ஏற்றுங்கள் தேசியக் கொடியை….

ஆகஸ்டு மாதம் பிறந்துவிட்டாலே மனதிற்குள் ஒரு மணி அடிக்கும். அது என்னவென்றால் புரட்சி, போராட்டம், சுதந்திரம், விடுதலை, போராளிகள், தியாகிகள் என்ற வார்த்தைகள் வெள்ளையர்களைச் சொல்லி சொல்லி, நமது ரத்த அணுக்களில் சுதந்திர வேட்கையையும், போராளிகளின் வாழ்க்கையையும், முழக்கமாகவும், கவிதையாகவும், அனல் பறக்கும் நாடகமாகவும், கனல் தெறிக்கும் குறும்படங்களாகவும் காட்டிக் காட்டிக் காலத்தைக் கடத்தி வருகிறோம். ஆனால் நடைமுறையில் நாமெல்லோரும் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு இருக்கின்றோமா? நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்.

இல்லாத ஒன்றை இப்போதும் மாயையாக வைத்துக்கொண்டு வெள்ளையனை வெளியேற்றியதைப் பற்றியே பேசிக்கொண்டு இருக்கின்றோமே இப்போது கொள்ளையர்கள் வந்து நமக்குள் குடிபுகுந்து கோலோச்சிக் கொண்டிருக்கிறார்களே இந்தக் கொடுமையை என்னவென்று சொல்லுவது வெள்ளையர்கள் வியாபாரத்திற்காக வந்து அடிமையாக்கி விட்டார்கள் என்று வியாக்கினம் பேசினோமே! இப்போதும் வியாபாரிகள் தானே நம்மை அடிமையாக்கி வைத்து இருக்கிறார்கள்.

நம்மை அடிமைப்படுத்த ஆயுதங்கள் எடுத்து ஆர்ப்பரித்து வரவில்லை. ஊடகங்கள் வழியாக ஊடுருவிவிட்டார்கள் அவர்கள் கணைகள் எடுத்து ஏவி கண்டம் விட்டுக்கண்டம் பாய்ந்து நம் கழுத்தை நெறிக்கவில்லை விளம்பரங்கள் மூலம் நம் வீட்டுக்குள் புகுந்து நம்மை வெறுமையாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

வெள்ளையர்கள் வியாபாரத்திற்காக வந்து நம் வளங்களைச் சுரண்டிவிட்டார்கள் என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தோமே! இப்போது வியாபாரிகள் வெள்ளையர்களாகி வளங்களையெல்லாம் சுரண்டிக்கொண்டிருக்கிறார்கள். மீத்தேன், கார்பன் எடுப்பதற்காக எட்டுவழிச்சாலை போடுகிறேன் என வளங்களையெல்லாம் சுரண்டி எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் இதையெல்லாம் தடுக்க முடியாமல் சுரணையற்ற கூட்டமாகச் சுற்றிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் வெட்கமில்லாமல் சுதந்திரம் வாங்கிவிட்டோமென்று கொடியேற்றி குசியாகிவிடுகிறோம். இந்த ஏமாளிகளை என்னவென்று சொல்வது ஜாலியன் வாலாபக் படுகொலை, ஜெனரல் டயர் சுட்டு வீழ்த்திவிட்டான் என மார்பு புடைக்க நெஞ்சு வெடிக்க உரையாற்றுவோமே அருகில் தூத்துக்குடியில் 13 பேரைச் சுட்டு வீழ்த்தி இன்னும் சுதந்திரமாய் திரிந்து கொண்டு இருக்கிறார்களே அவர்களை எதிர்த்து மூச்சு விடுகிறீர்களா? இல்லை முனங்கிக்கொண்டு இருக்கிறீர்களா? டையர், டையர் என்று தனது காதுகிழிய கத்துனீர்களே இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற பயரி(ங்) என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?

கொடிகாத்த குமரன் கொடியைத் தூக்கிக்கொண்டு ஊர்வலமாகப் போனதால் காவலர்களால் தாக்குண்டு மண்டை உடைந்து இறந்தான் என்று தேசப்பற்றுக்குத்தீனி போட்டுக் கொண்டு இருந்தோமே. இன்று சுற்றுச்சுழலைக் காக்கப் போராடிக்கொண்டு இருக்கிற முகிலனை என்ன நிலையில் வைத்திருக்கிறோம் சில நாட்கள் காணாமல் ஆக்கிவிட்டார்கள், பிறகு தாடி மீசையோடு பரிதாபமாகப் படம் காட்டுகிறார்கள், பிறகு பாலியல் குற்றம் சாட்டி மறுபடியும் அவரை மானபங்கப்படுத்துகிறார்கள். இதனைப் பார்த்த பிறகும் உணர்ச்சியின் உந்துதலோ மனச்சாட்சியின் உறுத்துதலோ இல்லாமல் பிக்பாஸில் யார் வெளியேறப்போகிறார்கள் என்பதில் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் உங்களை என்னவென்று சொல்வது ஆனால் நீங்களும் நானும் இந்தியன், வாய்கிழியப் பேசுகிற தமிழன்.

‘சுதேசியாய் இரு சுதேசப்பொருட்களை வாங்கு’ என ஆர்ப்பரித்தவர் நம் தேசப்பிதா காந்தி அதாவது இந்தியனாய் இரு. இந்தியப்பொருட்களை வாங்கு என்று சொன்னார் அதன்படியே வாழ்ந்தும் காட்டினார். ஆகவே இந்தியப் பொருளான கதர் ஆடையை அணிந்து அன்று வாழ்ந்தும் காட்டினார். அந்நியப் பொருட்களை அகற்றி வாழ்ந்ததால் அரை நிர்வாணமாகவே காலம் முழுவதும் கழித்து வந்தார். அவரது பாதையில் பயணிக்க அந்நியப்பொருட்களை அகற்றிவிட்டு நாம் இன்று வாழ்ந்தோமென்றால் முழு நிர்வாணமாய்த்தான் வீதியில் உலவ வேண்டி இருக்கும் … சே… சே… நினைத்துப்பார்க்கவே அசிங்கமாக இருக்கிறது.

சுதந்திர இந்தியாவிற்கு முழுவடிவம் கொடுத்தவர் சர்தார் வல்லபாய் படேல் பல்வேறு சாம்ராச்சியங்களை இணைத்து இந்தியா என்ற கலைத்தாயை ஒரு துணைக்கண்டமாகவே தூக்கி நிறுத்தினார். அவரை கல்லா(சிலை)க்கி அழகுபார்த்தோம். சரி ஆனால் அவரது கொள்கையையும் கல்லாக்கிவிட்டோமே இந்தக் கோமாளித்தனத்தை என்னவென்று சொல்வது? ஓன்றுபட்ட இந்தியாவிற்குள் காவேரித்தண்ணீருக்காகக் கர்நாடகாவோடு கட்டி உருளுகிறோம். முல்லைப் பெரியாருக்காய் கேரளாவோடு முட்டிமோதுகிறோம். தெலுங்கானச் சண்டை தெருச்சண்டையாகிவிட்டது. ஜம்மு காஸ்மீர் அந்நிய தேசமாக அரட்டுகிறது. பாகிஸ்தான் பதுங்கு குழியில் நம் பக்கத்திலே படுத்திருக்கிறது. சீனா அவ்வப்போது சேட்டை செய்கிறது. இலங்கை இந்தியாவை அழிக்கத்துடிக்கும் எதிரிகளுக்கு வாடகைக்கு இடம் கொடுத்து வாய்ப்பளிக்கிறது. இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இந்தியாவிற்குள் வட இந்தியன், தென் இந்தியன் என வடமிழுத்து விளையாடும் கோமாளி விளையாட்டும் குதுகலமாக நடக்கிறது.

மத்தியஅரசு நாட்டை சர்க்கஸ் கூடாரமாக்கி மாநில அரசுகளை கோமாளியாக்கி பாரத மக்களை பார்வையாளராக்கி நாம் சிரிப்பதற்குப் பதிலாக உலகமே நம்மைப்பார்த்து சிரிப்பாய் சிரிக்கிறது. பாரத மாதா நிர்வாணமாக நிற்கிறாள்! என்று பரிதாபப்பட்டது போதும் நீ நிர்வாணமாகத்தான் நிற்கிறாய் நிர்கதியாய் அலைகிறாய் மறந்துவிடாதே இனியும் பாரத மாதாவுக்கு ஜே என்றால் பார்ப்பவர்கள் நம்மை பச்சோந்திகள் என்று சொல்லிவிடக்கூடாதல்லவா!

எனவே எதிர்வரும் சுதந்திர தினத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்? ஆங்கிலேயர்கள் போய்விட்டார்கள். ஆனால் ஆங்கிலம்? தேவைக்கு வைத்துக்கொள்ளலாம் கட்டாயமாக்க வேண்டுமா? நம் கருத்தளவில் மதங்களை வளர்க்க ஆசைப்படுபவர்களே இலக்கியங்கள் தானே இறைவனைத்தந்தது அதனை இழந்துவிட்டோமே மாணவர்கள் தமிழில் இருந்து தடுக்கி விழுந்து விட்டார்களே! இனியும் வ.உ.சிக்கும், காந்திக்கும், குமரனுக்கும், பாரதிக்கும், கட்டபொம்மனுக்கும் கல்லரைகளைச் ஜோடிப்பதைவிட இருக்கும் போராளிகளை இழந்துவிடக்கூடாதே! உலர்ந்த எலும்புகளுக்கு ஒத்தடம் கொடுப்பதைவிட இருப்பவர்கள் எலும்பாகமால் பார்த்துக்கொள்வோமே!

போராளிகள் எல்லாம் ஏமாளிகள் அல்ல அவர்கள் தான் சமூகக் காவலர்கள் என வருகின்ற தலைமுறைக்கு பாடமாய்ச் சொல்வோம். வெள்ளையர்களை விரட்டியது போதும் நமது கொள்ளையர்களைத் துரத்துவோம். ஆங்கிலேயர்கள் ஆளும்போது எங்கேயாவது அண்ணா விட்டுடு அண்ணா என்று அலறல் சத்தம்கேட்டதா? இப்போது கோவை, பொள்ளாச்சி என்று தமிழகம் முழுவதும் கொந்தளிக்கிறதே அது உங்கள் செவிகளை கிழிக்கவில்லையா? இல்லை தமிழ்நாடே செவிடாகிவிட்டதா? மதுக்கடையை மூட காந்தி நடத்திய போராட்டத்தில் இன்றைய சமுதாயம் கடையை மூடுவதை விட்டுவிட்டு காந்தி சிலையை மூடவேண்டிய கட்டாயத்திற்கு வந்துவிட்டதே இந்தக் கருமத்தை என்னவென்று சொல்ல வரும் சுதந்திரநாளில் தியாகிகளை வணங்குவோம் போராளிகளைக் காப்பாற்றுவோம் போராடவீதிக்கு வருவோம்.

அக்கிரமங்களை கண்டு கொதித்தெழுவோம் அதற்காக உயிர்துறப்போம். ரௌத்திரம் பழகுவோம் சரியெனப்படுவதை சரியாய் செய்வோம். நம் தலைவைர்களை நாமே தேடுவோம் பணத்தில் அல்ல அவர்கள் குணத்தில் பணத்தோடு வருபவர்களை தெருவோடு விரட்டுவோம். குணத்தோடு வருபவர்களை கோலோச்சச் செய்வோம். விவசாயத்தைக்காப்போம் விவசாயிகளையும் சுற்றுப்புறச் சூழல்களையும், சுற்றுயிருப்பவர்களையும் காப்போம். இனியும் நம் கரங்கள் ஏந்தும் கரங்கள் அல்ல, தாங்கும் கரங்கள்! உழைக்கும் கரங்கள்! கொடுக்கும் கரங்கள் இத்தகைய கரங்கள் இருந்தால் ஏற்றுங்கள் தேசியக்கொடியை! எனது கம்பீரமான வணக்கம். கொடிக்கு மட்டுமல்ல கொடியை ஏற்றும் உங்கள் கரங்களுக்கும்.