மழை வருது! மழை வருது!

மழை வருது! மழை வருது!

மழை வருது! மழை வருது!

அக்டோபர் மாதம் வந்துவிட்டால் அனைவரும் மழையை எதிர்பார்ப்போம். ஏனென்றால் மழை என்றவுடன் மனதிற்குள் ஒரு மகிழ்ச்சிவரும், மழையை எதிர்பார்ப்பது விவசாயிகள் மட்டுமல்ல, குழந்தைகளும்தான், விவசாயிகள் மழையை விவசாயத்திற்கு எதிர்பார்க்கிறார்கள் என்றால் குழந்தைகள் விளையாடுவதற்கு எதிர்பார்ப்பார்கள்.

மழை என்றால் மகிழ்ச்சிவரும், மழை என்றால் கவிதைவரும், நிலங்கள் பசுமையாகும், நினைவுகள் பசுமையாகும், காகிதக்கப்பல் மிதக்கும், ஆறு குளத்தில் நீச்சல் அடித்து மகிழ்வார்கள். அந்த காலங்களில் வெயிலின் தாக்கம்குறைவாக இருக்கும், காளான்கள் முளைக்கும் ஈசல்கள் பறக்கும் தைலான் குருவி பிடிக்க, காளான் பொறுக்க சிறுவர்கள காட்டில் சுற்றிக்கொண்டு இருப்பார்கள்.

இதெல்லாம் இப்போது எங்கே போனது? இப்போது உள்ள சிறுவர்களுக்கு இவற்றையெல்லாம் சொன்னால் புரியுமா? தொலைவில் இருந்தால் தொடர்ந்து முயற்சிக்கலாம் தொலைத்துவிட்டால் தேடி எடுக்கலாம் ஆனால் இப்போது நடப்பது என்ன?

மழைவரப்போகிறது தொலைக்காட்சியில் அறிவிக்கத்துவங்கியுடன் பயம்வருகிறது என்ன நடக்குமோ? எங்கு நடக்குமா? எப்படி நடக்குமோ? என்ற அச்சம் மேலிடுகிறது. ஏன்?

ரெட் அலர்ட் அறிவிக்கப்படுகிறது, மீனவர்கள் கடலுக்குச்செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. புயலைக் கொண்டு மிரட்டிய வானிலை இப்போது சுனாமியாய் சுற்றுகிறது. காற்று, புயல், சுனாமி என இயற்கையே நமக்கு எதிராய் எழுந்ததுபோல மானிடச் சமுதாயம் அச்சப்படுகிறது. கேரளா கிடுகிடுத்தது. இந்தோனேசியா இடமாறியது. சென்னை மிதந்தது, இவையெல்லாம் எச்சரிக்கைதான் இன்னும் இறுதிச்சுற்று எப்போது ஆரம்பிக்கப்போகிறதோ என்ற எச்சரிக்கை மணி எல்லோருடைய மனதிலும் எப்போதும் அடித்துக்கொண்டேதான் இருக்கிறது.

இதற்கெல்லாம் யார் காரணம்? உலகின் போக்கில் விட்டுவிட்டால் ஒவ்வொருவரும் மற்றவர்களைக் குறை கூறுவதை வாடிக்கையாக்கிவிட்டோம். கட்சிகள் பிற கட்சிகiயும், துறைகள் பிற துறைகளையும், ஒருவர் மற்றவரையும் எளிதில் குற்றம் சுமத்திவிட்டு எளிதில் தப்பித்துக்கொள்கிறோம். இதனால் நாம் இயற்கையோடு மாட்டிக்கொண்டு ஒரே நாளில் அத்தனையும் இழந்து வீதிக்கு வருகிறோம்.

கேரளாவில் ஒரு நடிகரின் தாய் நான் வைத்திருக்கிற காருக்கு ரோடு சரியில்லை என்று சொன்னவர் மழையின் போது தன் சொந்த வீட்டுக்குள் செல்ல முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார்.

அரண்மனை வீடுகள், அலங்காரப் பொருள்கள், அழகுசாதனங்கள், ஆடம்பரப்பொருட்கள். வியாபாரப் பொருட்கள், விளைதானியங்கள் என அனைத்தும் ஒரே இரவில் மண்ணால், மழைத்தண்ணீரால் மூழ்கடிக்கப்படுகிறது.

நேற்றுவரை அரசனாய் இருந்தவர் தன் தேவைக்குக்கூடப் பிச்சையெடுக்கும்; நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுகிறார், எவர் உதவியும் தேவையில்லை என நினைத்தவர்களுக்கெல்லாம் தனக்கு யாராவது உதவமாட்டார்களா? என கையேந்தும் பரிதாப நிலைக்குத்தள்ளப்படுகிறார்கள். இவையெல்லாம் நமக்குச்சொல்லும் பாடங்கள் என்ன?

நாம் ஏன் இந்த நிலைக்குத்தள்ளப்படுகிறோம் என்றால் ஒரு நிமிடம் சிந்தித்துப்பார்த்தால் நமது பேராசை மட்டுமே. காரணமாக இருக்கும்.

இப்போது வாழுகின்ற மனிதர்களிடத்தில் வந்து ஒட்டியிருக்கிற அபாயகரமான ஒன்று பேராசை, இதன் காரணமாகக் குறுக்கு வழியில் முன்னேறத்துடிக்கிறார்கள், ஆடம்பரத்தால் வயிறு வளர்க்க நினைக்கிறார்கள். இதனால் போட்டி, பொறாமை, இலஞ்சம், அபகரித்தல், கந்துவட்டி, வழிப்பறி, கூலிப்படை, குட்கா ஊழல், தரமற்ற பொருட்கள் தயாரிப்பு, ஏமாற்றுதல், போலிநடிப்பு, கபடநாடகம், நாளும் ஒரு நடிப்பு, புறம் பேசுதல், காட்டிகொடுத்தல், குழிபறித்தல், குறைகூறுதல், பழிசுமத்துதல், நேர்மையைமட்டுமல்ல நேர்மையாளர்களையும் ஒழித்தல், பொய்சாட்சி கூறுதல், பழிசுமத்துதல் பழிவாங்குதல், சர்வசாதரணமாக நடைபெறும் அன்றாடச் சடங்குகளாகிவிட்டன. இப்போது நேர்மையாய் நடப்பது தேசியக் குற்றமாகிவிட்டது. நேர்மையாளராக நடப்பது தண்டிக்கப்படவேண்டிய குற்றமாகிவிட்டது.

இதே நிலை இன்னும் சிறிதுகாலம் நீடித்தால் இந்தப்பூமி தாங்காது. அது அழிய ஆயத்தமாகிவிட்டது. இதற்குத்தண்டணைதான் இயற்கையின் சீற்றம் இவைதான் இறைவனின் ஆட்டம். இந்நேரத்தில் தான் சேமித்து வைத்திருந்தவர்களெல்லாம்; சிதறடிக்கடிக்கப்படுவார்கள். மூன்றாவது உலகப்போர் இப்பூமிக்கு ஒரு முடிவைக்கொண்டுவரும் என்றார்கள். ஆம் வரும்.

ஆனால் அவை முதல் இரண்டு உலகப்போரைப் போலல்ல, இயற்கையைக் கொன்றோம் அல்லவா அவை நம்மைப் பழிவாங்க இப்போது படையெடுக்கிறது. புறம்போக்கை ஆக்கிரமித்தோம் அல்லவா! அதனை அபகரிக்க வருகிறது. பணத்தின் பெருக்கத்தை கட்டிடங்களாகப் பூமியின் முதுகில் ஏற்றினோமல்லவா! அதனை இறக்கி வைக்கப் பூகம்பமாய் வருகிறது.

ஆகவே சிந்திப்போம். சேகரிக்காதவர்கள், இல்லாதவர்கள் இழப்பதற்கு எதுவுமில்லை, பேராசை இல்லை என்றால் பெருநஷ்டம் எதுவுமில்லை. இயற்கையிடம் இழப்பதைவிட இல்லாதவர்களுக்குக் கொடுப்போம் எப்போதும் பிறரது உதவி தேவைப்படும் என நினைத்து இப்போது நாம் உதவுவோமே. இயற்கை வாழ்வுக்குத் திரும்புவோம். இயற்கையை விரும்புவோம். இயற்கையை காப்போம் இயற்கை நம்மை காப்பாற்றும்.