.

பெற்றோர்களே, ஆசிரியர்களே சமூதாயமே அடுத்த தலைமுறையை வளர்த்தெடுக்க வேண்டியவர்கள் நீங்கள்தான். அது வளரும் தலைமுறை, அதற்கு என்று ஒரு வாழ்க்கை இருக்கிறது அதற்குள் நீங்கள் ஊடுருவாதீர்கள். அவர்களை அவர்களாக வாழ விடுங்கள். உங்கள் கனவுகள், இலட்சியங்களை ஒருபோதும் அவர்களிடம் திணிக்காதீர்கள். பெற்றோர்களே இல்லாத குழந்தைகள், பள்ளிக்கே வராத குழந்தைகள் கூட இங்கு மேதைகளாக மின்னுகிறார்கள் ஆனால் உங்கள் உருவாக்கத்தில் ஆங்காங்கே பல குற்றவாளிகள் தென்படுகிறார்களே காரணம் என்ன? அவர்களின் உணர்வுகள் மதிக்கப்படாமல் மழுங்கடிக்கப்பட்டு விட்டது. என் குழந்தை, என் குழந்தை என்றும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் சொல்லுகிறோமே தவிர அவன் வளர்ந்த பிறகு நம்மை ஏறெடுத்துப் பார்ப்பது இல்லை? எல்லாக் குற்றமுமே அவனைச் சார்ந்ததுதானா? நாம் நிரபராதிகளா! நம்புவார்களா!

ஆகவே இச்சமூகத்தில் அனைவருமே தீராத வேட்கை கொண்ட வேட்டைக்காரர்களாக மாறிவிட்டார்கள் பெற்றோர்களின் கனவு நிறைவேற வேண்டும். கல்வி நிறுவனங்களில் வெற்றி தொடர வேண்டும். தோல்வியோ, சறுக்கலோ வந்துவிட்டால் தாங்க முடியாததாக எண்ணிக் கொண்டு தீராத பசியோடு அலைந்து கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்கள், நிறுவனம், சமூகம் என் நாற்புரமும் கிளம்பிவிட்டார்கள் ஆனால் வேட்டையாடப்படுவது மட்டும் இத்தலைமுறைக் குழந்தைகளே! என்று தீரும் இந்த சதுரங்க வேட்டை… என்ற ஏக்கத்தோடு உங்களோடு நான்….