என் கனவு ஆசிரியர்

Teachers-Day

Teachers-Day

எங்கும் கல்வியில் புரட்சி, எத்துறையில் பார்த்தாலும் கல்வியில் வளர்ச்சி, புதிய பாடத்திட்டங்கள், புற்றீசல்போல் கல்வி நிறுவனங்கள், கோவணம் கட்டி வாழ்ந்த பாமரனின் பேரன் டை கட்டிக்கொண்டு ஆங்கிலம் பேசும் கண்கொள்ளாக்காட்சி, அன்னை முகம் பார்த்து கொஞ்சும் வார்த்தை கேட்கவேண்டிய குழந்தைகள் கூட ஆசிரியரிடம் தஞ்சம் புகுந்து மௌனமாகிப்போகும் மயானங்களான வகுப்பறைகள், வியர்வை சிந்த விளையாட்டு என்பதனை கற்றுக்கொடுக்கும் பள்ளிக்கூடங்கள் அவர்கள் தொலைக்காட்சியில் மட்டுமே காணவேண்டும் எனும் அளவிற்கு துரத்தப்படும் தனிப்படிப்பு, மாலைவகுப்பு, விடுமுறைக்காலங்களிலும் சிறப்பு வகுப்பு. இத்தனையும் வந்தபிறகு நாம் என்ன முன்னேறி இருக்கிறோம் என்றால் ஆசிரியன் என்ற முறையில் என்னையே நான் ஆய்வு செய்யும்போது அசோகன் கலிங்கப்போரில் அடைந்த வெற்றியும் அவன் உடையைப்பிடித்து உலுக்கிய மனச்சாட்சியும், அதனால் அவன் உடைந்து போன மனநிலையுமே என்னை உருட்டி எடுத்தது.

என்ன கற்றுக்கொடுக்கிறேன்? எதற்குக் கற்றுக்கொடுக்கிறேன்? யாருக்குக் கற்றுக்கொடுக்கிறேன்? எதற்காகக் கற்றுக்கொடுக்கிறேன்? பதிலே இல்லை ஏனென்றால் கேள்விகளைக் கேட்டும், கேள்வித்தாள்களை கொடுத்துமே என் வாயும், கையும் வகுப்பறையை ஆட்சிசெய்தது. அதையும் தாண்டி பதில் தேட எண்ணினால் ஒரு பைத்தியக்காரனைப்போல் தலையைப்பிய்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. நான் நினைத்ததைக் கற்றுக்கொடுக்க முடியவில்லை. நிர்வாகத்தின் நிர்ப்பந்தம், பெற்றோர்களின் வேண்டுகோள், பாடத்திட்டத்தின் கட்டாயம், மதிப்பெண்களின் அவசியம் இவற்றினால் என்னையும் மறந்து, மாணவர்களையும் தொலைத்து தடம்புரண்ட ரயிலாக நானும் இலக்கினை அடையாமல், மாணவர்களிடத்தில் இலட்சியங்களையும் உருவாக்க முடியாமல் தடுமாருவதாகவே பல நேரங்களில் உணர்கிறேன். ஆகவே எனக்குள் இருக்கும் ஒரு கனவு ஆசிரியரிடம் நானே சில கேள்விகளைப் பதிவு செய்தேன்.

இளைஞர்களை அதிகமாக கொண்டிருந்தாலும் இயலாமையே வளர்த்துக்கொள்கின்ற இந்த சமுதாயத்திற்கு என்ன கற்றுத்தர போகிறீர்கள், விளையாடத்தெரியாத, வேலை செய்ய மனமில்லாத வித்தியாசமான உலகம். தவறுகளை சரிசெய்யத்துடிக்கும் தறுதலை உலகம் இதனை எப்படித் தடம் காட்டப்போகிறீர்கள்.

குழந்தைகளை கைகட்டி வாய்பொத்தி இருக்கச்சொல்லிவிட்டு சுதந்திரத்தைச் சொல்லிக்கொடுக்கிறோம். வகுப்புக்கு வெளியே வானம் பார்த்தவனை வதைத்துவிட்டு பூமி உருண்டையில் உலகத்தைச் சுற்றிக்காண்பிக்கிறோம். சுதந்திரமாய் சுற்றித்திரிய வேண்டிய குழந்தைகளை ஆட்டோவிலும், பேருந்துகளிலும் அள்ளிவந்து வகுப்புச்சிறையில் வசமாய் பூட்டி வைக்கிறோம்.

ஆயுளுக்கும் பயன்படாத அல்ஜிப்ரா, விளங்காமல்போன வெக்டார் கால்குலேசன், வாழ்க்கைத்தடம் தெரியாமல் ரூட் த்ரி வேல்யு, வாய்ப்பாடு தெரியாமல் கால்குலேட்டரில் கணக்குத் தேடுபவனுக்கு ப்ராபபல்டி இதனையெல்லாம் கற்றுக்கொடுத்து எந்த இராமனுசரை உருவாக்கப்போகிறீர்கள். அரசர்களை கற்றுக்கொடுத்துவிட்டு அடிமையாக முட்டிபோட வைத்திருக்கிறோம். எலிகளை அறுக்கச்சொல்லி கொலைகாரணாக்குகிறீர்கள். செடிகளுக்கு லத்தின் பெயர்களை வைத்து அவனைப் புலம்ப விடுகிறீர்கள்.

போதும் என் ஆசிரியத் தெய்வமே அவனிடம் கேளுங்கள் எதனைப் படிக்க விரும்புகிறீர்கள் என்று கற்றல் அவனிடமிருந்து வரட்டும் ஒழுக்கம் உங்களிடமிருந்து போகட்டும் ஒரு உன்னத உலகம் உருவாகும்.
ஆசிரியர்களே அவனது; மூளையோடு முட்டுவதை விட்டுவிட்டு இதயத்தோடு பேசுங்கள். அவன் அறிவுத்தீபத்தில் அகல்விளக்கேற்ற ஆசைப்படுங்கள். அவனிடம் வெளிப்படுவதை விசாலப்படுத்துங்கள். பிறப்பால் பிரிவினை வேண்டாம். அதில் பிழை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். திருக்குறளைத் தேடும் அவன் மனதை பித்தாகிரஸில் அவனைத் தொலைத்துவிடாதீர்கள். பில்கேட்ஸாக அவன் ப்ரியப்படும்போது தொல்காப்பியங்களைத் தூக்கி வைக்க தொந்தரவு செய்யாதீர்கள். பிள்ளைகள் பூக்கள், போதியுங்கள் புகுத்தாதீர்கள் அது வாடிவிடும் எல்லாம் மனப்பாடம் செய்ய அவன் ஏ.டி.எம் அல்ல. மதிப்பெண் எடுப்பதுதான் மகத்துவம் எனும் மனநிலையை மாற்றியமையுங்கள். திறமையுள்ளவனை உலகம் திரும்பிபார்க்கும் என்பதனைத் தெளிவுபடுத்துங்கள். வீட்டுப்பாடம் என்ற பெயரில் பரோல் கைதியாய் பள்ளியிலிருந்து அனுப்பாதீர்கள். வருத்தத்தோடு வந்து மகிழ்வோடு பிரியும் வகுப்பறைச் சூழலை மாற்றியமையுங்கள்.

பள்ளி துரத்தியவன் எடிசன், அவன் பாடமாகிவிட்டான். பாடப்புத்தகத்தை வாழ்க்கையில் சாக்ரடீஸ் படித்ததில்லை. ஆனால் சாக்ரடீசை படிக்காதவனில்லை. காமராஜர், மீத்தோவன், ஐன்ஸ்டின் இவர்கள் பள்ளிக்கு வரவில்லை. ஆனால் பாடமாகப் பள்ளிக்குள் வந்துவிட்டார்கள். ஞானம் பிறந்த மண் நம் மண், அவனை நதிபோல் அவன் போக்கில் விடுங்கள், உங்களது வெற்றிக்காய் அவனது வாழ்வில் அணைகட்டாதீர்கள், புத்தகத்தைப் புரட்டியவர்கள்கூட பல நேரங்களில் உலகத்தால் விரட்டப்பட்டிருக்கிறார்கள். உலகத்தை உணர்ந்தவர்கள் இன்றும் உயரத்தை அடைத்திருக்கிறார்கள். கம்பன், இளங்கோ, கண்ணதாசன் எங்கு படித்தார்கள். இன்று அவர்களைத்தானே படிக்கிறோம், சுய சிந்தனையில் சோறு சமைக்கச் சொல்லிக்;கொடுங்கள்.

வீரப்புருசர்களின் வாழ்க்கையையும், தியாகத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள், அதனை பாடமாய் நடத்தாதீர்கள், எல்லோருக்கும் எல்லாம் பொது என்று எண்ணத்தை வளர்த்துவிடுங்கள், கொடுக்கச்சொல்லுங்கள், பிறரைக் கெடுப்பதை நிறுத்தச் சொல்லுங்கள், மாணவர்கள் கல் அவர்களைச் சிலையாக்குங்கள், மாணவன் நதி, கடலில் சேருங்கள். அவன் தேவையை மட்டும் தேடச்சொல்லுங்கள். ஆசையை அப்புறப்படுத்தச் சொல்லுங்கள். ஆசிரியர் மாணவர் உறவு ஆயுள்வரை தொடருமளவு அவனிடத்தில் உங்கள் அன்பை அள்ளிக்கொடுங்கள்.

ஆசிரியர்களே உங்கள் அகராதியை மாற்றுங்கள். நாம் அடிக்கடி சொல்லும் வார்த்தை அவன் என்னிடம் படித்தவன் என்று அதனை அப்புறப்படுத்துங்கள். அவன் என்னைப்படித்தவன் என்று சொல்லுங்கள், அவனுக்கு நீங்கள்தான் பாடம், வடம், தடம், உலகம், தெய்வம் எல்லாமே. இந்த அற்புதமான உலகத்தை படைக்கும் இவ்வுலகப்பிரமன்;கள், பிதாமகன்களாகிய அத்தனை ஆசிரியர்களுக்கும் என் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.