பள்ளிக்கூடம்

பள்ளிக்கூடம்

பள்ளிக்கூடம்

ஜூன் மாதம் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது கல்விக்கூடம்தான் ஒருமாதம் சுற்றித்திரிந்த மழலைகள் தங்கள் எதிர்காலம் கருதி பெற்றோர்களின் கடின உழைப்போடும், உழைத்த பணத்தோடும் நான்கு சுவத்திற்குள் தன்னையே அடைத்துக்கொள்ளும் நவீனபுரட்சி இது. பல்வேறு நிலைகளில் விமர்சனத்திற்கு உட்பட்ட தமிழகஅரசு கல்வித்துறையில் ஓரளவு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பதும் மறுப்பதற்கில்லை.

நன்கு படித்த மாணவர்களைத் தேடி எடுத்து வந்து உணர்வுகளைக் கட்டுப்படுத்தி காயப்படுத்தி. மனன சக்திக்கு மட்டும் பயிற்சியளித்து முதல் மதிப்பெண் பெறவைத்து மாநிலத்திலே நாங்கள் தான் என மார்தட்டிக்கொள்ளும் பள்ளிகளுக்கு வியாபாரச் சந்தையில் விலை போகாத அளவிற்குப் பாசாங்குகளைப் பறைசாற்றவேண்டாம் என தமிழக அரசு கிரேடு சிஸ்டத்தைக் கொண்டுவந்தது உண்மையிலே கிரேட்தான்.

தேர்ச்சிகளையும், மதிப்பெண்களையும் அதிகப்படுத்தி கல்லாப்பெட்டியை பெரிதாக்கும் பள்ளிகளுக்கு இது ஒரு மரண அடி. ஏட்டுக்கல்வியை மட்டுமே படித்துவிட்டு நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாத ஏமாளிகளை அள்ளித்தரும் கல்விநிறுவனங்களுக்கு தற்காலிகத் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. அடுத்த புரட்சி 101 மாணவர்களுக்கு அரசுத்தேர்வு இதனைச் சற்று ஆழமாக உற்று நோக்கினால் இது ஒரு அருமையானதிட்டம். உளவியல் நோக்கில் பார்த்தால் இது உன்னதமான திட்டம்.

டீன் ஏஜ் மாணவர்கள் பத்தாம் வகுப்பில் படிக்கும்போது எப்போதும் கண்காணிப்பு வளையத்திற்குள்ளும் ஆசிரியரின் அரவணைப்பிற்குள்ளும் இருக்கும் மாணவன். 101 வரும்போது கண்டு கொள்ளாத நிலை வருகிறது அவன் தன்னைக் கவனிக்க வைக்க கல்வி உதவாதபோது கைகலப்பில் இறங்குகின்றான். நெறி பிறழ்வு மாணவனாகவே நிற்கின்றான். இது தடைசெய்யப்படலாம். அவனும் கவனிக்கப்படத்தக்கவனாகவே இருப்பான்.

பத்தாம்வகுப்பில் தீவிரப்படிப்பும் 101ல் கண்டுகொள்ளாத நிலையும், பின்பு 102 கடின பயிற்சியும், இது மாணவர்களை ஒருகோணத்தில் ஓடவிடாமல் தெரியவைத்துத் தெளியவைத்து அடிப்பது போல திருதிருவென விழிக்க வைக்கிறது.

மேல் வகுப்புகள் எடுக்கின்ற ஆசிரியப்பெருமக்கள் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அதிக அக்கரையும் கவனிப்பும் மேற்கொள்வது, 101 வகுப்பினை கண்டுகொள்ளாத நிலையும் வரும்போது ஒருவிதமான பாரபட்சத்தன்மை அங்கு பவனி வருகிறது.

ஒரு வேலையோ, சேவையோ செய்ய வேண்டுமென்றால் 101 மாணவர்களைக் கூப்பிடுங்கள் என்று சொல்வது அவர்கள்தான் சும்மா இருக்கிறார்கள் என்று சோம்பேறியாக்கி விடுகிறார்கள். அவர்களும் நாம் படிக்கும் பாடம் அவ்வளவு முக்கியமில்லை என்று எண்ணிக்கொள்கிறார்கள்.

இதனைவிடக் கொடுமை வியாபார நோக்கோடு பணம் சம்பாதிப்பதையேக் குறிக்கோளாகக் கொண்ட கல்விநிறுவனங்கள் 101 பாடங்களையே குழிதோண்டிப் புதைத்துவிட்டு 102 பாடங்களை மட்டும் இரண்டு ஆண்டுகளும் படிக்கவைத்து உயர்மதிப்பெண்கள் பெறத்துடிக்கும் உயிர்கொல்லிகள்! தங்கள் தயாரிப்பில் உருவாகிவரும் மாணவன் பிற தேர்வுகளைச் சந்திக்கும்போது மண்டியிட்டு மண்ணைக்கவ்வி வருகிறானே இது எவ்வளவு பெரிய மடத்தனம் என்பது புரியாமலே பிழைசெய்தவர்களுக்கு மரண அடி விழுந்துள்ளது.

இவர்கள் இரண்டு ஆண்டுகளில் ஒரு கண்ணை மறைத்துவிட்டு இன்னொரு கண்ணை உரித்து இன்னும் பிரகாசமாக மாற்றுவார்களாம் இது எவ்வளவு பெரிய பித்தலாட்டம் இதற்கெல்லாம் சவுக்கடி கொடுக்க இந்தப்புரட்சி தோன்றியுள்ளது.

மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களில் ஒருசிலர் ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைத்ததுபோன்ற நிலைமாறி. இரு கண்களையும் கண்போல காக்க வேண்டிய கடமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட புரட்சிகளை இக்கல்வித்துறை இக்கல்வியாண்டில் கண்டுள்ளது எனத்தெரிந்தாலும் இதுமட்டும் போதுமா? என்றால் உங்களுக்குள்ளும் எனக்குள்ளும் ஓராயிரம் கேள்விகள் எழும்பும். அதற்கு இக்கல்வித்துறையும், கல்வி நிறுவனமும் என்ன செய்யப்போகிறது.

நீட்தேர்வில் நம் மாணவர்கள் தடுமாறிக்கொண்டு இருக்கின்றார்கள் என்று எதற்குப் பயப்படுகிறோம். மருத்துவத்துறையில் எம்மாணவர்கள் சாதிக்க முடியாதோ என்பதால்தானே? மருத்துவத்துறைக்கும், பொறியியல் துறைக்கு மட்டும்தான் மாணவர்களை உருவாக்கி வருவது நமது கடமையா?

வெள்ளை மாளிகையில் விசிறிக்குக்கீழே வெள்ளைத்தாளை கிறுக்கிக்கொண்டு இருப்பது மட்டும்தான் உயர்கல்வியின் உன்னதம் உயிர்மூச்சு என்று கற்றுக்கொடுத்துவிட்டு கைநிறைய சம்பளம் பெற்றுக்கொள்ளப் போகிறீர்களே?

நாட்டை சற்று உற்றுப்பாருங்கள் இதற்கு நாம் என்ன செய்தோம்? என்ன செய்துகொண்டு இருக்கிறோம்? என்ன செய்யப்போகிறோம்.?

ஒரு நாட்டையும் சமூகத்தையும், சமூதாயத்தையும் உருவாக்குவது ஆசிரியப்பெருமக்கள் என்பது உண்மையானால்! சத்தியமானால்! இன்றைய நிலைக்கு என்ன செய்யப்போகிறீர்கள் ?

  1. விவசாயம் அழிந்துகொண்டிருக்கிறது. விவசாயி செத்துக்கொண்டிருக்கிறானே இதற்கு உங்கள் பதிலென்ன?

  2. பாலில் இருந்து கலப்படம் தொடங்கி இன்று உண்பதெல்லாம் விஷமாக வீங்கிக்கொண்டிருக்கிறதே இதற்கு என்ன காரணம்?

  3. மானிடச்சமுதாயத்தில் புரையோடிப்போன லஞ்சம் தலைவிரித்தாடுகிறதே இதனை எப்படித்தடுப்பது?

  4. நாட்டைக் காப்பாற்ற வேண்டிய அரசியில்வாதிகளும் அரசு அலுவலகங்களும் தன்னைமட்டும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தனிவழியில் பயணிக்கிறார்களே இவர்கள் யாரால் வந்தவர்கள்?

  5. ஜாதி, மதம் என்ற பெயரில் மனித வன்முறை வரைமுறை இல்லாமல் போய்விட்டது. இவன் இவன் இன்ன இன்ன சாதி என்று பள்ளியில்தானே புள்ளி வைத்து அனுப்புகிறீர்கள் இதற்கு யார் பதில் சொல்வது.?

வறுமை தாண்டவமாடுகிறது, பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனை மாற்றியமைக்க மனிதாபிமானம் கொண்ட தலைவர்களை உருவாக்கி இருக்கிறீர்களா?

கேள்விகளையே கேட்டுப் பழகின ஆசிரியச் சமூகமே, கல்விநிறுவனங்களே இதுபோன்று இன்னும் எத்தனையோ கேள்விகள் இருக்கிறது கண்டிப்பாகப் பதில் சொல்லியே ஆக வேண்டும் வார்த்தையால் அல்ல…. வருங்காலத்தால்…..