மாடி வீட்டு ஏழை

மாடி வீட்டு ஏழை

டிசம்பர் பூக்கள் மலர்ந்தவுடன் திருவருகைக்காலம் நம்மை தேடி வந்துவிட்டது என்பது ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் தெரிந்த ஒன்றுதான். கிறிஸ்மஸ் என்பது இறைவன் நம்மைத்தேடி வருவது. ஆனால் கிறிஸ்தவர்கள் புரிந்து கொண்டது நாம் இறைவனைத் தேடி அலைவது அதற்கு நட்சத்திரம் வழிகாட்டுவது என்பது.

நாம் இறைவனைத் தேடிச்செல்வதும் இறைவன் நம்மைத் தேடி வருவதுதான் இந்த டிசம்பர் பயணம். ஆனால் இறைவனும் நாமும் ஒரே நேர்கோட்டில் பயணித்தால் மட்டுமே இருவரும் சந்தித்துக்கொள்வோம். திக்குத் தெரியமால் திசைதெரியமால் இன்றுவரை இறைவனைத் தேடி அலைந்து வாழ்நாள் முழுவதும் வழிப்போக்கனாய் திரியும் அர்த்தமற்ற கூட்டத்தில் நாமும் ஒருவராய் அலைந்து கொண்டிருக்காமல் உயிருள்ள கிறிஸ்துவை உண்மையிலே சந்திக்கும் உன்னத கிறிஸ்துமஸை இந்த ஆண்டு கொண்டாடுவோம்.

இறைவன் பூமிக்கு வந்ததே ஒரு புரட்சி பூமியில் மலர வேண்டும் என்பதுதான். இறைவன் என்பவன் ஒரு மாடிவீட்டு ஏழை அதாவது மாண்புடன் இருந்தவர் ஏழையாய்ப் பிறந்து மாடிவீட்டிலுள்ளவர்களையும் ஏழையின் குடிசைக்கு வரவழைத்து, இல்லாமையில் இருப்பவரை வல்லமை உள்ளவர்களாக எண்ணி வணங்கவைப்பது.

ஆகவே இறைவன் விடுத்த அழைப்பு எல்லோரும் குடிசையை நோக்கிச் செல்லுங்கள். அங்கு பிறந்திருக்கும் குழந்தையே அதாவது வறுமையில் இருக்கின்ற, ஆடையின்றி இருக்கின்ற, வீடின்றி இருக்கின்ற ஏழைக்குழந்தைகளே நவீன இயேசு கிறிஸ்து அதனைத் தேடிச்செல்லுங்கள். அங்குதான் நீங்கள் உண்மையான கிறிஸ்துவைக் கண்டறிவீர்கள். ஆனால் இன்றைய உலகில் கண்ணிருந்தும் குருடர்களாய், ஒளியிருந்தும் இருளுக்குள் தேடுகின்றவர்களாய் நாம் அலைந்து கொண்டு இருக்கிறோம். பிறரைத் தேடியும், பிறருக்காகத் தேடியும் பயணிக்கின்ற வாழ்வில் சுயநலம் நம்மைச்சூழ்ந்து கொண்டு தனக்காக என்று தேடித்திரியும் ஆன்மாவை அலையவிட்டு தன்னைத் தொலைத்துவிட்ட சமூகம் எங்கும் சமாதியாக இன்று காட்சியளிக்கிறது. இது எப்போது கோவிலாகப் போகிறது ?

குடும்பம் கோவிலாக வேண்டும். குடிசையில் தான் கோபுரம் தெரியவேண்டும். குப்பையென, பாரமென, பகட்டான மக்களால் தூக்கியெறிந்த ஒரு முத்தே இடையர்களின் இல்லத்தில் தெய்வமாக மலர்ந்தது. அவர்களது மாட்டுத்தொழுவமும் அவர்களது ஆடு, மாடுகள் அந்த இடையர்கள் இன்றளவும் இறைவனின் குடிலில் இடம்பெற்று இருக்கிறார்கள். இடையர்கள் இவ்வுலக மக்களால் புறக்கணிக்கப்பட்டு ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்டார்கள் அதுவே இறைவனுக்கு உகந்ததாக மாறியது.

எனவே ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்வோம். கிறிஸ்மஸ் என்பது குடிசையை நோக்கிப்பயணிப்பது கோயிலுக்குள் குப்பைகளைக் கொண்டு குடில் அமைப்பதல்ல. இது உள்ளம் குப்பையானவர்களின் உதவாத செயல். புற்களை வெட்டி வைக்கோலை எடுத்து இருக்கின்ற ஆலயத்திற்குள் குடிலை அமைத்து மூக்குப்போன சூசையப்பர், கை கழண்ட மரியாள், ஊனமுற்ற ஆடுகள் என அர்த்தமற்ற குடில்களைத் தயாரித்து ஆனந்தப்படாதீர்கள். உண்மையான கிறிஸ்து ஊருக்கு வெளியே யாரும் கவனிப்பாரற்றுக் கிடக்கிறார்கள்.

உத்திரபிரதேச மாநிலத்தில் சுவாசிக்கக் காற்று இன்றி 82 இயேசு கிறிஸ்துக்கள் இறந்தவிட்டார்கள் என செய்து கூறுகிறது. முறையற்ற உறவுகளின் இச்சைகளால் உருவாகிக் கருவாகி இச்சமூகம் ஏற்றுக்கொள்ளாமல் வேலிக்குள்ளும்;, குப்பைகளுக்குள்ளும் துடித்துக்கொண்டிருக்கும் குழந்தை இயேசுக்களை தேடிச்செல்லுங்கள். யாராவது நன்கொடை கொடுத்தால்தான் இனிய உணவைச் சுவைக்க முடியும் என எண்ணிக்கொண்டிருக்கின்ற அனாதைச் சிறுவர்களில் ஒருவராக இயேசு இருக்கிறார். அவரைத் தேடிச் செல்லுங்கள். வறுமையில் வாழும் பெற்றோருக்குப் பிறந்த குடிசைகள் கூனி குறுகிக்கிடக்கும் குழந்தைகளிடத்தில் இயேசு இருக்கிறார் அவரைத் தேடிச்செல்லுங்கள். மாடிவீட்டுச்சன்னலும், சட்டை அணிந்து கொண்டிருக்கும்போது சேரியில் நிர்வாணமாக இயேசு நின்று கொண்டிருக்கிறார் அங்கு செல்லுங்கள். எயிட்ஸ் நோயாளிகளின் குழந்தைகளாகப் பிறந்து பிறரால் வெறுத்து ஒதுக்கப்பட்டு கூனிக்குறுகி குடிசையில் படுத்துக்கிடக்கும் இயேசுவைப் பார்க்கச்செல்லுங்கள்.

விஞ்ஞான உலகில் பிறப்பது பெண் என்று தெரிந்தும், இரண்டுக்கு மேல் வேண்டாம் எனவும் கருவில் குழந்தையை கொல்லத் தேடுகின்ற பெற்றோர்களாகிய ஏரோதுவிடமிருந்து அந்த இளைய கிறிஸ்துவை மீட்டெடுக்க விரைந்து செல்லுங்கள் இதில் ஏதாவது ஒன்றைச் செய்தீர்கள் என்றால் அதுவே உண்மைக் கிறிஸ்மஸ். அவ்வாறு கொண்டாடுபவர்களே உண்மைக் கிறிஸ்தவர்கள்.

இதனைவிட்டுவிட்டு துணிக்கடையில் உங்களுக்கென்று துணிகளைத் தேடுவதும் கோயில்களில் குடில்களை அமைப்பதும், விதவிதமான பாடல்களை பாடுவதும், கலர்கலராக விளக்குகளை எரியவிடுவதும், பகட்டான ஆடை உடுத்தி அடுத்தவர்களை ஏளனமாகப் பார்ப்பவர்களும் இருக்கையில் முதல் இடத்தை தேடுகிறவர்களும் குடித்து கும்மாளமிடுபவர்களும், வெடிவெடித்து வேடிக்கை காட்டுகிறவர்கள் கிறிஸ்தவர்கள் என்று சொல்லும் கிறிஸ்துவை மறுத்தவர்கள் மறந்தவர்கள். இவர்களை இன்னும் எத்தனை இயேசு கிறிஸ்து வந்தாலும் மீட்டெடுக்க முடியாது.

ஆகவே உங்கள் கிறிஸ்மஸ் அர்த்தமுள்ளதாக மாறி இன்றே குடிசையை நோக்கிப் பயணியுங்;கள். ஸ்டார்களில் போடுகிற விளக்குகளை ஏழைகளி;ன் குடிசையில் போடுங்கள். அவர்களுக்கு அது வாழ்வைக்காட்டும், குடிசைகள் கோவிலாகட்டும். ஏழைகள் தெய்வங்களாகட்டும். இவர்களுக்குச் சேவை செய்வதன் மூலம் இறைவனுக்கே சேவை செய்வதாக எண்ணுவோம். விடியலை நோக்கி போவதற்காக வீதியை நோக்கிப் புறப்படுவோம். அதோ தெரிகிறது குடிசை. அங்குதான் என் இயேசு இருக்கிறார் வாருங்கள் வாழ்த்துவோம். வணங்குவோம் வாழக் கொடுப்போம், வாழ்வையும் கொடுப்போம்.